நான் உதயச்சந்திரன் ஆனது எப்படி?
1993-ம் வருட சிவில் சர்வீஸ் தேர்வுகளில் இந்திய அளவில் 38-வது ரேங்க் பிடித்தபோது உதயச்சந்திரனின் வயது 23. அந்தத் தேர்வுகளில் முதல் கட்டத்தைத் தாண்டவே தமிழக மாணவர்கள் தவித்துத் திண்டாடிய வேளையில், முதல் முயற்சியிலேயே அந்த உயரம் தொட்ட உதயச்சந்திரனின் உழைப்பு அபாரமானது!
உன் இயல்பு உன்னை வடிவமைக்கும்!
''விகடன் விமர்சனம் படிச்சுட்டு படம் பார்க்க தியேட்டருக்குப் போற, தினமணி தலையங்கங்களைப்பத்தி விவாதிக்கிற மத்தியதர வர்க்கக் குடும்பத்தில் பிறந்தவன். நாமக்கல்தான் நான் பிறந்து வளர்ந்த ஊர். அப்பாவுக்கு பொதுஅறிவு ஆர்வம் ஜாஸ்தின்னா, அம்மாவுக்கு தமிழ் மொழியின் மீது காதல். ரெண்டு பேரும் பல விஷயங்களில் முரண்படுவாங்க. அந்த முரண் சுவைகளை ரசிச்சு வளர்ந்தேன். பள்ளியில் குமாரசாமின்னு ஒரு சார்தான் எனக்கு சரித்திரம், பூகோளம் பாடங்கள் எடுத்தார். வகுப்புக் குள் நுழைந்ததும் 'குப்தர்கள் காலம்'னு கரும்பலகையில் எழுதிட்டு, 'ராஜஸ்தான் முதல்வர் யார்?', 'கியூபாவின் அதிபர் யார்?'னு தினமும் சில பொதுஅறிவுக் கேள்விகளோடுதான் பாடங்களை ஆரம்பிப்பார். அவருக்காகவே பள்ளிப் பருவத்திலேயே நாளிதழ்களை வாசிக்கும் பழக்கம் வந்தது. அந்தப் பழக்கம் கல்லூரிக்குள் கால் வைக்கும்முன்னரே தி.ஜா., சுந்தர ராமசாமி போன்றோர்களைப் பரிச்சயப்படுத்தியது. பொது அறிவு, தமிழ், இலக்கியம்னு என்னைச் சுத்தி அமைஞ்ச சூழலை கல்லூரிப் பருவம் வரை அபாரமாக் கிரகிச்சுக்கிட்டேன்!''
உன் தேவை, உனக்கு வழங்கப்படும்!
உன் வருத்தங்களை வரலாறு ஆக்கு!
''என் அப்பா ஒரு வணிகர். நான் கல்லூரியில் சேரும் காலத்தில் அவர் வியாபாரத்தில் கொஞ்சம் சிரமப்பட்ட காலம். கல்லூரிக் கட்டணங்களைச் செலுத்த கல்விக் கடனுக்காக வங்கியை அணுகினோம். மதிப்பெண் அல்லாத சில காரணங்களைச் சொல்லி மறுத்துவிட்டார்கள். அந்த வலி இன்னமும் உள்ளுக்குள் இருக்கிறது. காலங்கள் கடந்து நான் ஈரோடு மாவட்ட ஆட்சிப் பணியில் இருந்த நேரம். மனுநீதி நாள் அன்று தன் மகனுக்கு கல்விக் கடன் வழங்கக் கோரும் விண்ணப்பத் துடன் வந்த ஒரு தாய், என்னைப் பார்த்ததும் ஓடி வந்து, 'ஐயா! என் மகன் நல்லா படிப்பான். ஆனா, கல்விக் கடன் கொடுக்க மாட்டேங்குறாங்க. என் மகன் வாழ்க்கை இப்போ உங்க கையிலதான்யா இருக்கு'ன்னு என் கால்ல விழுந்துட்டாங்க. அதிர்ச்சியின் உச்சத்தில் அந்த அம்மா என் காலில் விழுவதைத் தடுக்கிறேன். அந்த சங்கடச் சூழ்நிலையிலும் அந்த மகனின் உணர்ச்சி களை நான் கவனித்தேன். 'நல்லாப் படிக்கத்தான் முடியும். இதற்கு மேல் என்ன செய்ய முடியும்?' என்ற இயலாமையிலும், தன் படிப்புக்காகத் தன் தாய் இன்னொருவன் காலில் விழுவதைக் காணச் சகிக்க முடியாத வேதனையிலும் கண்ணீர் மறைத்து முகத்தை அந்தப் பக்கம் திருப்பிக்கொண்டான். மறுநாள் காலை அந்த மாணவனுக்கான கல்விக் கடனைப் பெற்றுக் கொடுத்தேன். அதன் பிறகு மாவட்டம் முழுக்கத் தொடர் முகாம்கள் நடத்தி, ஒரே வருடத்தில் 110 கோடி ரூபாய் அளவுக்கு கல்விக் கடன்களை வழங்கவைத்தோம். ஓர் இளைஞன் எதிர்கொள்ளும் எந்தத் துயரமும் அவன் தலைமுறையைத் தாண்டக் கூடாது. அதை மாற்றியமைப்பதற்கான முயற்சி களை ஒவ்வோர் இளைஞனும் அவனுடைய பொற்காலத் தில் சாதிக்க வேண்டும்!''
உன் கல்வி உன்னைக் கண்ணியமாக்க வேண்டும்!
''சிவில் சர்வீஸ் தேர்வுகளில் மானுடவியல்தான் (Anthropology) எனது விருப்பப் பாடம். விமர்சனப் பார்வைகொள்ளாமல் மனித மனங்களின் மென் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்படக் கற்றுக்கொடுப்பது மானுடவியல் பாடம். எந்தப் பெரிய செயலையும் சின்னச் சின்ன நடவடிக்கைகளாகப் பிரித்துக்கொண்டு வெற்றியைச் சாத்தியமாக்குவதுதான் இன்ஜினீயரிங் படிப்பின் அடிப்படைத் தத்துவம். மதுரையில் நான் ஆட்சியராகப் பணிபுரிந்தபோது, 10 வருடங்களாக நடைபெறாமல் இருந்த பாப்பாபட்டி, கீரிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களின் உள்ளாட்சித் தேர்தல் களை வெற்றிகரமாக அரங்கேற்ற உதவியது எனது கல்வி கற்றுக்கொடுத்த அந்த இரண்டு குணங்கள்தான். தேர்தல்கள் நடத்துவதற்கு எதிர்ப்பினைப் பதிவுசெய்த தரப்பினர் சார்பாக என்னைச் சந்திக்க வந்தார் செல்லக்கண்ணு. அவரி டம் எந்த விதத்திலும் சமரசத்துக்குப் பணிந்துவிடக் கூடாது என்ற உறுதியான உடல்மொழி தொனித்தது. 'வாங்க செல்லக்கண்ணு... நல்லா இருக்கீங்களா? நாலு தலைமுறைக்குப் பிறகு உங்க வீட்ல பெண் குழந்தை பிறந்திருக்காம்... பாப்பா நல்லா இருக்கா?' என்று கேட்டேன். அதைக் கொஞ்சமும் எதிர்பாராதவர், அதை மறுக்க முடியாதவர்... முன்தீர்மானிக்கப்பட்ட தன் உடல் மொழியைத் தளர்த்திக் கொள்ள வேண்டியதாயிற்று. அதன் பிறகு அவரைச் சம்மதிக்கவைப்பதில் எனக்கு எந்தச் சிக்கலும் எழவில்லை. தொடர் நிகழ்வுகள் அந்தத் தேர்தல்களைச் சாத்தியப் படுத்தின. உணர்ந்து கற்ற கல்வி தினசரி வாழ்க்கையில் நம் கைபிடித்தே நடக்கும்!''
(இவர் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்ததமைக்கு பெருமை கொள்கிறோம்)
13 Comentários:
//ஓர் இளைஞன் எதிர்கொள்ளும் எந்தத் துயரமும் அவன் தலைமுறையைத் தாண்டக் கூடாது. அதை மாற்றியமைப்பதற்கான முயற்சி களை ஒவ்வோர் இளைஞனும் அவனுடைய பொற்காலத் தில் சாதிக்க வேண்டும்!''//
to be noted , thanks for sharing
வாவ்... கிரேட்...
அருமையான பகிர்வு...
விகடனுக்கு நன்றி
மதுரையில் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்து கொண்டிருந்த போது இவருக்கு மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது, அந்நிலையிலும் கூட உடனடியாக மாணவிகள் இருவருக்கு கல்வி உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்துவிட்டு வந்தவர் என்பது நெகிழ்ச்சியான ஒரு செய்தி..
பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் தேர்தல் நடத்த அவர் துருப்புச் சீட்டாக பயன்படுத்தியது ஒரு தகவல்தான் என்பது சுவாரசியமான, கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியப் பாடம்..
மிகக் குறைந்த காலமே இங்கு பணி புரிந்தார் என்பதுதான் ஈரோடு மாவட்ட மனிதர்களின் குறை...
Super Post....
விகடனுக்கு நன்றி...
கல்வி கண்ணியமாக்கவேண்டும்... என்ன ஒரு வார்த்தை. கற்றவற்றை வாழ்வில் பின்பற்றவேண்டும்.... யாரும் செய்வதில்லை இன்று. தவறுகள் செய்வதற்காகவே புதிது புதிதாய் கற்கிறார்கள்...
பிரபாகர்...
பகிர்வுக்கு நன்றி.
குமாரசாமி ஆசிரியர் சிறந்தவர். நானும் அந்த பள்ளியில் தான் படித்தேன். இவரை அடையாளம் தெரியவில்லை என்பது தான் என் வருத்தம். :-((
பத்தாம் வகுப்பு வரை இவர் தமிழ் வழியில் தான் படித்தார் என்பது குமாரசாமி ஆசிரியர் இவருக்கு பாடம் எடுத்தவர் என்பதிலிருந்து புரிகிறது. அதையும் கட்டுரையில் சொல்லியிருக்கலாம்.
he is really great. He was Madurai collector for a while. The well known book fair at thamukkam ground was introduced by him in Madurai. It was very shocking when i read a news paepr column that he was transferred to Erode (He is very sincere and true to his duty that said it is easy to guess the reason behind the transfer :-()
பகிர்வுக்கு நன்றி.
நல்ல பகிர்வு. விகடனிலும் வாசித்தேன்.
திரு.உதயசந்திரன் என்றால் மதுரை மாவட்டத்தில் பாப்பாபட்டி,கீரிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஆதிக்க சாதி சக்திகளால் தடுக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தலை நடத்தியவர் என்று தான் அறிந்தேன்.
சகாயம் அவர்க்ளை தொடர்ந்து இவருடைய பணியும் எளிய மக்களுக்கு சென்றடயும் என நம்புவோம்.
இவரைபோல முயற்சித்தவர்களால்
தான் மானுடம் மெல்ல மெல்ல
தன்னை உயர்த்திக்கொண்டு
வந்துள்ளது.
வாழ்க வளமுடன்.
//விமர்சனப் பார்வைகொள்ளாமல் மனித மனங்களின் மென் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்படக் கற்றுக்கொடுப்பது மானுடவியல் பாடம். எந்தப் பெரிய செயலையும் சின்னச் சின்ன நடவடிக்கைகளாகப் பிரித்துக்கொண்டு வெற்றியைச் சாத்தியமாக்குவதுதான் இன்ஜினீயரிங் படிப்பின் அடிப்படைத் தத்துவம். மதுரையில் நான் ஆட்சியராகப் பணிபுரிந்தபோது, 10 வருடங்களாக நடைபெறாமல் இருந்த பாப்பாபட்டி, கீரிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களின் உள்ளாட்சித் தேர்தல் களை வெற்றிகரமாக அரங்கேற்ற உதவியது எனது கல்வி கற்றுக்கொடுத்த அந்த இரண்டு குணங்கள் தான். // - கற்றதைச் சரியாகப் பயன் படுத்தி வெற்றி கண்டவர். வாழ்க !
Post a Comment