Friday, January 8, 2010

காமராஜரை தெரியாது.... விஜய் தெரியும்!

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் இந்தியாவிலேயே முதன் முதலில் தனது சொத்துக்கணக்கை பகிரங்கமாக வெளியிட்டவர், நாமக்கல் மாவட்ட கலெக்டரான சகாயம்தான்! 'எளிமையானவர், மக்கள் எளிதில் சந்திக்கக் கூடியவர்' என்று சொல்லப்படும் சகாயத்தை சந்திக்க நாமக்கல் சென்றிருந்தோம்.

''அதிகாரிங்க யாருக்கும் தகவல் சொல்லாம சர்ப்ரைஸா சில இடங்களுக்கு நீங்க விசிட் போனா நல்லா இருக்குமே சார்...'' என்று நாம் சொல்ல... சற்றே யோசித்தவர்... ''அவ்வப்போது செய்வதுதான். வாங்களேன், இப்பவும் போய்ப் பார்க்கலாம்!'' என்று தயாரானார். அடுத்த சில நிமிடங்களில் கலெக்டர் சகாயம், அவரது உதவியாளர் மாதேஸ்வரனுடன் கார் கிளம்பியது. நாமும்தான் இலவச இணைப்பாக! ''எங்கே முதல்ல போகலாம்..? நீங்களே சொல்லுங்க...'' என்று கலெக்டர் கேட்டதும், நமக்கிருந்த சில தகவல் அடிப்படையில் ராசிபுரம் செல்லும் ரூட்டில் போகச் சொன்னோம்.

வழியில் 85.குமாரபாளையம் என்ற ஒரு குக்கிராமத்தில் வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை நடந்து கொண்டிருந்தது. அங்கு காரை நிறுத்தச் சொல்லி இறங்கிய கலெக்டர், வேலை செய்தவர்களிடம், ''நான்தான் உங்க மாவட்டத்தோட கலெக்டர் சகாயம். உங்களுக்கு இங்க கூலியெல்லாம் சரியா கொடுக்குறாங்களா..?'' என்று விசாரித்தார். ''அதெல்லாம் சரியா கொடுத்துடுறாங்க சாமி... ரேஷன் கடையில அரிசி, பருப்புதான் சரியா கிடைக்கலை!'' என்று வயதான பாட்டி ஒருவர் சொல்ல... அவரிடம், ''ஏம்மா... இந்த வயசுல நீ எதுக்கு வேலைக்கு வர்ற..? உன் பசங்க எல்லாம் என்ன பண்றாங்க..?'' என்று பரிவோடு விசாரித்தார்.

''மூணு பசங்க சாமி... வயசான காலத்துல யாரும் கண்டுக்க மாட்டேங்குறாங்க. இப்படி ஏதாவது வேலைக்கு வந்து நாலு காசு சம்பாதிச்சாதான் கஞ்சி குடிக்க முடியும்!'' என்று பாட்டி புலம்ப... ''பெத்தவங்களைக் கண்டுக்காமத் தவிக்கவிடுற பசங்களை ஜெயில்ல போடுறதுக்குக்கூட இப்போ சட்டம் இருக்கு. உன் பசங்களை ஜெயிலுக்கு அனுப்பிட லாமா, சொல்லுங்க...'' என்றார். பதறிப்போன பாட்டி, ''வேணாம் சாமி... அவனுங்க நல்லபடியா பொழைக்கட்டும். இருக்குற வரைக்கும் ஏதோ உழைச்சு, கஞ்சியோ கூழோ குடிச்சுக்கிறேன்! ரேஷன் கடையில அரிசி, பருப்பு மட்டும் போடச் சொல்லுங்க, போதும்!'' என்று கேட்டுக் கொண்டார்.

செல்போனை எடுத்த சகாயம், மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரிக்கு போனை போட்டார். ''ராசிபுரம் பக்கத்துல 85.குமாரபாளையம்ங்குற கிராமத்துல ரேஷன் பொருள் எதுவும் சரியா கிடைக்கிறதில்லையாமே! நீங்க உடனே அந்தக் கிராமத்துக்குப் போய் அங்கே என்ன நடக்குதுன்னு வாட்ச் பண்ணி சாயந்திரத்துக்குள் ரிப்போர்ட் கொடுங்க!'' என்று உத்தரவிட்டவர், அங்கிருந்த பதிவேட்டை சரிபார்த்துவிட்டுக் கிளம்பினார்.

வழியில் ஒரு பிரிவு ரோடு வர, அந்த வழியில் காரை விடச் சொன்னார் கலெக்டர். 'ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பொ.கல்பாளையம்' என ஒரு போர்டு தெரிய, அந்த ஸ்கூலுக்கு போனார். கலெக்டரின் காரைப் பார்த்ததும் பள்ளியின் தலைமையாசிரியர் மிரண்டு விட்டார்!


''எல்லோரும் போய் அவங்கவங்க வேலையைப் பாருங்க...'' என்று சொல்லிவிட்டு, 6-ம் வகுப்புக்குள் நுழைந்தார் சகாயம். ஒரு மாணவனை எழுப்பி ஆங்கிலப் புத்தகத்தில் ஒரு பத்தியை வாசிக்கச் சொன்னார். அந்த மாணவன் தடுமாற... அடுத்த மாணவனை படிக்கச் சொன்னார். அவனும் தடுமாறினான். ''இந்த வகுப்புக்கு இங்கிலீஷ் எடுக்குற டீச்சரை வரச் சொல்லுங்க!'' என்று சொல்லியனுப்ப... ஆங்கில ஆசிரியர் பயந்தபடியே வந்து நின்றார். ''உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சா சார்..? எத்தனை குழந்தைங்க..?'' என்று கலெக்டர் கேட்க, ''ஆகிடுச்சு சார்... ரெண்டு குழந்தைங்க..'' என்று சொன்னார். ''எங்க படிக்கிறாங்க..?'' என்று கலெக்டர் கேட்க, ஒரு தனியார் பள்ளியின் பெயரைச்சொன்னார்.

''நீங்க இப்படி பாடம் சொல்லிக் கொடுத்தா... நாளைக்கு இந்தக் குழந்தைங்க படிச்சுட்டு வரும்போது, டவுன்ல படிச்சு வர்ற உங்க குழந்தைங் களோட எப்படி போட்டி போட முடியும், சொல்லுங்க..? கொஞ்சமாவது அக்கறையோட சொல்லிக் கொடுங்க சார். மறுபடியும் எப்ப வேணும்னாலும் ஸ்கூலுக்கு வருவேன். அப்போ இவங்க ஆங்கி லத்தை தெளிவா படிக்கணும். இல்லைன்னா, உங்க மேல நடவடிக்கை எடுக்கவேண்டியிருக்கும்!'' என எச்சரித் தார்.
அடுத்து மூன்றாம் வகுப்புக்குள் நுழைந்தவர், அங்கிருந்த குழந்தைகளைப் பார்த்து, ''சுபாஷ் சந்திரபோஸ் யாருன்னு சொல்லுங்க பார்க்கலாம்...'' என்று கேட்க... யாருக்குமே தெரியவில்லை. ''காமராஜர் யாரு தெரியுமா..?'' என்று அடுத்த கேள்வியை வீச... அதற்கும் ம்ஹ¨ம்! ''விஜய் தெரியுமா..?'' என்று கேட்டதுதான் தாமதம்... ஒரு பையன் எழுந்து, ''சார், விஜய் சினிமாவுல நடிக்கிறாரு. இப்போ 'வேட்டைக்காரன்'ல நடிச்சிருக்காரு!'' என்று சொல்லவும், கலெக்டர் சிரித்து விட்டார். அந்த வகுப்பு ஆசிரியரைக் கூப்பிட்டு, ''கிளாஸ் ரூம்ல தலைவர்களோட படங்களை மாட்டி வையுங்க. 'அவங்க யாரு..? என்னவெல்லாம் செஞ்சாங்க'ன்னு சொல்லிக் கொடுங்க. அவங்கதானே நம்ம நாட்டின் நிஜமான ஹீரோக்கள்!'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.


அடுத்து, ராசிபுரம் நோக்கி கார் பறந்தது. புது பஸ் ஸ்டாண்டுக்கு அருகில் ஒன்வேயில் கார் போகும்போது, எதிரில் தனியார் பேருந்து ஒன்று அதிவேகத்தில் வந்தது. காரை நிறுத்தச் சொல்லி அந்த பேருந்தை வழிமறித்தார் கலெக்டர். பஸ்ஸுக்குள் ஏறிய கலெக்டர், ''நோ என்ட்ரியில எதுக்கு தம்பி இவ்வளவு வேகமா ஓட்டிக்கிட்டு வர்ற..? எதிர்ல வர்றவங்க கதி என்னாகுறது? உன் டிரைவிங் லைசென்ஸை எடு..?'' என்று கலெக்டர் கேட்கவும், ஆடிப்போனார் பஸ் டிரைவர்.
''சார் லேட்டாயிடுச்சு. அதான் வந்துட்டேன். மன்னிச் சிடுங்க சார்... டிரைவிங் லைசென்ஸ் வீட்டுல இருக்கு...'' என்று மென்று முழுங்கினார். போனை எடுத்த கலெக்டர், வட்டார போக்குவரத்து அலுவலரை கூப்பிட்டார். அடுத்த பத்து நிமிடத்தில் அவர் வந்து சேர, ''இந்த பஸ் ஓவர் ஸ்பீடு. நோ என்ட்ரியில வந்திருக்கு. இவருகிட்ட லைசென்ஸ் இல்ல. உடனே ஃபைன் போடுங்க...'' என்று உத்தரவு போட்டார்.
ரவுண்ட்-அப்பை முடித்துக்கொண்டு கிளம்பும்போது கலெக்டர் நம்மிடம், ''பொது மக்களோட குறைகளை தீர்த்துவைக்கத்தான் நான் இங்கே இருக்கேன். என்னை எந்த நேரத்திலும் மக்கள் சந்திக்கலாம். நேர்ல வரணுங்குற அவசியம்கூட இல்ல. என் னோட செல் நம்பருக்கு (9444163000) ஒரு போனோ மெஸேஜோ போதும். கண்டிப்பா நடவடிக்கை எடுப்பேன்!'' என்று சொல்லி நமக்கு விடை கொடுத்தார்.
அயராமல் உழைத்துக்கொண்டே இருக்கும் முதல்வருக்கு ஈடுகொடுக்க, இப்படி அயராமல் ஓடி நேரில் மக்களைச் சந்திக்க இன்னும் நிறைய அதிகாரிகள் முன்வர வேண்டும்.
- கே.ராஜாதிருவேங்கடம்
படங்கள்: எம்.விஜயகுமார்

________________________

23 Comentários:

vasu balaji said...

நாமக்கல் மக்கள் கொடுத்து வெச்சவங்க.பகிர்தலுக்கு நன்றி

ஈரோடு கதிர் said...

ஜூனியர் விகடனுக்கு நன்றிகள்

நல்ல அதிகாரிகள் பற்றிய தகவல் இதுபோல் நிறைய வரவேண்டும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

பகிர்தலுக்கு நன்றி

prabhu bharathi said...

supero super he is the real hero

வால்பையன் said...

மக்கள் ஜூனியர் விகடன் வாங்கும் செலவு மிச்சம்!

வரலாறோ, புவியியலோ மனிதனுக்கு சர்வைவல் முக்கியம், வரலாறு தெரிஞ்சு ஒரு முட்டை கூட வாங்க முடியாது!

கிரி said...

எவ்வளவு மரியாதையான பவர் ஃபுல்லான பதவி.. இதை வைத்து எவ்வளவு நல்லது பண்ணலாம்.. இவர் மாதிரி கொஞ்சம் பேர் இருந்தா கூட போதும்

butterfly Surya said...

நிஜமான அரசு ஊழியர்.

பகிர்தலுக்கு நன்றி.

குடந்தை அன்புமணி said...

தன் கடமையை உணர்ந்து, தன் பதவியைக் கொண்டு ஊருக்கு நல்லது செய்யும் அந்த அதிகாரியைப் போல் ஊருக்கு நாலு பேர் இருந்தாலே போதும். ஊரு உருப்படும். வாழ்க அவரது சந்ததியரும்.

அன்புடன் அருணா said...

ஆஹா....இப்பிடியல்லவா இருக்கவேண்டும் அதிகாரிகள்!

ஆரூரன் விசுவநாதன் said...

good....very good......keep it up kadir....do share articles like this..

*இயற்கை ராஜி* said...

mmm..nalla officer..nalla sharing:-)

க.பாலாசி said...

அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யாத இவரல்லவா மனிதர்.

cheena (சீனா) said...

அன்பின் கதிர்

இதுக்கு நேத்தே ஒரு மறுமொழி போட்டேனா - போட்டதா நினைவு

இப்பல்லாம் இவரப் பத்தி நெரெய செய்தி வருதே

அரசு கவனிக்குமே

ம்ம்ம் நல்வாழ்த்துகள் கதிர்

மதார் said...

gud news keep it up

vasan said...

The deserving Honarable Sakayam IAS has to look for sure a TRANSFER soon (as usual), because NOW doing/being GOOD is a BIG CRIME. PAYIKAL ARASALA, PENAM THINNUM SATHIRANGAL.
We are very proud to see such a REAL HERO, but our younger generation follows the REEL Heroes.
The nation`s all wealth/resources are shared/swindled by the POLITICIANS/POWER PROKERS in many methods (Mines, Prompoke lands, GAS/LPG contract, SEZ lands to MNCs Etc)
M.S.Vasan

மதுரை சரவணன் said...

good administrator. hi he is real hero . if all collectors are like him then India will become super power even in 2010.

கலகலப்ரியா said...

great

Anonymous said...

great leader

KASBABY said...

nallaar ular avar poruttu ellaarkkum peiyum mazhai.

பாலா said...

இப்படி அயராமல் ஓடி நேரில் மக்களைச் சந்திக்க இன்னும் நிறைய அதிகாரிகள் முன்வர வேண்டும்.

Anonymous said...

Good officer

ஜோதிஜி said...

தனிப்பட்ட இது போன்ற அதிகார வர்க்கத்தினரின் செயல்பாடுகளை, இதே போல் நிறைய கொண்டு வாருங்கள், வாழ்த்துகள்.

Unknown said...

He is a real hero, happy to see the youngsters hardly working for ppl, but the question is hw far the ppl take it and comeforward in their life, only god knows...Salute Mr Sakayam, for doing such a great administration..

Post a Comment

  ©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.

TOPO