Monday, September 27, 2010

கொடுப்போம் அமுதம்!


சில தினங்களுக்கு முன்பு பெங்களூரில் இருந்து திருச்சிக்கு சென்று கொண்டிருந்த சேலம் கோட்ட அரசுப் பேருந்து ஒன்று மாலை 5.45 மணியளவில் திருச்சி மாவட்டம்,​​ முசிறியை அடுத்த உமையாள்புரம் என்ற கிராமப் பகுதியில் திடீரென சாலையோரம் நின்றது.

பேருந்தில் இருந்து இறங்கிய நடத்துநர்,​​ சாலையோரத்தில் ஓலை வேய்ந்த மண் குடிசையின் முன்னால் அமர்ந்திருந்த ஒரு மூதாட்டியிடம் பெரிய ரொட்டி பாக்கெட்டையும்,​​ குடிநீர் பாட்டிலையும் கொடுத்துவிட்டு,​​ ஒரு வினாடி நலம் விசாரித்து விட்டு பேருந்துக்குத் திரும்பினார்.

அந்த மூதாட்டி நடத்துநருக்குத் தெரிந்தவராக இருப்பார் என்று நினைத்தோம்.​ விசாரித்து வைப்போமே என்று நடத்துநரிடம் பேச்சு கொடுத்த போதுதான் சுவாரஸ்யம் மிக்க செய்தி ஒன்று கிடைத்தது.


கிருஷ்ணகிரி மாவட்டம்,​​ காவிரிப்பட்டினம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வரும் நடத்துநர் கே.​ சிங்காரவேலுக்கும் அந்த மூதாட்டிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

பிறகு எந்த நோக்கத்தோடு அந்த மூதாட்டிக்கு ரொட்டி,​​ குடிநீர் பாட்டில் வாங்கிக் கொடுத்தீர்கள் என்று நடத்துநரிடம் கேட்டோம். சில வினாடிகள் நீங்கள் யார் என்பது போல பார்த்துவிட்டுப் பிறகு எதுவும் கேட்காதவராக அவர் சொன்னது...

'பொதுவாக ஆதரவற்ற,​​ அடையாளம் தெரியாத வயதானவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்குடன் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக இதுபோன்ற உதவிகளைச் செய்து வருகிறேன்.

இந்த மூதாட்டி யார் என்று எனக்குத் தெரியாது.​ கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக நான் பணியில் இருக்கும் போது,​​ இந்த மூதாட்டிக்கு எனது வீட்டில் இருந்து உணவும்,​​ கடையிலிருந்து குடிநீர் பாட்டிலும் வாங்கி வந்து தருகிறேன்.​ உணவு கொண்டு வர முடியாத சூழ்நிலையில்,​​ பெரிய ரொட்டி பாக்கெட்டும்,​​ குடிநீரும் வாங்கித் தருகிறேன்.

திருவண்ணாமலை வழித்தடத்தில் பணியாற்றிய போது,​​ ரமண மகரிஷி ஆசிரமப் பகுதியில் சாலையோர முதியோருக்கு நாள்தோறும் 5 பேருக்கு தயிர் சாதம் வாங்கிக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தேன்.​ நான் இவ்வாறு உணவை வாங்கி இலவசமாகக் கொடுப்பதை அறிந்த அந்த உணவு விடுதிக்காரர் மேலும் 5 பொட்டலங்களை இலவசமாகக் கொடுத்தார்.

தெரிந்தவர்களுக்கு உதவி செய்வது பலனை எதிர்பார்ப்பது போல என்பதால்,​​ தெரியாத வயதானவர்களுக்கு உதவி செய்து வருகிறேன்.​ இதேபோல,​​ நான் வசிக்கும் பகுதியில் உள்ள கூர்கா வீட்டு குழந்தைகளுக்கு சீருடை வாங்கிக் கொடுத்தேன்.​ அதோடு,​​ அவர்களது படிப்பிற்கும் என்னால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறேன்.

எனக்கு 54 வயதாகிறது.​ ஆனால்,​​ எந்த நோயும் இல்லாமல்,​​ முழு ஆரோக்கியத்துடன் உள்ளேன்.​ எனது மகன்கள் இருவரும் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பொறியியல் கல்வி பயின்று வருகின்றனர்.

நாள்தோறும் அடையாளம் தெரியாத வயதான ஒருவருக்கு உதவுவதன் மூலம் எனக்கு ஆத்ம திருப்தி கிடைக்கிறது.​ ​நாம் ஒவ்வொருவரும் நமது பெற்றோரைப் போல உள்ள வயதான,​​ ஆதரவற்ற ஒருவருக்கு சேவை செய்வதைக் கடமையாக நினைக்க வேண்டும்'' என்றார் அவர்.

அந்த மூதாட்டியை சென்று பார்த்தோம். மழையில் பாதி கரைந்திருந்த மண் சுவரின் மீது கீற்றுகளால் வேயப்பட்ட ஒரு குடிசையில் குறுக்கி,​​ முடக்கிப் படுத்திருந்தார்.சாலையின் எதிர்புறம் இருந்த வீட்டில் விசாரித்த போது,​​ அந்த மூதாட்டிக்கு திருமணமான ஒரு மகள் மட்டுமே இருக்கிறார்.​ அவரும் வெளியூரில் உள்ள நிலையில்,​​ அவரது உறவினரான நாங்கள் முடிந்தவரை அவரைக் கவனித்துக் கொள்கிறோம் என்றனர்.

ஆதரவற்ற வயதானவர்களுக்கு அரசு தரும் உதவிகளை பெற்றுக்கொண்டு,​​ தனிக் குடிசையில் தைரியமாகத்தான் வாழ்ந்து வருகிறார் இந்த மூதாட்டி. ஒரு ரூபாய் அரிசியையும்,​​ ஆதரவாகப் பேச ஒருவரையும் தேடி அலையும் அந்தக் கண்களுக்கு,​​ ஒரு ரொட்டி பாக்கெட்டும்,ஒரு வினாடி நல விசாரிப்பும் ஆறுதலான அமுதமாகத்தானே இருக்கும்!


நன்றி
தினமணி கதிர் (இரா.மகாதேவன்)  ©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.

TOPO