Monday, September 27, 2010

கொடுப்போம் அமுதம்!


சில தினங்களுக்கு முன்பு பெங்களூரில் இருந்து திருச்சிக்கு சென்று கொண்டிருந்த சேலம் கோட்ட அரசுப் பேருந்து ஒன்று மாலை 5.45 மணியளவில் திருச்சி மாவட்டம்,​​ முசிறியை அடுத்த உமையாள்புரம் என்ற கிராமப் பகுதியில் திடீரென சாலையோரம் நின்றது.

பேருந்தில் இருந்து இறங்கிய நடத்துநர்,​​ சாலையோரத்தில் ஓலை வேய்ந்த மண் குடிசையின் முன்னால் அமர்ந்திருந்த ஒரு மூதாட்டியிடம் பெரிய ரொட்டி பாக்கெட்டையும்,​​ குடிநீர் பாட்டிலையும் கொடுத்துவிட்டு,​​ ஒரு வினாடி நலம் விசாரித்து விட்டு பேருந்துக்குத் திரும்பினார்.

அந்த மூதாட்டி நடத்துநருக்குத் தெரிந்தவராக இருப்பார் என்று நினைத்தோம்.​ விசாரித்து வைப்போமே என்று நடத்துநரிடம் பேச்சு கொடுத்த போதுதான் சுவாரஸ்யம் மிக்க செய்தி ஒன்று கிடைத்தது.


கிருஷ்ணகிரி மாவட்டம்,​​ காவிரிப்பட்டினம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வரும் நடத்துநர் கே.​ சிங்காரவேலுக்கும் அந்த மூதாட்டிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

பிறகு எந்த நோக்கத்தோடு அந்த மூதாட்டிக்கு ரொட்டி,​​ குடிநீர் பாட்டில் வாங்கிக் கொடுத்தீர்கள் என்று நடத்துநரிடம் கேட்டோம். சில வினாடிகள் நீங்கள் யார் என்பது போல பார்த்துவிட்டுப் பிறகு எதுவும் கேட்காதவராக அவர் சொன்னது...

'பொதுவாக ஆதரவற்ற,​​ அடையாளம் தெரியாத வயதானவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்குடன் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக இதுபோன்ற உதவிகளைச் செய்து வருகிறேன்.

இந்த மூதாட்டி யார் என்று எனக்குத் தெரியாது.​ கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக நான் பணியில் இருக்கும் போது,​​ இந்த மூதாட்டிக்கு எனது வீட்டில் இருந்து உணவும்,​​ கடையிலிருந்து குடிநீர் பாட்டிலும் வாங்கி வந்து தருகிறேன்.​ உணவு கொண்டு வர முடியாத சூழ்நிலையில்,​​ பெரிய ரொட்டி பாக்கெட்டும்,​​ குடிநீரும் வாங்கித் தருகிறேன்.

திருவண்ணாமலை வழித்தடத்தில் பணியாற்றிய போது,​​ ரமண மகரிஷி ஆசிரமப் பகுதியில் சாலையோர முதியோருக்கு நாள்தோறும் 5 பேருக்கு தயிர் சாதம் வாங்கிக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தேன்.​ நான் இவ்வாறு உணவை வாங்கி இலவசமாகக் கொடுப்பதை அறிந்த அந்த உணவு விடுதிக்காரர் மேலும் 5 பொட்டலங்களை இலவசமாகக் கொடுத்தார்.

தெரிந்தவர்களுக்கு உதவி செய்வது பலனை எதிர்பார்ப்பது போல என்பதால்,​​ தெரியாத வயதானவர்களுக்கு உதவி செய்து வருகிறேன்.​ இதேபோல,​​ நான் வசிக்கும் பகுதியில் உள்ள கூர்கா வீட்டு குழந்தைகளுக்கு சீருடை வாங்கிக் கொடுத்தேன்.​ அதோடு,​​ அவர்களது படிப்பிற்கும் என்னால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறேன்.

எனக்கு 54 வயதாகிறது.​ ஆனால்,​​ எந்த நோயும் இல்லாமல்,​​ முழு ஆரோக்கியத்துடன் உள்ளேன்.​ எனது மகன்கள் இருவரும் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பொறியியல் கல்வி பயின்று வருகின்றனர்.

நாள்தோறும் அடையாளம் தெரியாத வயதான ஒருவருக்கு உதவுவதன் மூலம் எனக்கு ஆத்ம திருப்தி கிடைக்கிறது.​ ​நாம் ஒவ்வொருவரும் நமது பெற்றோரைப் போல உள்ள வயதான,​​ ஆதரவற்ற ஒருவருக்கு சேவை செய்வதைக் கடமையாக நினைக்க வேண்டும்'' என்றார் அவர்.

அந்த மூதாட்டியை சென்று பார்த்தோம். மழையில் பாதி கரைந்திருந்த மண் சுவரின் மீது கீற்றுகளால் வேயப்பட்ட ஒரு குடிசையில் குறுக்கி,​​ முடக்கிப் படுத்திருந்தார்.சாலையின் எதிர்புறம் இருந்த வீட்டில் விசாரித்த போது,​​ அந்த மூதாட்டிக்கு திருமணமான ஒரு மகள் மட்டுமே இருக்கிறார்.​ அவரும் வெளியூரில் உள்ள நிலையில்,​​ அவரது உறவினரான நாங்கள் முடிந்தவரை அவரைக் கவனித்துக் கொள்கிறோம் என்றனர்.

ஆதரவற்ற வயதானவர்களுக்கு அரசு தரும் உதவிகளை பெற்றுக்கொண்டு,​​ தனிக் குடிசையில் தைரியமாகத்தான் வாழ்ந்து வருகிறார் இந்த மூதாட்டி. ஒரு ரூபாய் அரிசியையும்,​​ ஆதரவாகப் பேச ஒருவரையும் தேடி அலையும் அந்தக் கண்களுக்கு,​​ ஒரு ரொட்டி பாக்கெட்டும்,ஒரு வினாடி நல விசாரிப்பும் ஆறுதலான அமுதமாகத்தானே இருக்கும்!


நன்றி
தினமணி கதிர் (இரா.மகாதேவன்)



8 Comentários:

ரோகிணிசிவா said...

மனிதம் வாழ்கிறது சில இடங்களில் ஆர்ப்பாட்டமில்லாமல்

பவள சங்கரி said...

நல்ல உள்ளம் கொண்ட இது போன்ற சிலர் இருப்பதால் தான் இன்றும் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது, அப்பழுக்கில்லாமல்.வாழ்த்துக்கள்.

மரா said...

நல்ல விசயம். இந்த மாதிரி ஆட்களாலதாங்க இன்னமும் மனிதம் சாகாம இருக்கு. நன்றி.

vasu balaji said...

great

T.V.ராதாகிருஷ்ணன் said...

மனிதம் வாழ்கிறது

Several tips said...

மிகவும் அருமை

Sabarinathan Arthanari said...

வாழ்த்துகள். [பதிவை தாமதமாக பார்க்க நேர்ந்தது.] நிகழ்ச்சி பற்றிய தகவல்கள் படங்கள் வெளியிட்டால் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளலாம்.

Unknown said...

அற்புதம் ... என்ன சொல்லுவது என்று தெரியவில்லை... நடத்துனரை வணங்குகிறேன்.

Post a Comment

  ©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.

TOPO