•
இரட்டை முகம்!
பனிக்காலம் முடிந்து கோடை தொடங்கி விட்டது. மழை விட்டும் தூவானம் விடவில்லை.கோடை மழை,வெப்பத்தைச் சற்று குறைத்ததனால் அசந்து தூங்கி விட்டாள் செல்வி. மேற்கூரையின் வேய்ந்த ஓடுகள், இரவு அடித்த பேய் மழையும், காற்றும் சேர்ந்து லேசான இடைவெளி விட்டிருந்தது. அதனூடே மெல்ல எட்டிப் பார்த்த கதிரோனின் வீச்சில் ஒரு வரி முன்னெற்றியிலும், இடது கண்ணிலும், ஒடுங்கிய கன்னத்திலும் பட்டு, ஆழ்ந்த நித்திரையிலிருந்தவளை முகச் சுளிப்போடு விழிக்கச் செய்தது.
அடடா, வெய்யில் வந்துவிட்டதா....நேரம் போனதே தெரியவில்லையே! வேலைக்குப் போகனுமே என்று வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்தாள் செல்வி. வீடே நிசப்தமாக இருந்தது ஏன் என்று தெரியவிலை. அம்மாவும், அண்ணனும் வேலைக்குச் சென்றிருப்பார்களோ....
அண்ணன் பெயிண்டர் வேலைக்கும், அம்மா சித்தாள் வேலைக்கும் போவதனால், காலை 8 மணிக்குள் கிளம்பாவிட்டால் மேஸ்திரியிடம் சென்று வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும். இரண்டு பேருந்து மாறி செல்ல வேண்டும். ஆகவே நேரத்தோடு இருவரும் இளம்பி விட்டார்கள் போல
பணிக்குச் செல்ல நேரம் கடந்து விட்டது, விரைவில் கிளம்ப வேண்டும் என மனம் பணித்தாலும், உடல் அசைந்து கொடுக்கவில்லை..........
--
’என்னது... இது உடம்பு இவ்வளவு கனமாக இருக்கிறது. ஒரு இரவிற்குள் அப்படி என்னதான் ஆகியிருக்கும். அடித்துப் போட்டது போல அசதி வேறு...தலைப்பாரம். தன் மீதிருந்து தனக்கே அனல் வீசுவது போல..பிரம்மையோ?’
அப்போதுதான் அவளுக்கு நினைவு வந்தது, இரவு ப்டுக்கப் போகுமுன் அம்மா சொன்னது.
‘செல்விம்மா, உடம்பு அனலா கொதிக்குதும்மா. காய்ச்சல் நிறைய இருக்கும் போல, இந்த கஞ்சியை குடிச்சிப்பிட்டு மாத்திரையை போட்டுக்கிட்டு படுத்துக்க சாமி.. நாளைக்கு முடிஞ்சா வேலைக்குப் போ, இல்லாட்டி வயித்துக்கு கஞ்சியை குடிச்சிப்பிட்டு நல்லா தூங்கு. டாக்ட்ர் ஊட்டு அம்மாகிட்ட நான் சொல்லிப்புடறேன்...நீ வேலைக்குப் போகத் தேவல..’
‘இல்லம்மா. டாக்டர் வீட்டிற்கு ஒறம்பற [விருந்தாளிகள்] வந்திருக்காங்க...இன்னைக்கு லீவு எடுத்தா அந்தம்மா கண்டபடி கத்தும். நாளைக்கு மின்னைக்கு அந்தப் பக்கமே போவ முடியாது’
கஸ்தூரிக்கு பதில் பேச முடியவில்லை. அவளுக்கும் தான் அந்த டாக்டர் ஊட்டு அம்மாவைப் பத்தி தெரியுமே. ஒரு நாள் வேலைக்குப் போகாட்டாலும் ஆளு வந்துவிடும். வாட்ச்மேன் ஐயன் வந்திடுவாரே கையோடு கூட்டிச் செல்வதற்கு. அந்த டாக்டர் வீட்டு அம்மா பேசுகிற பேச்சு தெருவையே கலக்கும். அந்த அம்மாவின் கடுஞ் சொல்லிற்கு அஞ்சியே அவர்கள் வீட்டிற்கு வேலைக்கு வர பலரும் அஞ்சுவர். இத்தனைக்கும், சம்பளம் என்று பார்த்தால், மற்ற வீடுகளில் கொடுப்பதை விட ஒரு பங்கு அதிகமாகவே கிடைக்கும். ஆனால் அதற்குத் தகுந்த வேலையும் இருக்கும். அந்த அம்மாவிற்கு வீடு பளபளவென கண்ணாடி போல இருக்க வேண்டும். வீட்டைக் கூட்டி மெழுகி முடித்தவுடன், காலிலிருக்கும், காலணியை (வீட்டில் பயன் படுத்தும் பிரத்யேக காலணி) கழட்டி வைத்து விட்டு, தேய்த்து, தேய்த்து நடந்து பார்ப்பார்கள். ஒரு சிறு மண் துகள்களோ, குப்பையோ காலில் பட்டால் அவ்வளவுதான்.....வசவு ஆரம்பித்து விடும். ’என்னத்த வீடு கூட்டுற.....’ என்று பெரும் பாட்டாக வரும்.
அழகான அந்த கரும் பசசை வண்ண பளபளக்கும் கிரானைட் கல் எங்கேனும் ஒரு துளி அழுக்கு இருந்தாலும் போதும் அப்பட்டமாகக் காட்டிக் கொடுத்து விடும். இனி தாமதிக்க முடியாது என்ற ஞானோதயம் வர, சட்டென ஒரே மூச்சில் தம் கட்டி எழுந்திருக்க முயன்று அதில் வெற்றியும் பெற்றாள். மெதுவாக அப்படியே பொடக்களைப் பக்கம் சென்றவள் தட்டியின் கயிற்றுத் தாழ்ப்பாளை மெதுவே உறுவி, ஒடுங்கிப் போன ஹைதர் அலி காலத்திய அலுமினிய குவளையை எடுத்து தண்ணீர் மோந்து, கோபால் பல்பொடி போட்டு பல் துலக்கி, காலைக் கடன்களை முடித்து விட்டு தள்ளாடியவாறு வேளியே வந்தாள்.(வழக்க்ம் போல இன்றும் சம்பளம் வந்தவுடன் முதல் வேலையாக இந்த ஓட்டை குவளையை மாற்றி பிளாஸ்டிக் மக் வாங்க வேண்டும்) என்ற உறுதி மொழியோடு கழிவறையை விட்டு வெளியே வந்தாள்.