Monday, December 19, 2011

சங்கமம்‘2011 ல் பாராட்டு பெற்ற 15 பேர்


 
படித்தது உயர்தர ஆங்கில வழிப்பள்ளியில் ஆனால் வாழ்ந்தது இந்தச் சந்து பொந்தில் என்று தன்னைப்பற்றிக் குறிப்பிடும் இவர் படிப்பால் ஒரு வழக்கறிஞர், மனதால் மன விருப்பத்தால் ஒரு ஓவியர். பழம்பெறும் பிரபல ஓவியக் கலைஞரும் 1954ல் உருவாக்கப்பட்ட ”சினி ஆர்ட்ஸ்” நிறுவனத்தின் உரிமையாளருமான திரு வேலாயுதத்தின் முதல் மகன் இவர். இன்றைக்கு இந்திய திரையுலகத்தை தனது திறமையால் உலுக்கி வரும் ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் சகோதரர். கோவை கிக்கானி பள்ளியில் படித்து பின்னர் கோவை அரசு கலைக் கல்லூரியில் பொலிடிக்கல் சயின்ஸ் பட்டம் பெற்றவர், சென்னை பிரசிடன்ஸி கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றபின் கோவை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றவர். கோவை புரடக்டிவிட்டி கவுன்சிலில் முதுநிலை பட்டயப் படிப்பில் தேர்ச்சி பெற்றவர். கோவை ஓவியர்களின் சங்கமாகிய “சித்திரகலா” அமைப்பின் தலைவர். 1978ல் இருந்து தன்னுடைய ஓவியக் கண்காட்சியினை கோவை, சென்னை, பங்களூர் போன்ற ஊர்களில் நடத்தி வருகிறார். பல்வேறு நாடுகளிலும் இவருடைய ஓவியங்கள் விரும்பப்படுகின்றன். சென்னை வள்ளுவர் கோட்டத்திலும் இவருடைய ஓவியம் இடம்பெற்றுள்ளது. குறளோவியத்திற்கு ஓவியம் வரைய இந்தியா முழுவதிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 133 ஓவியக் கலைஞர்களில் இவரும் ஒருவர்.

திரைப்படங்களுக்கான விளம்பரப் பலகைகளை வரையும் கலையில் சிறந்து விளங்கியவர். காலப்போக்கில் மறைந்துபோன இந்தக்கலையில், ஆயிரக்கணக்கான திரை விளம்பரப் பலகைகளை  வரைந்த பெருமைக்குரியவர். 1980களில் மாணவ நிருபராக “கல்கி” இதழில் திரைப்பட விமர்சனங்களை எழுதிவந்தார். 1980களில் திரு மாலன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த “திசைகள்” இதழின் மாணவ ஓவியராக பணியாற்றியவர். 2004ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டின் MIGROS அமைப்பிற்காக ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஒரு பேனர் மற்றும் கட் அவுட் அமைத்துக் கொடுத்தார். சுவிட்சர்லாந்து ஜூரிச் நகரில் சுமார்  நாடக அரங்குகளுக்கான சுமார் 20 ஓவியங்களை SCHAUSPIELHAUS என்ற அமைப்பிற்காக வரைந்து கொடுத்துள்ளார். அக்ரலிக் போர்ட்ராய்ட் வகையான படங்களை சுவிட்சர்லாந்து நாட்டிற்காக வரைந்திருக்கிறார். ஜப்பானிய அரசாங்கம், மராட்டிய மாநில அரசு ஆகியவை எடுத்த “அஜந்தா, எல்லோரா “ குறித்த ஆவணப்படத்தில் அங்குள்ள ஓவியங்கள் குறித்த விளக்கவுரை கொடுத்துள்ளார். நிறையப் புதினங்களுக்கான அட்டைப் படங்களை வடிவமைத்துக் கொடுத்துள்ளார். 1979 ஆம் ஆண்டிலிருந்து ஞாயிறுகளில் இவர் நடத்தி வரும் ஓவிய வகுப்புகளில் பங்கெடுத்து வருபவர்களில் இன்றைய தமிழ் சினிமாவின் சிறந்த கலை இயக்குனர்களும் அடங்குவர். திரைபடத்தின் உலக வரலாறு, இந்திய வரலாறு பற்றி பல கோணங்களில் அலசி எழுதப்பட்ட இவரது திரைச்சீலை புத்தகம் 28 ஆண்டுகளுக்குப் பிறகு திரைப்படங்களுக்கான தேசிய விருதுகளோடு திரைப்படம் குறித்த புத்தகம் என்ற வகையில் இந்த ஆண்டு தேசியவிருதை தட்டிக்கொண்டது. தேசிய விருதுக்குத் தகுதியான 37 அழகிய, ஆழமான கட்டுரைகளைக் கொண்டுள்ள திரைச்சீலைப் புத்தகம் ஒரு எளிய வாசகனுக்கான இனிப்பான நடையில் மொழியில் எழுதப்பட்ட ஒன்று.,
திரைப்பட துறையின் வளர்ச்சி  எவ்வாறு இயக்குனர்கள், கதாசிரியர்கள் மற்றும் நடிகர்கள் போன்றவர்களால் வளர்க்கப்பட்டு உள்ளது என்றும், ரசிகர்களின் பங்களிப்பு எவ்வளவு முக்கியம் என்பதையும் நிதர்சனமாக இந்த புத்தகம் விளக்குகிறது.

இந்த ஆண்டின் தமது திரைச்சீலை படத்திற்காக தேசிய விருது பெற்ற சாதனையாளர் ஓவியர் ஜீவா அவர்கள். 



•••• 


அதீதமான கல்வியறிவு, பெரும் தொழில் என்றில்லாமல், மிகச்சாமனியனாக இருந்து கொண்டு இந்த இளைஞர் செய்து வரும் அரிய பணிகள் போற்றுதலுக்குரியது. புத்தருக்குப் போதி மரம் போல், ஓவ்வொருவரின் முக்கிய முடிவுக்கும், திருப்புமுனைக்கும் போதி மரத்துக்கு நிகரானதொரு நிகழ்வு நிச்சயம் இருக்கும். அப்படிப்பட்ட நிகழ்வு இவருடைய வாழ்விலும் ஒருமுறை நடந்தேறியிருக்கின்றது. ஒரு முறை அவரது சகோதரிக்கு பொது இடத்தில் ஏற்பட்ட உடல் நல குறைவின்போது ஓரிருவரே மட்டுமே உதவ முன்வந்து, பலரும் வேடிக்கைமட்டுமே பார்த்துக்கொண்டிருந்த இக்கட்டான சூழலே இவரை சமுதாயத்தின் மேல் அதீத அன்புகொண்டவராக மாற்றியிருக்கின்றது. தெருவில் ஆதரவில்லாமல் இருப்பவர்களின் நிலைமை உண்மையில் பரிதாபமானது என்பதை உணர்ந்து, ஆதரவில்லாதவர்கள், மனநலம் இல்லாதவர்கள் போன்றவர்களுக்கு நம்மை போன்றவர்கள் உதவ முன்வரவேண்டும் என்பதை தாரக மந்திரமாகக் கொண்டவர்.

அப்படி இருப்பவர்களுக்கு இனி என்னால் முடிந்த   உதவி செய்ய வேண்டும் என அவர் எடுத்த முடிவு பலநூறு பேரை மீட்டு நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக்கொடுத்திருக்கிறது. யாரும் செய்யத் தயங்கும் துணிந்திடாத காரியமாக, சாலை ஓரம் கிடக்கும் வயதானவர்களையும், மனநிலை பிறழ்தவர்களையும் நல்ல உள்ளம் படைத்த நண்பர்களோடு மீட்டு அதற்கான இடங்களில் சேர்க்கவும், மருத்துவ உதவிகள் அளிக்கவும் உழைத்து வருகிறார். மனநிலை பாதிப்பால் பல ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர்கள் கூட இவரின் உதவியால் தங்கள் சொந்த பந்தங்களோடு இணைந்திருக்கிறார்கள் என்பது நெகிழ்ச்சியானதோரு விசயம்.

இதுவரை கிட்டத்தட்ட அறுபதிற்கும் மேற்பட்டவர்களை  பாதுகாப்பாக காப்பகங்களில் சேர்த்து நல்வாழ்வு அமைத்துக்கொடுத்துள்ளார்.  அதோடு காப்பகத்தில் இருந்தும் சாலையோரமாக இருந்தும் ஆதரவற்று இருந்த பத்து பேரை அவர்களது வீடு தேடி அவர்களின் உறவினரிடத்தில் சேர்த்து வைத்துள்ளார்.

சமூக ஆர்வலர், கவிஞர் மகேந்திரன் அவர்கள்.



••••

முதுகலைப் பட்டதாரியான இவர் மக்கள் தொடர்பிதழியல் ஆராய்சிப்பட்டம் பெற்றவர். கோவை பி.எஸ்.ஜி. கலைக்கல்லூரியில் விரிவுரையாளராக 6 வருடங்கள் பாணியாற்றினார். விகடனில் பகுதி நேரச் செய்தியாளராக 7 வருடங்கள்  பணியாற்றி, 1987ம் ஆண்டுக்கான தலை சிறந்த மாணவப் பத்திரிகையாளர் விருது பெற்றவர். அதோடு வர்த்தக அமைச்சகத்தில் துறை இதழ் ஆசிரியராக இரண்டு வருடங்கள்  பணியாற்றியவர். பின்னர் இந்திய இரயில்வே துறைக்கு வந்து உதவி மண்டல நிதி அதிகாரி, மண்டல நிதி அதிகாரி, மூத்த மண்டல நிதி அதிகாரி என மதுரையில் பணியாற்றி,  துணை நிதி ஆலோசனை மற்றும் தலைமைக் கணக்கு அதிகாரியாக பெரம்பூரிலும் துணை நிதி ஆலோசனை மற்றும் தலைமைக் கணக்கு அதிகாரியாக  சென்னையிலும் பணியாற்றி தற்போது சென்னையில் தென்னக இரயில்வேயின் துணைப் பொது மேலாளராகப் பணியாற்றுகிறார். சுடர் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் மூலம் ஆதரவற்ற மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கான கல்வி உதவிகள் பலவற்றைச் செய்து வருகிறார்.

பத்திரிக்கைத் தொடர்பியல்துறை பயின்று, பேராசிரியராகவும் பணியாற்றியதால் ஊடகங்களில் அதிக ஆர்வம் கொண்டவர். விகடனில் பணிபுரிந்த காலங்களில் சமூகப்பிரச்சனைகளை அதிகம் எழுதும் வாய்ப்பு கிடைத்ததையொட்டி ஆவணப்படத் தயாரிப்புக்குள் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். பொதுவாக மற்றவர்கள் தொடுவதற்கு அருவெறுப்பும், கூச்சமும் படுகின்ற நியாயமான சங்கதிகளை தன் மனதிற்கு நெருக்கமானதாய் உணர்கின்றவர். அந்த வகையில் முதலில் குற்றப்பரம்பரையினர் வாழ்வியலைக் கருவாய் கொண்ட “ஆராயாதீர்ப்பு” ஆவணப்படத்தை தயாரித்து இயக்கினார். ”ஆராயாத் தீர்ப்பு” ஆவணப்படம் 2009ம் ஆண்டு சினிமா டுடேவின் சிறந்த ஆவணப்படம் – விருதையும் அதே ஆண்டு திருவண்ணாமலை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் விருதினையும் பெற்றது.

மீண்டும் ஒரு ஆவணப்படமாக விளிம்பு நிலை மனிதர்களான திருநங்கைகளின் வாழ்க்கைப் போராட்டத்தை மையப்படுத்தி இவர் இயக்கிய ஆவணப்படம்தான் அஃறிணைகள். இது திருநங்கைகள் சமூகத்தில் எதிர்கொள்ளும் சவால்களைக் கருவாகக் கொண்டது.  பாலியல் தொழில், பிச்சையெடுப்பது என்னும் நிர்பந்தங்களை உதறிவிட்டு சுய மதிப்போடு வாழ  இன்றும் போராடிக்கொண்டிருக்கும் இரு திருநங்கைகளின் வாழ்க்கையின் சமகாலப்பதிவு. பாலியல் சிறுபான்மையோர் குறித்த சமூக மதிப்பீடுகளை விசாரனை செய்வதோடு, அவர்களுக்கும் தான் யார் என்ற அறிவியல் பூர்வமான ஆலோசனையை இந்த ஆவணப்படம் வழங்குகிறது.

மதுரையில் சிறந்த ஆவணப்படத்திற்கான “சரத் சந்திரர் நினைவுப் பரிசு”
சேலத்தில் சிக்னிஸ் திரைப்பட விழாவில் சிறந்த ஆவணப்படத்திற்கான விருது, திருவண்ணாமலையில் சிறந்த ஆவணப்படத்திற்கான பா.ராமச்சந்திரன் நினைவுப் பரிசு , பாலிம் சார்ந்த தேசிய ஆவண மற்றும் குறும்பட விழா சிறப்புக் காட்சிக்கான தெரிவு, காஷிஷ் உலக ஓரினச் சேர்க்கை குறித்த திரைப்பட விழா 2011, மும்பையில் சிறப்புக் காட்சிக்கான தெரிவு எனப் பல அங்கீகாரங்களைப் பெற்றது அஃறிணைகள் ஆவணப்படம்.

அஃறிணைகள் ஆவணப்பட இயக்குனர் திரு. இளங்கோவன் பாலகிருஷ்ணன் அவர்கள்.



•••••

இராமேஸ்வரத்தில் முந்தைய தலைமுறையிலேயே தமிழகத்தில் குடியேறிவிட்ட மலையாளிக்குடும்பம் ஒன்றில் எட்டாவது குழந்தையாக பிறந்தவர்.  சில காரணங்களுக்காக சொந்த ஊரைவிட்டு கிளம்பி மதுரை, திருச்சி போன்ற ஊர்களில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு பின் மும்பைக்கு குடிபெயர்நதவர்.  மும்பையிலும் தையல் பணி, வெல்டிங் பணி, ரப்பர் கம்பெனி, கண்மை தயாரிக்கும் பணி என பல வேலைகளில் ஈடுபட்டிருந்த சமயத்தில், கவிஞரும், நண்பருமான மதியழகன் சுப்பையா மூலம் பத்திரிக்கைத் துறைக்குள் நுழைந்தவர்.

இவர் மும்பையில் இருந்து வந்துகொண்டிருந்த பல தமிழ் பத்திரிக்கைகளில் பணியாற்றியுள்ளார். பின் குமுதம் குழுமத்தின் மும்பை பகுதியின் செய்தியாளராக பணியாற்றியுள்ளார். கச் பூகம்பம், கோத்திரா ரயில் எரிப்பும் அதனை ஒட்டி நடந்த கலவரம் ஆகிய சமயங்களில் நேரடியாக குஜராத் மாநிலத்திற்கு சென்று செய்தி சேகரித்த ஒரே தமிழ்ப் பத்திரிக்கையாளார் இவர் என்பதால் பத்திரிக்கைத் துறையில் தனி கவனம் பெற்றவர். மற்ற தமிழ்ப் பத்திரிக்கைகள் ஏஜென்சி வழி செய்திகளை மட்டுமே வெளியிட்டன. சில காலம் டெல்லியிலும் குமுதம் குழுமத்திற்காக பணியாற்றியுள்ளவர். அதன் பின் மும்பையிலேயே சில காலம் விகடன் குழும இதழ்களிலும் பணியாற்றியுள்ளார்.

2005ம் ஆண்டு மத்தியில் சென்னைக்கு வந்தவர், முதலில் கிழக்கு பதிப்பகத்தின் வித்லோகா புத்தக விற்பனை நிலையத்தில் பணியில் சேர்ந்தார். பின் சன் குழுமத்தின் தொலைக்காட்சியில் செய்திப்பிரிவில் பணியாற்றி உள்ளார். அதன் பின் ஜீ தமிழ்தொலைக்காட்சியின் செய்திப்பிரிவில் பணியாற்றியுள்ளார். 2005 முதல் வலைப்பதிவுகளிலும், இணைய இதழ்களிலும் எழுதிவருகிறார். தமிழ் வலைப்பதிவர்களின் கூட்டு முயற்சியில் நடந்த சென்னை வலைப்பதிவர் பயிற்சி பட்டறைக்கு முக்கியப் பங்காற்றியுள்ளார்.

1994ம் ஆண்டு இவரது முதல் கவிதை பிரசுரமானது. தொடர்ந்து புதுக்கவிதை, ஹைக்கூ கவிதை என எழுதிவந்தவர் சிறுகதைகளிலும் தன் பங்களிப்பை செலுத்தி உள்ளார். 2000ம் ஆண்டு இதயத்தில் இன்னும் என்ற ஹைக்கூ கவிதைகள் நூல் வெளிவந்தது.
சமத்துவபுரம்:
கழிவு நீர் சுத்தம் செய்ய
அதே கருப்பன்.
” எனும் இவரது ஹைக்கூ மிகவும் பிரபலமானது.

மும்பையில் செய்தியாளனாக பணியாற்றிய போது, ஒரு செய்தி சேகரிப்புக்காக திருநங்கைகள் வாழும் பகுதியில் போய் அவர்களோடு இருந்து, அவர்களின் வாழ்க்கை முறையை அறிந்துகொண்ட போது அம்மக்களின் மீது தனிகவனம் கொண்டார். ஒரு டாக்ஸி டிரைவரை மணம் முடித்த திருநங்கை ஒருவர் தற்கொலை செய்துகொண்டதும், அச்சம்பவத்தை காவல்துறை விபத்து என்று வழக்கு பதிவு செய்து மூடியதும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அதனால், திருநங்கைகளில் காதல், கல்யாணம் ஆகியவற்றை பதிவு செய்ய நினைத்து  2008ம் ஆண்டு திருநங்கைகளில் வாழ்க்கையை மையமாகக்கொண்ட, எழுதப்பட்டதுதான் இவரின் ”அவன் – அது= அவள்” புதினம். (தற்போது மலையாளத்தின் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது)

தமிழகத்தின் பிரபலமான வார இதழ்களில் இரண்டிலும் பணியாற்றியவர்.  தற்போது புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தயாரிப்பு பிரிவில் பணியாற்றுகிறார். 2005ற்குப் பிறகு வலைப்பதிவு தொடங்கி, அதன் மூலம் கிடைத்த நட்புகளின் மூலமாக, பட்டறை, அகதி முகாம், கள ஆய்வு, படிப்புக்கு பண உதவி என பல நல்ல நிகழ்வுகளை நடத்தியுள்ளவர்.

சிறுகதை எழுத்தில் கு.அழகிரிசாமிப் பள்ளியைச் சேர்ந்தவராக இவர் அடையாளம் காணப்பெறுகிறார். வறுமையின் காரணமாக அடிமைப்படுத்தப்பட்டு, மும்பையில் வேலை செய்யும் சிறுவன் ஒருவனைப் பற்றிய ’துரைப்பாண்டி’ சிறுகதை குறிப்பிடத்தகுந்தது என்று எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் குறிப்பிடுகிறார். 1993ல் மும்பையில் ஏற்பட்ட மதக்கலவரத்தை அடிப்படையாகக்கொண்ட இவரது ‘கடந்து போதல்’ சிறுகதை புதிய பார்வை இதழில் வந்தபோது பரவலான கவனத்தை பெற்றது. அதே போல கிராமங்களில் ஊடுறுவி உள்ள சாதி வேறுபாடுகளைப் பற்றி பேசும் ‘சாமியாட்டம்’ சிறுகதையும் பரவலாக கவனத்தைப் பெற்றது.

எழுத்தாளர், வலைப்பதிவர், ஊடகவியாளர் பால பாரதி அவர்கள். 



•••••

இளங்கலை வணிகவியல் படிப்பை முடித்து, தையல் நூல் வியாபாரம் செய்துவரும் துள்ளல் மிகு இளைஞர் இவர். குறும்படங்கள் எடுப்பதில் ஆரம்பித்த இவரின் ஆர்வம் இன்று திரைப்படம் எடுக்கவேண்டுமென்பதில் வந்து நிற்கிறது. அதன் பொருட்டு திரைக்கதை எழுதுவதற்கான பயிற்சியை மேற்கொண்டுள்ளவர். ஐந்து வருடங்களுக்கு முன்பு எந்தவித பயிற்சியும் இல்லாமல் “லீவு” என்ற முதல் குறும்படத்தை எடுத்தார். அதற்குக் கிடைத்த சிறிய அளவிலான பாராட்டுக்கள் இவருக்கு அழுத்தமாகச் சொன்னது என்னவென்றால் “நீ எடுத்தது குறும்படம்தான்” என்பதையே அடுத்து எடுத்த “எட்டாம் வகுப்பு” எனும் குறும்படமும்  நல்ல விமர்சனத்தையும், பாராட்டையும் பெற்றுக்கொடுத்ததோடு ”சுழல்” என்ற அடுத்த படத்தை எடுக்கத்தூண்டியது.

நண்பருடன் கணிணி வரைகலையில் இவரின் கருத்து & இயக்கத்தில் உருவாக்கிய ’’REACTION’’  என்ற குறும்படம் குறிப்பிடத்தக்கது. எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களின் சுமங்கலித்திட்டம் பற்றிய கவிதையென்றை ’’சுமங்கலி’’  என்று விளையாட்டுபோக்கில் குறும்படமாக  எடுத்தார். படம் குறித்து படத்தைப்பற்றி நல்லவிதமான கருத்துக்களே வந்தாலும் விளையாட்டிப்போக்கில் அதை எடுத்தது பற்றி இன்றும் வருந்துவதுண்டு.

அதன்பின்பு உலகப்படங்கள் குறித்த அறிமுகம் கிடைத்தபின் குறும்படம் இயக்குவதில் இவருக்கு பெரியதொரு மனத்தடை எழுந்தது. கிட்டத்தட்ட மூன்றுவருடங்கள் கழித்து “கண்ணாம்பூச்சி” என்ற குறும்படத்தை இயக்கி பாராட்டு பெற்றார். கடந்த ஆண்டு கலைஞர் தொலைக்காட்சியில் நாளைய இயக்குனர் குறும்படப்போட்டி பற்றி அறிவிப்பு பார்த்ததும் அதில் கலந்துகொள்வதற்காக “அவன் அவர்கள் அது” என்று ஒரு குறும்படத்தை எடுத்தார். முதலில் அந்த படத்தை காத்திருப்போர் பட்டியலில் இடம்பிடித்து, அடுத்த கட்டத்தில் தேர்வான 36 பேர் கொண்ட பட்டியலிலும் நான் இடம்பெறவில்லை.

அதே சமயம் தேர்வு பெற்ற நண்பரோடு இன்னொரு படத்திற்காக நிகழ்ச்சிக்கு சென்றவர், நிகழ்ச்சியில் காண்பித்த படங்களைவிட என் படம் குறைந்ததில்லை என நிகழ்ச்சி இயக்குனரிடம் தன்னம்பிக்கையோடு வாதிட்டதில், அடுத்த கட்டத்தில் இடம் பெற்றவர். நாளைய இயக்குனர் நிகழ்சியில் அடுத்தடுத்த அவர் இயக்கிய “போஸ்டர்”  “மரண அடி”  “பசி” “அப்துல்லா சிவா டேனியல்”  “பார்வதி அக்கா” “ஜீரோ கிலே மீட்டர்” ஆகிய குறும்படங்கள் தொழில்நுட்ப அளவிலும் கருத்தாக்கத்திலும் நல்ல பெயர் ஈட்டிக்கொடுத்தவை. இறுதிப்போட்டிக்கு மிகுந்த சிரமப்பட்டு எடுத்த படம், முதல் சுற்றிலும் நுழைய மறுதலிக்கப்பட்ட இந்தக் கலைஞனை நாளைய இயக்குனர் இறுதிப்போட்டியில் மூன்றாவது பரிசினை ஈட்டித் தந்தது.

தனது குறும்படங்களுக்காக வேண்டி சிறுகதைகளை அதிகமாக வாசிக்கத்துவங்கி மெல்ல வலைப்பூக்கள் அறிமுகமாகி, அவ்வப்போது வலைப்பக்கத்திலும் எழுதிவருகிறார். குறும்படத்திற்கான  தேசிய விருதைப் பெறுமளவு தகுதியான ஒரு குறும்படத்தை எடுக்க  வேண்டும் எனும் வேட்கை கொண்டிருப்பவர். திரைத்துரையில் முன்னணி இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணிபுரியவேண்டுமென்ற ஆசையில் முயற்சித்துக் கொண்டிருப்பவர் இவர். திருப்பூர் அரிமா சங்கம்  விருது, குமரன் அறக்கட்டளை விருது, வத்தலகுண்டில், மணப்பாறையில், என ஊக்குவிப்புகள், பாராட்டுகள் என இவரது தன்னம்பிக்கை மகுடத்தில் கற்கள் பதிந்துகொண்டிருக்கின்றன.

பத்து ஆண்டுகளாக தமுஎகச அமைப்பில் இயங்கி வரும் இவரின் படைப்பில் முற்போக்கான விஷயங்களும் முதிர்ச்சியும் தென்படுமாயின் அது  தமுஎகசவில் இருந்து  பெற்றதே எனப் பெருமையாகச் சொல்கிறார்

இளம் இயக்குனர், நாளைய இயக்குனர் நாயகன் ரவிக்குமார் அவர்கள்.



•••••

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகிய தலைவர்களின் மீது பற்றுதல் கொண்ட திராவிட சிந்தனைகள் கொண்டவர். 12ம் வகுப்பில் தோல்வியடைந்தாலும், துவண்டு போகாத மனதுக்குச் சொந்தக்காரர். இயற்பெயர் கிருஷ்ணகுமார். தினமலரில் துவங்கிய பணி, விளம்பர நிறுவனங்களில் சீனியர் விஷூவலைஸர் மற்றும் காப்பிரைட்டராக இடம்பெயர்ந்தது. தற்போது புதிய தலைமுறை வார இதழின் மூத்த செய்தியாளர். 

இதுவரை எழுதிய புத்தகங்கள்:
சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்
விஜயகாந்த்
தேமுதிக
சைபர் க்ரைம்
அழிக்கப் பிறந்தவன்
(நாவல், இன்னும் வெளிவரவில்லை)

2010ஆம் ஆண்டுக்கான சிறந்த வலைப்பதிவருக்கான சுஜாதா விருது, குமுதம் இதழ் 2010 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் வெளியிட்ட டாப் 10 வலைப்பதிவுகளில் பட்டியலில் இடம், ஆனந்த விகடன் இதழில் வலைப்பக்கத்திற்கு அறிமுகம் என பரவலான அங்கீகாரம் பெற்றவர். விகடன், குங்குமம், தினகரன் வசந்தம், உயிர்மை, அகநாழிகை, விடுதலை உள்ளிட்ட ஏராளமான இதழ்களிலும், இணைய இதழ்களிலும் கதைகளையும், கட்டுரைகளையும் எழுதியிருப்பவர்.

பதிவர், பத்திரிக்கைச் செய்தியாளர் லக்கிலுக் (எ) யுவகிருஷ்ணா அவர்கள்.



••••••

முதன் முதலில் தனது மகனை படம் எடுப்பதற்காக 2003ல் SLR கேமரா ஒன்றினை வாங்கி, அதில் எண்ணம் போலவே அவர் மகனைத் தவிர பெரிதாக எதுவும் எடுக்க வில்லை. அப்படித்தான் துவங்கியது இந்தக் கலைஞனின் பயணம். பிறகு 2008ல் டிஜிட்டல் SLR வாங்கிய பிறகு விருப்பத்தின் வர்ணம் மாறத்துவங்கியது. தனது கிராமமும் கிராமம் சார்ந்த இயற்கைச் சூழலில் இருக்கும் பட்டாம் பூச்சிகள் , பிற பூச்சிகளை எடுக்க தொடங்கிய ஆர்வம், நாட்கள் நகர நகர் புகைப்படம் எடுப்பதைப் பற்றி நிறைய கற்று கொள்ளும் உத்வேகத்தைத் தந்திருக்கின்றது. அதன்பின் பல போட்டிகளில் கலந்து கொள்ள துவங்கியவர், முக்கியமாக PIT நடத்திய மாதாந்திர போட்டிகள்,வெவ்வேறு விதங்களில் படம் எடுக்க தேவை இருந்ததால் அப்படியே தெருவோர புகைப்படம் எடுக்க பழகிக்கொண்டார். அதன் அடுத்தகட்டமாக கிராமத்து மக்களின் வாழ்வியலை இயல்பு மாறாமல் எடுக்க ஆரம்பித்து இப்போதும் அதைத் தொடர்ந்து செய்து வருகின்றார்.

எந்த ஒரு படமும் இயற்கையாக எடுக்க பட்டதாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர். முடிந்த அளவு அவர்களுக்கு தெரியாமல் எடுத்துவருகிறார். அதில் குறிப்பிடத்தக்க செய்தி எந்த படத்திற்கும் flash பயன்படுத்துவது கிடையாது. சாதனைகளாகப் பட்டியலிட்டால், 2009 `photographic society of madras நடத்திய அகில இந்திய புகைப்பட போட்டியில் ஒரு படம்  `சிறப்பு பரிசு` மற்றும் 5 படங்கள் கண்காட்சியில் இடம்பெற்றது.

2010 ` photographic society of madras நடத்திய அகில இந்திய புகைப்பட போட்டியில் மூன்று படங்கள் கண்காட்சிக்கு தேர்வு.  smart photography மாத இதழில் ஒரு படம் அந்த மாதத்தின் படமாகத் தேர்வு செய்யப்பட்டு இரண்டு பக்கங்களில் பிரசுரமானது. Epson நிறுவனம் நடத்திய மாதாந்திர போட்டியில் முதல் பரிசு  . பின்னர் அதே படம் வருடாந்திர போட்டியில் வந்திருந்த 15000 மேற்பட்ட படங்களில்  இருந்து இறுதிப்பட்டியல் வரை இடம் பிடித்தது. புகைப்பட மாத இதழான `better photography` நடத்திய புகைப்பட போட்டியில் கலந்து கொண்ட  50000 மேற்பட்ட படங்களில் இவரது படம் ஒன்று `runner` தேர்வுபெற்றது. ஆனந்த விகடனின் இணைப்பான `என் விகடனில்` இவரைக் குறித்த இரண்டு பக்க கட்டுரை, குமுதத்தில் ஒரு கவிதை தொகுப்பிற்கு பயன்படுத்தப்பட்ட படம் என சாதனைகளின் பக்கத்தில் அடர்த்தியாகத் தடம் பதித்து வருபவர். 

நிழற்படங்களின் கலைஞன் சுரேஷ்பாபு அவர்கள். 



••••• 


சென்னையில் வியாபார ஆலோசனை நிறுவனம் நடத்திவரும் இவர், தற்சமயம் சைனாவில் இருந்து இந்தியா வந்திருக்கும் ஒரு நிறுவனத்திற்கு ஆலோசகனாக இருக்கிறார். சே குவாரா மற்றும் பிரபாகரனின் தீவிர ரசிகனான இவர் மக்களுக்கான விசயங்களுக்காக போராடவேண்டும் என நினைத்தாலும் சுஜாதா சொன்னது மாதிரி ஒரு புழுவைக்கூட திருத்த முடியாது என்பது புரிந்துகொண்டவர். தொழிற்கல்வியில் ஒரு புதிய வடிவம் கொண்டுவந்து அதனை இன்னும் ஒரு வருடத்துக்குள் செயல்படுத்தும் விதமாக நான் மற்றும் நண்பர்களுடன் இணைந்து குழுவாக முயற்சித்து வருகிறார். நண்பர்களோடு துவங்கிய "ழ" பதிப்பகத்தைச் சிறிது இடைவெளிக்குப் பின், தமிழின் முன்மாதிரி பதிப்பகமாக கொண்டுவரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த ஐந்தாண்டுகளாக சென்னையில் வசித்தாலும் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் பல்வேறு நாடுகளுக்கு சென்று வேலை பார்த்த அனுபவம் கொண்டிருப்பவர். அப்போது  அவர் சந்தித்த சட்டவிரோத குடியேறிகளின் அனுபவம்தான்  "பணம்" என்கிற புத்தகம்.  வலைதளத்தில் தமது சமூக அக்கறை கொண்ட பல பதிவுகளுக்கு பரவலான பாராட்டுகள் கிடைத்தாலும், அவரது "பணம்" புத்தகத்துக்கு சிங்கப்பூர் நூலகம் அனுமதி தந்து அங்குள்ள அனைத்து நூலகங்களிலும் வைத்திருப்பதை மிகுந்த பெருமையாக கருதுபவர். தொழில்முறை எழுத்தாளனாக இல்லாத ஒருவருக்கு இதுபோன்ற அங்கீகாரங்கள் பெருமையானதும் கூட. எதிர்கால திட்டமாக இயற்கை விவசாயப் பண்ணைகள் அமைக்கும் லட்சியம் வைத்திருப்பவர்.

பதிவர், பணம் புத்தகத்தின் ஆசிரியர் கேஆர்பி செந்தில் அவர்கள்.



•••••

இவர் பிறந்தது தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சை நகரில். தஞ்சாவூரில் 13 ஆண்டுகள், மதுரையில் 9 ஆண்டுகள், சென்னையில் 34ஆண்டுகள் என வசிப்புப் படுக்கைகளை மாற்றி மாற்றி மீண்டும் மதுரையில் நிலை கொண்டிருப்பவர்.  புகழ் பெற்ற கல்லூரியாம் மதுரைத் தியாகராசர் பொறியியற் கல்லூரியில் பொறியியலில் இயந்திர இயல் படிப்பு. சென்னை பல்லவன் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் பணியைத் துவக்கி தேசிய மயமாக்கப் பட்ட புகழ் பெற்ற இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு புலம் பெயர்ந்து, வங்கிப்பணியில் சிறப்பான 36 ஆண்டுகளைக் கழித்து சமீபத்தில் மதுரையில் பணி நிறைவு செய்திருப்பவர். 1974-2006 ஆண்டுகளில் வங்கியின் முதுகெலுமாகக் கருதப்படுகின்ற கணினித்துறையில் பல சவால்களைச் சந்தித்து, இந்தியாவிலேயே தனித்தன்மை வாய்ந்த வகையில் – இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தற்பொழுது பயன்படுத்தும் - அனைத்துக் கிளைகளையும் இணத்துச் செயல்படும் மென்பொருள் - மென்பொருள் வல்லுனர் அல்லாத பணியாளர்களால்  உருவாக்கப் பட்டதில் இவருக்கும் பெரும் பங்குண்டு.

அரிய வகையான தனது ஓ நெகடிவ் குருதியை முப்பது முறைகளுக்கும் மேல் தானம் செய்தவர்.  தன்னுடைய பால்ய வயதுக்காலத்தில் நடந்த நிகழ்வுகளை, ஆவணப்படுத்த “அசைபோடுவது” என்ற தளத்தையும், தான் வாசித்ததில் பிடித்ததை “படித்ததில் பிடித்தது” எனும் தளத்திலும் தொடர்ந்து எழுதிவருகிறார். 2006ல் பதிவர் சிந்தாநதியால் துவங்கப்பட்ட வலைச்சரம் வலைப்பக்கத்தை 2008ல் இருந்து பொறுப்பாசிரியராக இருந்து திறம்பட நடத்தி வருகின்றார். வாரம் ஒரு பதிவரைத் தேர்ந்தெடுத்து வலைச்சரத்தின் ஆசிரியப் பொறுப்பில் அமர்த்தி - பல்லாயிரக்கணக்கில் பதிவுகளை அறிமுகம் செய்ய வைத்த சாதனைக்குச் சொந்தக்காரர். அதிலும் கடந்த சில மாதங்களாக - ஆறு மாத காலத்திற்குள் வலைத் தளத்திற்கு வந்த புதிய பதிவர்களை ஆசிரியப் பொறுப்பில் அமர்த்தி, அவர்களது திறமையினை வெளிக் கொணர்வதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.

இணையத்தில் முதல் இரு ஆண்டுகளில் - வெளி வந்த அனைத்துப் பதிவுகளையும் படித்து மறு மொழிகள் இட்ட பெருமையால் “பின்னூட்டப் பிதாமகன்” என்றும் அழைக்கப்பட்டவர். சமூக சேவையாக  கல்விச்செலவுகளுக்காகவும், மருத்துவச் செலவுகளுக்காகவும், தேவைப்படுபவர்களுக்கு – தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமல் பல அமைப்புகளின் மூலம் இணைய வங்கிப் பரிவர்த்தனைகளாக லட்சக்கணக்கில் உதவி செய்துவருபவர்.

மூத்த பதிவர், வலைச்சரத்தின் பொறுப்பாசிரியர் சீனா அவர்கள். 



•••••

வெயிலைத் தன்மேல் எப்போது பூசியிருக்கும் விருதுநகரைச் சார்ந்தவர். வெயிலை விரும்பாத மனிதர்களின் மத்தியில் தன் பெயரோடு வெயிலையும் இணைத்துக்கொண்டவர். பெயரில் வெயில் இருந்தாலும் பழகுவதற்கு குளுமையாகவே இருப்பவர். இளங்கலை நிர்வாக மேலாண்மை பட்டம் பெற்ற இவர், சிறிய பெட்டிக்கடையில் இருந்து, ஆயத்த ஆடை விற்பனையகம், மிதிவண்டி பழுது நிலையம், அச்சகம், தட்டச்சுப் பயிற்சியகம், பாண்டியன் கிராம வங்கி, ஆயுள் காப்பீட்டுக் கழகம், நியூ இந்தியா காப்பீட்டு முகவர், மென் துணி வலை ஏற்றுமதியகம், நூற்பாலை, காப்பீட்டு ஊழியர் சங்க அலுவலகம், ஆயத்த ஆடை ஏற்றுமதியகம் வரை ஒவ்வொன்றாக வேலை செய்து....

தற்போது தரை, கடல் மற்றும் தரை வழி சரக்குப் போக்குவரத்துக்குதவும் பன்னாட்டு நிறுவனத்தின் திருப்பூர் கிளை மேலாளர். 2007 மே மாதம்  வலைத்தளம் துவக்கி எழுதி வருகிறார். 2007 சூலை மாதம் ”சற்றுமுன்” என்ற வலைத்தளம் நடத்திய செய்தி விமர்சனப் போட்டியில், கனியாக் கனிகளும், கண்ணாடி கனவுகளும் என்ற தலைப்பில் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றி எழுதிய பதிவுக்கு இரண்டாம் பரிசு பெற்றார். அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில் தமிழ்மணம் நட்சத்திரமாக இருந்திருக்கிறார். பதிவுலக நண்பர்களோடு இணைந்து சேர்தளம் - திருப்பூர் வலைப்பதிவர் குழுமம் தொடங்கப்பட்டது முக்கியமானதொரு நிகழ்வு.

சேர்தளத்தின் மூலம் வலைப்பதிவு தொடங்குவது, தமிழில் எழுதுவது குறித்து ஒரு பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது. கவிஞர். மகுடேசுவரனுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி, எழுத்தாளர். எஸ்.ராமகிருஷ்ணன் தாகூர் விருது பெற்றமைக்கு பாராட்டு விழாவும், வாசகர் கலந்துரையாடலும் சேர்தளம் சார்பில் ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தப்பட்டது. சேர்தளம் நண்பர்களிடமிருந்து அனைத்து புத்தகங்களையும் சேகரித்து, ஓரிடத்தில் ஒருங்கிணைத்து ஒரு சிறு நூலகம் அமைத்து,  விரைவில் பொது மக்களும் பயனடையும்படி விரிவாக்கும் திட்டத்தைக் கொண்டுள்ளனர். இவரின் “சுருட்டுக்கடை” என்ற சிறுகதை ஆங்கிலம், போர்ச்சுகீஷ், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.

சேர்தளம் அமைப்பின் தலைவர் பதிவர் வெயிலான் (எ) சீகாந்த் ரமேஷ் அவர்கள்.


•••••

இளங்கலை வேதியியல் பட்டம் பெற்ற இவர், இன்று எழுத்துத் துறையில் வேதியியல் மாற்றங்களைப் படைத்துவருகிறார் என்று சொன்னால் மிகையாகாது. லேடிஸ் ஸ்பெஷல், இவள் புதியவள், சூரியக்கதிர், நம்தோழி, குமுதம் பக்தி ஸ்பெஷல் ஆகிய இதழ்களில் எழுதிவரும் ஒரு எழுத்தாளர்
குங்குமம் இதழில் பதிவர்கள் குறித்து, சிறுகதை, இந்தியா டுடேவில் ரஜினி குறித்து, குமுதம் ஹெல்த் இதழில் குறிப்புகள் என பல தளங்களில் தமது எழுத்தைப் படைத்து வருபவர். குமுதம், ஆனந்தவிகடன், அவள் விகடன், குங்குமம், கல்கி, யுகமாயினி, தேவதை, சமுதாய நண்பன், மல்லிகை மகள், லேடீஸ் ஸ்பெஷல் ஆகிய இதழ்களில் இவரது கவிதைகள் வெளி வந்திருக்கின்றன.

சும்மா, தேனூஸ் ரெசிப்பிஸ், டைரிக் கிறுக்கல்கள் என மூன்று வித்தியாசமான வலைப்பக்கங்களை வைத்திருப்பவர். லேடீஸ் ஸ்பெஷல் இதழில் 20க்கும் மேற்பட்ட பதிவர்களை அறிமுகப்படுத்தியவர். திண்ணை, உயிரோசை, கீற்று, வார்ப்பு, வல்லினம், அதீதம், முத்துக்கமலம், பூவரசி, சுவடு, புதிய ழ, ஊடகம், கழுகு மற்றும் இளமை விகடன் ஆகிய இணைய இதழ்களில் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன. இதழ்களுக்காக இதுவரை போராடி  ஜெயித்த 16 பெண்கள் குறித்த கட்டுரை,  10  மருத்துவ விழிப்புணர்வுக் கட்டுரைகள்.,  22 பேட்டிகள்  என தொடர்ந்து ஆற்றலோடு செயல்பட்டு வருபவர். சிறப்புப் பேச்சாளராக பல மேடைகளில் பேசி வருபவதோடு, கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் பேட்டி, கலைஞர் தொலைக்காட்சியில் யுத்தம் செய் படத்திற்காக இயக்குனர்கள் மிஷ்கின், சேரனோடு கலந்துரையாடல், விஜய் தொலைக்காட்சியின் நீயாநானா, பொதிகை தொலைக்காட்சியில் காரசாரம் நிகழ்ச்சியில் பங்கேற்பு என தொடர்ந்து ஊடகங்களில் பங்கெடுத்து வருபவர்.
எழுத்தாளர், கவிஞர், பதிவர் தேனம்மை லஷ்மணன் அவர்கள்.


••••••

ஜென் தத்துவம் மீதான ஆர்வத்தினால் ஒரு ஜென் குருவின் பெயரை புனைப்பெயராக வைத்துக்கொண்டவர். புனைப்பெயர் ஒரு பெண்ணின் பெயர் போல் இருப்பதால், ஆணாக இருந்துகொண்டு ஒரு பெண் அடையும் துன்பங்களைக் கூடக் குறைய அனுபவித்தவர். தமிழகத்தின் வடமேற்கு நகரான கோவையில் பிறந்து, தற்சமயம் வடகிழக்கு முனையான சென்னையில் வாசம்புரிபவர். கோவை தூயமிக்கேல் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பு. ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் இளங்கலை தொழில்நுட்ப பட்டயப்படிப்பு எனக் கல்வி கற்று சில காலம் பொறியாளராக ஏசிசி மற்றும் ராம்கோ சிமென்ட் நிறுவங்களில் மின்னியல் துறையில் பணியாற்றியவர்.

ஒரு சிறிய விபத்தினால் புத்தக நிறுவனமொன்றில் விற்பனைத்துறையில் இணைந்து ஆறரை ஆண்டுகள் பணிபுரிந்து, பின் வெவ்வேறு நிறுவனங்களில் விற்பனைப் பிரதிநிதியாகப் பணியாற்றியவர். இறுதியாக இன்டல் மைக்ரோ பிராசசர் நிறுவனத்தின் உப நிறுவனத்தில் தமிழக விற்பனைப் பிரிவில் பணியாற்றிபோது தொடங்கிய வலைப்பக்கத்தில் மனதிற்கினியதாக நினைத்ததையெல்லாம் எழுதி குவித்தவர். எழுத்தாளர் பா.ராகவனின் நட்பு மற்றும் அவருடைய வழிகாட்டுதலில் எழுத்தின் மீதான கூடுதல் மதிப்பினையும் ஈர்ப்பையும் பெற்று பத்திரிகை துறையின் மீது ஆர்வம் கொண்டவர்.

அவர் மிகவும் மதிக்கின்ற எழுத்தாளுமை மாலன் அவர்களின் உதவியோடு புதியதலைமுறையில் நிருபராக இணைந்து, இரண்டு ஆண்டுகள் பூர்த்தியான நிலையில் புதியதலைமுறையில் மூத்த நிருபராக பதவி உயர்வு பெற்றுள்ளார். சிறுகதைகள் மீது கொண்ட தணியாத ஆர்வத்தினால் தொடர்ந்து ஆனந்தவிகடன், சூர்யக்கதிர், தினகரன் வசந்தம் மாதிரியான ஜனரஞ்சக பத்திரிகைகளில் சிறுகதைகளை எழுதிவருகிறார். இரண்டாண்டுகளுக்கு முன்பு குமுதம் வெளியிட்ட டாப் டென் பதிவர்களில் ஒருவனாக இடம்பிடித்தார்.

பொழுது போக்கே ஒருவருக்கு முழுநேர தொழிலாக அமைவது மிகச்சிலருக்கே அமையும். இயற்கையிலேயே எதையாவது தேடிக்கொண்டும் ஆராய்ந்துகொண்டும் இருக்கிற இவருக்கு ஊடகப்பணி சரியான தீனியாக அமைந்தது. வெவ்வேறு விதமான மனிதர்களையும் நிகழ்வுகளையும் பிரச்சனைகளை எல்லாவித கோணத்திலும் அணுக அவரைப் பயிற்றுவித்துள்ளது. ''பழனியை சேர்ந்த இருளாயி என்னும் ஏழை மாணவி குறித்து எழுதியபோது ஒருலட்ச ரூபாய்க்கு மேல் நிதியுதவியும் அவருடைய கல்விக்காக பல்வேறு மனிதர்கள் உதவ முன்வந்ததையும்'' தன் வாழ்நாளில் செய்த பெரும் சாதனையாக  நினைப்பவர். யானைகள் குறித்து புதியதலைமுறையில் வெளியான ஆராய்ச்சிக் கட்டுரையை படித்து அவருடைய சிறுவயது கதாநாயகன் இறையன்பு ஐஏஎஸ் அவர்களால் நேரில் பாராட்டுப் பெற்றவர்.  கடன்தொல்லை தாங்காமல் அநாதை போல் சென்னைக்கு வந்த வருக்கு இன்று ஆயிரக்கணக்கான நண்பர்களை  இணையம்தான் பெற்றுக்கொடுத்திருக்கின்றது.

வலைபதிவர், இளைஞர், பத்திரிக்கையாளர், சிறுகதை எழுத்தாளர் அதிஷா (எ) வினோத் குமார் அவர்கள்.



••••••

தமிழகத்தில் பிறந்து வளர்ந்து பிழைப்பிற்காக பெங்களூரு நகருக்கு புலம்பெயர்ந்தவர். யாஹூ பன்னாட்டு நிறுவனத்தில் பணி என்றாலும் தாகமும் மோகமும் எழுத்தின் மேலும் நிழற்படங்களின் மேலும்தான். நிழற்படங்கள் குறித்து நிரம்பி வழிந்த ஆர்வத்திற்கு தமிழில் எந்த நூல்களும் தீனி போடததால் நண்பர்களோடு இணைந்த ஒரு கூட்டு முயற்சியாகத் துவங்கிய தளம் தான் photography-in-tamil. செல்லமாக அழைக்கப்படுவது PIT என்று.
PIT வலைதளத்தை நிழற்படங்கள் குறித்து தமிழில் கற்றுத் தரும் ஒரு கல்லூரி என்றே சொல்லலாம். அதை நண்பர்களுடன் சேர்ந்து கிட்ட தட்ட நான்காண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பதே பெரிய சாதனை என்றே சொல்லலாம்.

வித்தியாசமான நிழற்படங்களை கடின உழைப்பில் பதித்து வரும் இவர் கவிதைகள், கட்டுரைகள் எழுதுவதிலும் வல்லமை கொண்டவர். இதுவரை கல்கி தளத்தில் இரண்டு முறை  இவரின் நிழற்படங்கள் வெளி வந்திருக்கின்றன.  அமுதசுரபி இதழில் ஒருமுறையும், வடக்குவாசல் இதழில் ஒரு முறையும் இவர் எழுதிய கட்டுரை வந்திருக்கிறது.

பதிவர் நிழற்பட நிபுணர் ஜூவ்ஸ் (எ) அய்யப்பன் அவர்கள். 


••••••

எழுத வந்ததை ஒரு விபத்து எனச் சொல்லும் இவர் கடலூர் மாவட்டத்தைச் சார்ந்தவர். வடமலை – ஜெயலட்சுமி தம்பதிக்கு முதல் மகனாய்  பிறந்தவர். பொதுஜனத் தொடர்பு இதழியல் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தாலும், கடந்த 15 ஆண்டுகளில் 25க்கும் மேற்பட்ட துறைகளில் பணியாற்றியவர். ஆனாலும் தன்னை அடையாளப்படுத்திக்கொள்வது ஒரு நிழற்பட நிபுணராகவும் ஒளிப்பதிவாளராகவும் தான். 

இதுவரை நான்கு குறும்படங்களை இயக்கியுள்ளவர். துளிர் என்ற குறும்படத்திற்கு மாநில அளவில் மூன்றாம் பரிசு பெற்றவர். சென்னையில் நடைபெற்ற இண்டர்நேசனல் குறும்படப் போட்டியில் இவரது மூன்று குறும்படங்கள் தேர்வு செய்து திரையிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் தொலைக்காட்சியில் பேட்டி, விஜய் தொலைக்காட்சி நீயா நானாவில் பங்கேற்பு என ஊடகங்களில் தமது கருத்துகளை முன்வைத்திருப்பவர். காதல் மணம் புரிந்து சமீபத்தில் யாழினி எனும் அழகிய குழந்தைக்குத் தந்தையானவர்.
ஒரு வலைப்பதிவராக ஜனரஞ்சகமாக எழுதும் வல்லமை கொண்டவர். உலகம் முழுதும் பல நாடுகளில் தனக்கென தமிழ் வாசிப்பாளர்களைக் கொண்டவர். குறிப்பாக வலையுலகத்தில் இவரின் உலகத்திரைப்படங்கள் பார்வை, சமூக அக்கறை கொண்ட இடுகைகள் அதிகம் வாசிக்கப்படுபவை. 

ஒரு சாமானியன் போக்கில் தமிழ் வலைப்பதிவு உலகத்தில் மிகச்சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஜாக்கிசேகர் (எ) தனசேகரன் அவர்கள். 
 
•••••

தமிழ் வலைப்பதிவு உலகத்தில் மிக நீண்ட கட்டுரைகளுக்குச் சொந்தக்காரர், அதே சமயம் அதை ருசிகரமாக, விரிவாகவும் எழுதக்கூடியவர். இவர் கடந்து வந்த காலத்தைச் சற்றே மீட்டிப்பார்த்தால், நிறைய மேடு பள்ளங்களைக் கடந்து வந்தவர் என்றே சொல்லலாம். திரைத்துறையின் மீது கொண்டிருந்த காதலால்  12 ஆண்டுகளுக்கு முன்பே இயக்குநர்கள் கரு.பழனியப்பன், தரணி, பரதன், சி.ஜெரால்டு ஆகியோருடன் கொண்டிருந்த பழக்கத்தை வைத்து திரைத்துறையில் நுழைய விரும்பியவர்.

இற்கையாய் அவருக்கிருந்த குறைபாட்டினால் அதில் வெற்றிகாண முடியாவிட்டாலும், பிற்காலங்களில் இரண்டு திரைப்படங்கள் மற்றும் சில தொலைக்காட்சித் தொடர்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றும் வாய்ப்புப் பெற்றவர். திரைத்துறையில் நுழைய முடியாததினால் முதலில் பத்திரிக்கைத்துறையில் நுழைந்து முதல் 4 வருடங்கள் தமிழன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில்   அனைத்து வேலைகளையும் கவனித்து தம்மைச் செம்மைப் படுத்திக்கொண்டவர். பத்திரிகைத்துறையின் வாயிலாக சின்னத்திரைக்குள் செய்திகளை வழங்குபவராக நுழைந்து, இயல்பிலேயே கொண்டிருந்த தமது திரைத்துறை ஆர்வத்தை வைத்து கதை, திரைக்கதை, வசனம் எழுதும் வாய்ப்புபெற்று அதனைப் பயன்படுத்திக் கொண்டவர்!

மின் பிம்பங்கள் நிறுவனத்தில் 6 ஆண்டு காலம் மற்றும் பிரமிட் சாய்மீரா நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவத்தின் மூலம் தொலைக்காட்சி தொடர்கள் தயாரிப்பில் அனைத்தையும் கற்றுக் கொண்டவர். பின் ஜெயா டிவியில் பணியாற்றி, தற்போது புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பணியைத் தொடர்கிறார். தமது தந்தையின் அரசியல் ஆர்வத்தையொட்டி, அவர் பழக்கிய வாசிக்கும் பழக்கத்தின் வாயிலாக, வளர்த்துக்கொண்ட அரசியல் ஆர்வத்தின் பேரில் நீண்ட நெடும் அரசியல் கட்டுரைகள் எழுதுவதில் வல்லவர்.

தமிழ்ஸ்டூடியோ.காம் வழங்கிய 2009-ம் ஆண்டிற்கான சிறந்த வலைப்பதிவருக்கான விருதைப் பெற்றவர்.  தமிழ்மணம் வழங்கிவரும் பல்வேறு வகைகளின் கீழ் சிறந்த வலைப்பதிவுகளுக்கான விருதுகளை தொடர்ந்து மூன்றாண்டுகளாக பெற்று வந்துள்ளவர்..! சின்னத் திரை, பெரிய திரை அமைப்புகளில் ஆயுட்கால உறுப்பினராக உள்ளவர். குறும்பட வட்டம், மற்றும் சமூகம் சார்ந்த பல்வேறு அமைப்புகளின் நிகழ்ச்சிகளுக்குத் தக்கவாறு எனது பங்களிப்பை தொடர்ந்து வழங்கி வருகின்றவர்..

தமிழ் வலைப்பதிவுலகத்தில் முக்கியப் பங்காற்றிவரும் உண்மைத் தமிழன் (எ) சரவணன் அவர்கள். 

•••

  ©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.

TOPO