Wednesday, March 31, 2010

பதிவுலகத்துக்கு பணிவான வேண்டுகோள்

இனிய தோழமைக்கு..

வழக்கத்தை மீறி இந்த கோடை மிகக் கடுமையாக இருப்பது போலவே தோன்றுகிறது. நாம் பயன்படுத்தும் நீருக்கு மிகப் பெரிய தட்டுப்பாடு வரும் என்பதில் சந்தேகம் இல்லை. உடனடியாக நம்மால் செய்ய முடியும் என்பது நாம் பயன்படுத்தும் நீரில் சிக்கனத்தைக் கடை பிடிப்பதே.


அனைத்து பதிவுல நண்பர்களையும் பணிவோடு வேண்டுவது, தண்ணீர் சிக்கனம் குறித்து முடிந்தவரை உங்கள் தளங்களில் எழுதுங்கள். இது படிப்பவர்கள் மத்தியில் மிக நிச்சயமாக ஒரு தாக்கத்தைக் கொண்டு வரும். பதிவுகளில் நாம் பகிர்ந்து கொள்ளும் விசயங்களை அடிப்படையாகக் கொண்டு, பொதுமக்களைச் சென்றடையும் வகையில் ஈரோட்டில் ஈரோடு தமிழ்ப் பதிவர்கள் குழுமம் சார்பாக தண்ணீர் சிக்கனம் குறித்த பிரசுரங்களை வெளியிட்டு அனைத்து பொதுமக்களிடம் சென்றடையச் செய்யலாம் என ஆலோசித்து வருகிறோம்....



இணைந்த கரங்கள் மூலம் ஒரு நல்முயற்சியை முன் வைக்கின்றோம். உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

தண்ணீர் சிக்கனம் குறித்த இயற்கை மகள் அவர்களின் இடுகை ஒரே ஒரு லிட்டர் - ப்ளீஸ்

Thursday, March 18, 2010

'பிடிபடாத பிளாஸ்டிக் பூதம்... அச்சம் தராத அணு உலை அரக்கன் !'

தங்களின் சந்தோஷத்துக்காக சுற்றுலா செல்பவர்கள் ஒரு வகை! உலக நன்மைக்காக சுற்றுப்பயணம் மேற்கொள்பவர்கள் ஒருவகை! தாமரை... இதில் இரண்டாவது வகை!

சுற்றுச்சூழல் சீர்க்கேடு குறித்து உலகமெல்லாம் சுற்றி வரும் தாமரையைப் பற்றி அறியும்முன், அவர் கணவர் சீனிவாச ராவ் பற்றி ஒரு சிறு அறிமுகம்...

இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன், தன் நண்பன் ஞானசேகரனுடன் இணைந்து, உலகத்தில் உள்ள அணு ஆயுதங்களை அகற்ற வேண்டி 65 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் சுற்றுப் பயணம் செய்து, உலகத் தலைவர்கள் பலரையும் சந்தித்து தன் பதற்றத்தை பதிவு செய்தவர் சீனிவாச ராவ். 1987-ம் வருடம், அக்டோபர் ஐந்தாம் தேதியை, சீனிவாசராவ் மற்றும் ஞானசேகருடைய தினமாக பிரகடனம் செய்தது அமெரிக்கா! அந்தப் பெருமையைப் பெற்ற முதல் இந்தியர்கள் இவர்கள்தான்.

இத்தனை வருடங்களாக தேக்கமின்றி தொடரும் சீனிவாச ராவின் பயணத்தில், தன்னையும் தன் குழந்தைகளையும் இணைத்துக் கொண்டுள்ளவர்தான் தாமரை! இவர், பிரபல அரசியல்வாதியான பேராசிரியர் தீரனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது!

"எங்களின் இத்தனை வருட சுற்றுப் பயணத்தில், சமீபத்தில் கோபன்ஹேகனில் நடந்த பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்துகொண்ட அனுபவம், 'இன்னும் கடக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது' என்ற தெளிவை, பதற்றத்தை, பயத்தை தந்தது!'' என்று ஆரம்பித்தவர், அந்த மாநாட்டின் முக்கிய அம்சங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

"அந்த மாநாட்டு அரங்குக்கு அருகிலேயே, எங்களைப் போல உலகத்தின் பல பகுதிகளில் இருந்தும் திரண்ட சமூக நல அமைப்புகள், ஆர்வலர்கள் நடத்திய 'மக்கள் மாநாடு (The People Summit) நடந்தது. சுற்றுச்சூழல் சீர்கேடுகள் மற்றும் பருவ நிலை மாற்றத்தின் விளைவுகளை வலியுறுத்திய அந்த நண்பர்களுடன் நானும் கலந்துகொண்டேன். நம் பூமியை பாதுகாக்க வேண்டிய மிகமுக்கிய தருணத்தில் நாம் இருப்பதை அந்த மாநாட்டின் மூலம் உணர்ந்தேன்!

நடந்து முடிந்த மாநாட்டை 'வெற்றி' என்று வகைப்படுத்துவது சரியாக இருக்காது. அதற்கு காரணம், அமெரிக்காவைக் கட்டுப்படுத்தக் கூடிய எந்தவிதமான திட்டவட்ட தீர்வும் இல்லாததே. அதுமட்டுமன்றி, இந்த கோபன்ஹேகன் மாநாட்டின் தீர்மானங்கள் அனைத்தும், 26 முக்கிய நாடுகளை மட்டுமே கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. ஐ.நா. அமைப்பின் உறுப்பினர்களான பல மூன்றாம் உலக நாடுகள் புறந்தள்ளப்பட்டு விட்டன.



கூடவே, 'இந்தியாவும் சீனாவும் தங்களுடைய பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே கருத்தில் கொண்டு கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் எந்தவிதமான சட்டதிட்டத்தையும் உருவாக்காத வகையில் இந்த மாநாட்டை தங்களுக்கு சாதகமாக திருப்பி குழப்பம் செய்து விட்டன' என்று வளர்ச்சியடைந்த நாடுகள் தற்போது குற்றம்சாட்டி வருகின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரை, பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது என்ற அவசியமான கட்டுப்பாட்டைக்கூட நம் அரசும் மக்களும் ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. அந்த பிளாஸ்டிக் பைகள்தான் கழிவுநீர் வாய்க்காலில் சென்று நீர் செல்வதை தடுத்து விடுகிறது. தேங்கிய சாக்கடை நீரின் வாயிலாகத்தான் பல்வேறு உயிர்க்கொல்லி நோய்கள் பரவுகின்றன என்பதை நாம் சரிவர இன்னும் உணராமல் இருக்கின்றோம். கழிவு வாய்க்கால்கள் அடைத்துக் கொள்வதால், மழைக் காலங்களில் நமது நகரங்கள் அனைத்தும் வெள்ளப் பெருக்காகி விடுவதை பார்த்து வருகின்றோம்.

இந்த சிறுசிறு விஷயங்களில்கூட கட்டுப்பாடு பழகாத நாமும், நமது அரசும், அணு உலைகளால் ஆபத்து, கரியமிலவாயு கட்டுப்பாடு, பருவநிலை மாறுபாடு, புவிவெப்பநிலை உயருதல் என்கிற அதிபயங்கர ஆபத்துகளையெல்லாம் எப்படி சரிவர புரிந்துகொள்ளப் போகிறோம்?" என்று கேள்வி எழுப்பியவர்...

'அதேசமயம், ஐரோப்பிய நாடுகளில் மக்களிடையே இதுபற்றிய விழிப்பு உணர்ச்சி தற்போது அதிகமாகவே உள்ளது. அதை வலுப்படுத்தும் விதமாக அந்த நாட்டின் அரசுகளும் புவி வெப்பமடைதலுக்கு எதிரான கடுமையான சட்டதிட்டங்களை வரையறுத்துள்ளன. காலம்கடந்தாலும்கூட, இது ஒரு ஆரோக்கியமான மாற்றத்துக்கான அறிகுறியாக இருக்கிறது என்பதில் என்னைப் போன்ற சூழல் ஆர்வலர்கள் பெருமை கொள்கிறோம்" என்று புன்னகை பூத்தார்.

தொடர்ந்தவர், "இயற்கையின் போக்கை மாற்றிய மனிதனின் தான்தோன்றித்தனமான செயல்பாடுகளினால், கரியமில வாயுக்களின் அளவு கூடி, இன்றைய பூமியின் தட்பவெப்ப நிலை மாறிப் போயிருக்கிறது. விஞ்ஞானிகளின் எச்சரிக்கையின்படி தற்போதைய கரியமில வாயுவின் விகிதாச்சாரம் அண்டவெளியில் சேர்வது தொடருமானால் 2030-ம் ஆண்டில் நம் பூமியின் வெப்பநிலை உயர்ந்து, அது ஒட்டுமொத்த உயிரினங்களையும் பாதிக்கும் என்பது அதிர்ச்சியான உண்மை.

அதேபோல, அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகளும் பனித்தகடுகளும் உருகி வருவதும் நமக்கு தெரிந்ததுதான். அதன் விளைவான கடல்மட்ட உயர்வினால் உலகில் உள்ள எத்தனையோ தீவு நாடுகள் கடலில் மூழ்கவிருக்கின்றன என்பதை இந்தப் பயணத்தில் புரிந்துகொள்ள முடிந்தது. கூடவே, கடுமையான பஞ்சங்களை ஏற்படுத்தக்கூடிய கொடும் வெயிலும், கடும் மழையும், பலத்த சேதம் விளைவிக்கும் பெரும் சூறாவளிகளும் உருவாகி உலக மக்களை பாதிப்படைய வைக்க இருக்கின்றன என்பதை நினைக்கும்போதே நெஞ்சு பதறுகிறது. ஆனால், நம் அலட்சியத்தால் நாம் அவற்றை வரவேற்றுதான் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம்!'' என்று சொன்னவர், நம் அரசு எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி பேசினார்.

"உலகில் நீண்ட கடலோரத்தைக் கொண்ட நாடுகளில் நம்முடைய நாடும் ஒன்று. அதனால் வெப்பநிலை உயர்வால் விளையும் கடல்மட்ட உயர்வினால் நாம் பெருமளவு பாதிக்கப்படலாம். கடலோர மாவட்டங்களில் உள்ள நிலங்கள் மூழ்கலாம். பக்கத்து நாடான வங்கதேசமும் சந்திக்கவிருக்கும் இப்பிரச்னையால் அங்கிருந்து ஏறத்தாழ நான்கு கோடி மக்கள் 'சுற்றுச்சூழல் அகதிகள்' (Ecological Refugees) என்ற பெயரில் இந்தியாவில் தஞ்சமடையலாம். ஆக, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போதே முடுக்கிட வேண்டும்.

இந்திய நாட்டின் முதுகெலும்பு என ஆண்டாண்டு காலமாகச் சொல்லப்படும் விவசாயிகளின் பிரச்னைகளை சீர்செய்ய வேண்டும். ஆனால், நாமோ மேற்கத்திய நாடுகள் செய்த தவற்றைதான் செய்துகொண்டிருக்கிறோம். பழங்குடி மக்களின் நிலங்களையும், விவசாய நிலங்களையும் பெரும் தொழிற்சாலைகளுக்காக கையகப்படுத்துகிறோம். அதனால் எழும் பிரச்னைகளை மக்களின் அரசாக நின்று சீர் செய்யாமல், அதிகார அரக்கனாக அடக்குகிறோம்.

பசுமைத் தொழிற்புரட்சியை இந்தியா முன்னின்று தொடங்கும்பட்சத்தில் அது எதிர்கால சந்ததியினரின் பாதுகாப்பான எதிர்காலத்துக்கு வழி வகுக்கும்!'' என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, இனம் புரியாத பயம் ஒன்று நம் மனதைக் கவ்விக் கொண்டதை மறுப்பதற்கு இல்லை!

நன்றி லாவண்யா
நன்றி அவள் விகடன்




Monday, March 1, 2010

வரமாய் வந்த மனைவி...

கையெழுத்துக் கூட ஒழுங்காய் போடத் தெரியாத ஒருவர், சென்னை‍யில் உள்ள பிரபல கல்லூரியில் விஸ்காம் துறையில் வகுப்பெடுக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும்.


கானா விஜி-‍‍ கருத்த தேகம், போலியோவில் பாதிக்கப்பட்டு ஒருகால் ஊனம், பிறப்பின் புனிதம் அறியாமை, பான்பராக் போட்டு குதப்பிக் கொண்டே பேசும் பேச்சு, பரட்டை தலை என பார்ப்பதற்கு பயங்கர தோற்றமாய் தான் முதலில் இருப்பார். அதே சமயம் அவர் பாட்டுக்கு சொத்தையே எழுதி வைக்கலாம்.. அத்தனை தெளிவான தத்துவ பாட்டுகள், ஊர் அறியாத மெட்டுக்கள்.




இரண்டு வருடங்களுக்கு முன், அலுவலக ரீதியாக அவரைச் சந்தித்தேன். அதுவரை என் மனதில் அன்னை தெரசா, பில்கேட்ஸ், பெரியார் என யாரோ என் ரோல்மாடல்களாக இருந்தார்கள். விஜியை சந்தித்த பிறகு அவர் மட்டுமே என் ரோல்மாடல்.. இப்போதும் எப்போதும்.. இனி விஜியுடனான என் சந்திப்பு..


''நம் மெரினா பீச்சாண்டதாங்க... நான் தம்மாத்தூண்டு கொழந்தையா இருந்தப்பவே எங்கம்மா என்னைக் கொண்டாந்து ரோட்டோரமா போய்ட்டு போயிடுச்சாம். பாவம்.... அதுக்கு என்ன கஸ்டமோ! நெனவு தெரிஞ்ச நாள்ல இருந்து அயோத்தி குப்பம் ஏரியால தான் சுத்திக்கினு கெடந்தேன். எனக்கு பேரு ஒன்னும் கிடையாது. விலைமாது தொழில் பார்த்த விஜி அக்காதான் என்னை எடுத்து வளர்த்துச்சு.... கஸ்டமர்‍க்கிட்ட போகும் போதும் என்னை தூக்கிக் கிட்டு போகும். என்னை ஓரமா உட்கார வெச்சுட்டு ரெண்டு மணி நேரம் கழிச்சு வரும் போது பிரியாணி வாங்கி வந்து தரும்.. அதுவும் ஒரு நாள் நோய் வந்து செத்துப் போச்சு...'தா விஜி கூட சுத்திக் கிட்டு இருப்பான்னேன்னு எனக்கும் விஜின்னே பேரு வந்திடுச்சு..


விஜி அக்கா செத்து அதை சுடுகாட்டுக்கு தூக்கிக் கிட்டு போகும் போது, ஒருத்தர் கானா பாட்டு பாடிக்கிட்டே சுடுகாடு வரைக்கும் வந்தார்.. அன்னிக்குத்தான் முதன் முதலா எனக்கு கானா பாட்டுமேல ஆர்வம் வந்திச்சு... எப்படா பொணம் விழும்,கானா பாட்டு கேட்ப்போம்ன்னு சுடுகாட்டில திரிவேன்.. பொணம் எரிப்பேன்... கையில் காசு இல்லாம சின்ன சின்ன திருட்டு வேலை செஞ்சிருக்கேன்.. போலீஸ் ஸ்டேஷனெல்லாம் நமக்கு அத்துப்படி..என்று தன்னைப் பற்றி முன் உரை தந்தவர்.. தன் மனைவியைப் பற்றி சொன்னார்..




''ராயபுரத்தில ஒரு சேட்டம்மா இருக்கும். அம்மாவாசை பவுர்ணமி அன்னிக்கு என்னை மாதிரி ஏழைங்களை கூப்பிட்டு சோறு போடும்.. கையில் காசு குடுக்கும். எனக்கு அந்தம்மான்னா மரியாதை.. ஒருதபா ஜெயிலுக்கு போய்ட்டு வந்து ''எங்கடா சேட்டு வூட்டு அம்மான்னு விசாரிச்சா, கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில் படுத்து கிடக்குதுன்னாங்க.. போனா உசிர் போயி.. தூக்கிப் போட ஆளில்லாம கிடக்குது.. ஏன்ன்னு கேக்க யாரும் இல்லை.. யாரோ ஒரு சேட்டுக்கு மூணாவது பொண்டாட்டியா இருந்ததாம்.. அவனும் ஓடிப் போய்ட்டானாம்.. மனசு கேக்கலை எனக்கு.. அதுவரைக்கும் நான் சேர்ந்து வைச்சிருந்த இரும்பை கடையில் போட்டு, அங்கங்க அல்லு பொறுக்கி காசு சேர்த்து அந்தம்மாவை அடக்கம் செஞ்சேன்.. அப்போ அந்தம்மா கூடவே இருந்த பொண்ணுதான் என் பொண்டாட்டி சாந்தி... பக்கத்திலேயே நின்னு அழுதுக்கிட்டு இருந்திச்சு... அடக்கம் பண்ணிட்டு திரும்பி பார்த்தா என் கூடவே நின்னு அழுதுக்கிட்டு இருக்கு.. உன் சொந்தக்காரங்க யாராவது இருக்காங்களான்னு சொல்லு. அவங்க வீட்டில விடறேன்‍ன்னு கேட்டேன். யாரும் இல்லைன்னு பரிதாபமா சொல்லுச்சு.. சரி என் கூட வர்றியான்னு கேட்டதும் போதும் என் கூடவே வந்திருச்சு" என்று சொல்லியவாறே தன் மனைவியியை அறிமுகம் செய்து வைத்தார்.. கணவரின் வார்த்தைகளை தொடர்ந்தார் சாந்தி..



''அம்மா செத்ததும் சொந்தம்ன்னு சொல்லிக்க யாரும் இல்ல... எங்கம்மாவை அடக்கம் பண்ணின இவர் என்னையும் பார்த்துக்குவாருங்கிற நம்பிக்கையில் இவர் கூட வந்தேன். ஆரம்பத்தில சுடுகாடு பக்கத்தில்தான் இருப்போம். அப்புறம் நான் பயப்படறதைப் பார்த்துதான் வடபழனி பக்கத்தில வீடு பார்த்து குடி வெச்சார். இவரைப் பார்க்கறப்பெல்லாம் எனக்கு ஆச்சர்யமா இருக்கும். பெயர் தெரியாம ஒருத்தங்க இருப்பாங்களா என்ன? கூடவே தங்கியதில் ரெண்டு பேருக்கும் புடிச்சுப் போச்சு. ஒண்ணா குடித்தனம் நடத்த ஆரம்பிச்சோம். ஆரம்பத்தில இவரைப் பார்க்கவே எனக்கு பயமா இருக்கும். மணடை ஓடு, கோடாங்கி இதெல்லாம் வீட்டில வெச்சிருப்பாரு. திடிர்ன்னு காணாம போயிருவாரு, தேடின்னா சுடுக்காட்டில் படித்திருப்பாரு.. கேட்டா எனக்கு இங்கதான் தூக்கம் வருதுன்னு சொல்வார். கெஞ்சி, கொஞ்சி, அழுது ஒருவழியா அவரை வழிக்கு கொண்டு வந்தேன்" என்றபடியே விஜியைப் பார்க்க மிச்ச கதையை அவர் தொடர்ந்தார்.


''தெனமும் ஒழுங்கா குளிக்கணும்.. சட்டை போடாம வெளிய போகக் கூடாது, கிடைக்கிற காசை ஒழுங்கா சேர்த்து வைக்கணும், இதெல்லாம் சொல்லிக் குடுத்தது எனக்கு சொல்லிக் குடுத்தது அவள்தான். சாந்தி பேச்சக் கேட்டுத்தான் சுடுகாட்டுக்குப் போறதை நிறுத்தினேன்.. என் பாட்டு நல்லா இருக்குங்கிறதால வீதி நாடகத்தில் நடிக்கிற வாய்ப்பு வந்தது. அப்புறம் ''கூத்துப்பட்டறையில் சேர்ந்தேன்"" என்றவருக்கு அதன் பின் வாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்திருக்கின்றன..


இவரது வீதி நாடகங்களுக்கு பரிசும் பட்டமும் தேடி வந்திருக்கிறது. இவரைப் பற்றி டாக்குமண்ட்ரி படமும் வெளியாகியிருக்கிறது. தனியாக ஒரு நாடகத்தை எழுதி இயக்கியிருக்கிறார். மனைவியில் முயற்சியில் கையெழுத்து போடக் கற்றுக் கொண்டார். கால் ஊனத்தையும் தாண்டி டூவீலர் ஓட்டக் கற்றுக் கொண்டார். இப்போது இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள்.. தான் பட்ட கஷ்டத்தை தன் மக்களும் படக் கூடாது என்று பெரிய பள்ளி ஒன்றில் தன் மூன்று குழந்தைகளையும் படிக்க வைக்கிறார்.


இன்னிக்கு கல்லூரிகளில் அவர் சொல்லித் தரும் கானாப்பாடல்கள்தான் அன்று சுடுகாட்டில் பாடப்பட்டது... நேரமும் காலமும் கூடி வர இவருக்கு இன்று கைத்தட்டல் கிடைக்கின்றது..


வெளிநாட்டில் நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பு வருகிறது விஜிக்கு.. ஆனால் இவர் பெயர் மற்றும் அப்பா அம்மா பெயர் தெரியாததால் ரேஷன் கார்டு தர மறுத்துவிட்டது அரசாங்கம். பாஸ்போட்டுக்கும் அதே நிலைதான். இருப்பினும் தான் கடந்து வந்த இவ்வளவு தூரத்திக்கும் வழிதுணையாக வந்த மனைவி‍‍க்கு நன்றி சொல்லியே மீதமிருக்கும் நாட்கள் நகர்கிறது விஜிக்கு..


(கட்டுரை பற்றிய குறிப்பு): நான சந்தித்த சமயம், விஜிக்கு சினிமா படத்தில் வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன. அதன் பின் சில போன் உரையாடல்கள் தொடர்ந்தன.. சில மாதங்களில் அதுவும் நின்று போனது.. இருப்பினும் நான் சந்தித்த மனிதர்களில் மறக்க முடியாதவர் இந்த விஜி. அவரிடம் நான் கற்றுக் கொண்ட பாடம் இதுதான். பெயர் தெரியாமல் அனாதையாக திரிந்து வளர்ந்தவர் விஜி. அவரால் இன்று ஒரு கல்லூரியில் ஆசிரியராகி இருக்க முடிகிறது. அப்படியென்றால் நாமெல்லாம் சொக்க தங்கம். சொந்த வீடு, அம்மா அப்பா, அடிப்படைக் கல்வி, கொஞ்சம் போலவேனும் காசு, இன்னும் இன்னும்,, நமக்கென்ன குறை... நிச்சயமாய் இன்னும் சாதிக்கலாம். எனக்குள் விஜி விதைத்த விதை இதுதான்).


எழுதியது

சுபிவண்யா

அவரது வலைப்பூ (பிரேமா மகள்)




  ©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.

TOPO