Saturday, August 28, 2010

வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை...

தினமலர் நாளிதழில் சேர்தளம் பற்றிய கட்டுரைக்குப் பின், ஆர்வத்துடன் தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும் தொடர்பு கொண்ட நண்பர்களுக்கு உதவும் வகையில், வரும் 29 ஆகஸ்டு திருப்பூர் வலைப்பதிவர் குழுமம் - சேர்தளம் சார்பில் வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

இடம் : குமரன் ரோடு, அரோமா உணவகம் எதிரில் உள்ள கட்டிட முதல் மாடியில் (பூர்விகா அலைபேசி அங்காடி / அபி ருசி உணவகம் இரண்டுக்கும் இடையில் செல்லும் பாதையில் வரவும்)


View Larger Map

புதிதாய் தமிழ் வலைப்பதிவுகள் எழுத விரும்புபவர்கள் இதில் கலந்து கொண்டு பயனடையலாம்.

ஏற்கனவே, இது குறித்த அறிவிப்பு சேர்தளம் வலைப்பதிவர் உதவிக் குழுமத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.


நிகழ்ச்சி சிறப்படைய ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்தின் சார்பாக மனதார வாழ்த்துகிறோம்.

Friday, August 20, 2010

மெல்லச் சுழலுது காலம் - புத்தக வெளியீட்டு விழா



வலையுலக நண்பர்களுக்கு வணக்கம். கடந்த சில ஆண்டுகளாய் இவ்வலைப்பதிவில் எழுதிவருபவரும், தமிழ்மணம் நிர்வாகிகளுள் ஒருவருமான திரு.இரா.செல்வராசு அவர்கள் எழுதிய சில இடுகைகள் ஒரு அயலகத் தமிழனின் அனுபவக் குறிப்புக்களாய் “மெல்லச் சுழலுது காலம்” என்று ஒரு புத்தகமாக வடலி பதிப்பகம் (ஆகஸ்ட் 26க்குப் பின் இணையத்தில் வாங்க) வழியாக இம்மாத இறுதியில் வெளி வருகிறது. விவரங்கள் கீழே.


நாள்:
26 ஆகஸ்டு 2010 (வியாழன்)
நேரம்: மாலை 4 மணி

இடம்:
சக்தி மசாலா அறை, கொங்கு கலையரங்கம், சம்பத் நகர், ஈரோடு.

வெளியிடுபவர்:
திரு. காசி ஆறுமுகம், கோவை, நிறுவனர், தமிழ்மணம் திரட்டி

பெறுநர்:
பேராசிரியர் R. சண்முகம், பாரதியார் பல்கலைக் கழகம், கோவை.

இவ்விழாவில் வெளியாகும் பிற நூல்கள்:
முதலீட்டுக் கடலில் முத்தெடுத்த வல்லுநர்கள் - முனைவர். கு. பாலசுப்ரமணி
வெளியீடு: திரு. க. பரமசிவம், மகாராஜா குழுமம்.
பெறுதல்: திரு. ப. பெரியசாமி, லோட்டஸ் ஏஜென்சி

Financial Markets & Institutions – Dr. K. Balasubramani & Dr. T. Chandra Kala
வெளியீடு: திரு. கருணாகரன், துணை வேந்தர், அண்ணா பல்கலை. கோவை
பெறுதல்: திரு. அரங்கண்ணல், ஞானமணி குழுமம், ராசிபுரம்

Futures & Options - Dr. K. Balasubramani & Dr. T. Chandra Kala
வெளியீடு: திரு. C. சுவாமிநாதன், துணை வேந்தர், பாரதியார் பல்கலை. கோவை
பெறுதல்: திரு. C. ராஜா, DSP, திருப்பூர்.



Monday, August 9, 2010

வலைப்பதிவு துவங்குதல் - கருத்தரங்குகள்

அழகிய தருணங்கள், ஒரு கவிதையாய், சாரல் மழைத்துளியின் சிணுங்கலாய், மிக எளிதாய்க் கைகூடும் என்பது மற்றுமொருமுறை நிரூபணமாகியிருக்கிறது. என்னையும் இத்தனை நண்பர்களையும் இணைத்து வைத்த வலைப்பக்கத்தை நம்மையொத்த மனிதர்களிடம் திணிப்போம் அல்லது ஊட்டுவோம் என்பது நீண்ட கால ஆசை…












அப்படிப்பட்ட அற்புத தருணம் இன்று கைகூடியது. நண்பர் பதிவர் பழமைபேசியின் ஈரோடு வருகையை வித்தியாசமாக அமைக்க விரும்பிக் கொண்டிருந்த நேரத்தில் இரு வேறு பொறியியற் கல்லூரிகளில் பணிபுரியும் இரண்டு பேராசிரியர்களிடம் தனித்தனியே பேசும் போது, தங்கள் கல்லூரியில் எதாவது ஒரு நிகழ்ச்சிக்கு நண்பர் பழமைபேசியிடம் இசைவு பெற்றுத் தர இயலுமா என வினவ, நான் வலைப்பதிவுகள் குறித்து உங்கள் மாணவர்களிடம் அவரை வைத்து ஒரு கருத்தரங்கம் நடத்தலாம் என்று கூற, ஒரு வழியாக நிகழ்ச்சி கை கூடி வந்தது.

பெருந்துறை கொங்கு பொறியியற் கல்லூரி











ஆனாலும், பொறியியற் கல்வியில் மூழ்கிய மாணவர்களிடம் ஆங்கிலம் அதிகமாய்க் கோலோச்சும் காலத்தில் தமிழ் பதிவுகள் குறித்த கருத்தரங்கம் எந்த அளவுக்கு வெற்றியைத் தன்வசம் கொள்ளும் என்ற சந்தேகம் மனதில் கனத்தைக் கூட்டிக் கொண்டேயிருந்தது.











ஒரு வழியாய் திட்டமிட்டபடி 07.08.2010 காலை பத்து மணிக்கு பெருந்துறை கொங்கு பொறியற் கல்லூரிக்கு சென்றடைந்தோம்.


கணினி தொழில் நுட்பத் தலைவர் முனைவர். ஜெயபதி, கணினி பிரிவுகள் முதன்மைத் துறைத் தலைவர் முனைவர். பாலமுருகன், இந்திய கணினி சமூக அமைப்பு (CSI) ஒருங்கிணைப்பாளர் முனைவர்.கௌசல்யா மற்றும் பேராசிரியை. ஜெயந்தி ஆகியோர் முன்னிலையில் இந்திய கணினி சமூக அமைப்பு (CSI) உறுப்பினர்கள் (கணினி அனைத்துப்பிரிவுகளையும் சார்ந்தவர்கள்) சுமார் 260 பேருக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. நண்பர். பழமைபேசி அவர்கள் முதலில் வெளிநாட்டு கல்வி, வேலை வாய்ப்புகள் குறித்து சிறிது உரையாற்றியபின் தமிழில் வலைப்பக்கங்களின் அவசியம், அதை உருவாக்குதல், அதில் இடுகைகள் மூலம் பங்கேற்பு என்பது குறித்து மிக விரிவாக கருத்தரங்க உரையாற்றினார். பொறியியற் கல்லூரி மாணவர்கள் மத்தியில் தமிழ் வலைப்பதிவுகள் குறித்த விளக்கங்கள் மிகப் பெரிய அதிர்வை ஏற்படுத்தியது.














கருத்தரங்கில் குறிப்பிட்ட சில வலைப்பக்கங்கள், திரட்டிகள், ஈரோடு குழுமம் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. வலைப்பக்கங்களில் என்னுடைய பங்கு என்ற தலைப்பில் நானும் சிறிது உரையாற்றினேன்.


நிகழ்ச்சியில் மிகவும் அசந்து போன துறைத்தலைவர் முனைவர். ஜெயபதி நிகழ்ச்சி நிறைவிற்குப் பின் கொங்கு வளாகத்தில் இயங்கும் கொங்கு பண்பலையில் உடனடியாக ஒரு செவ்விக்கு (பேட்டி) ஏற்பாடு செய்து பழமைபேசி மற்றும் என்னிடம் செவ்வி எடுத்து பதிவு செய்யப்பட்டது. சட்டென திட்டமிட்ட நிகழ்வில் எந்த முன் தயாரிப்புமின்றி செவ்விக்காக கேள்விகளை வீசிய இரண்டு மாணவிகளின் திறமை மிகுந்த வியப்பை ஏற்படுத்தியது.


சென்னிமலை
எம்பிஎன்எம்ஜெ (MPNMJ) பொறியியல் கல்லூரி

நிகழ்ச்சியின் நிறைவில் கொங்கு வளாகத்தில் திளைத்த மகிழ்ச்சியுடன், அடுத்த நிகழ்ச்சியை நடத்த சென்னிமலைக்கு கிளம்பினோம். நிகழ்வு சென்னிமலையில் இருக்கும் எம்பிஎன்எம்ஜெ (MPNMJ) பொறியியல் கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை (ECE) சார்ந்த 263 மற்றும் 30க்கும் மேற்பட்ட பேராசிரியர்களுக்கு நடத்தத் திட்டமிட்டிருந்தோம்.













தாளாளர் திருமதி. வசந்தா சுத்தானந்தன், முதல்வர் (பொறுப்பு) பேரா.சண்முகசுந்தரம், மிகுந்த முன்னேற்பாடுகளுடன் திட்டமிட்டிருந்த துறைத்தலைவர் பேரா. பார்த்திபன், விரிவுரையாளர்கள் திரு.மோகன், திரு. கோபி, திரு. மகேஷ் ஆகியோர் நன்றிக்கு உரியவர்கள்.

உரிய நேரத்தில் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. நண்பர். பழமைபேசி அவர்கள் அந்த மாணவர்களிடமும் வெளிநாட்டுக் கல்வி, வேலை வாய்ப்புகள் குறித்து உரையாற்றிய பின் தமிழ் வலைப்பதிவுகள் குறித்து மிக நேர்த்தியாக, மிக அற்புதமாக, தெளிவாக கருத்துரை வழங்க, ஆங்காங்கே மாணவர்களிடமிருந்து கேள்விக்கணைகள் பறந்தன. மாணவர்களிடையே ஊடுருவி, ஒன்றாய் கலந்து நண்பர் மிக அற்புதமாக நிறைவு செய்தார்













நிகழ்ச்சி தொகுப்புரையை வழங்கிய ஐந்து மாணவ, மாணவியர்களின் தயாரிப்பு மெச்சத் தகுந்த அளவில் இருந்தது. ஒரு மனிதனின் சமூகக் கடமை மற்றும் அதில் என் வலைப்பக்கங்களின் பணி என்ற தலைப்பில் முப்பது நிமிடங்கள் உரை நிகழ்த்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.













கிடைத்த வாய்ப்பினை மிக நேர்த்தியாக பயன்படுத்தி, கனவுகளை வீரியமாகக் கொண்டுள்ள மாணவ சமுதாயத்திடம் நிதானமாக விதைகள் ஆழமாக ஊன்றப்பட்டுள்ளன. அரவணைத்து வளர்ப்போம், நமக்கும் நம் அடுத்த தலைமுறைக்கும் தாய்மொழி சார்ந்த இடைவெளியை கொஞ்சம் கொஞ்சமாய் நிரப்புவோம்.













இரு நிகழ்ச்சிகளும் சிறப்புற நிறைவடைந்த மகிழ்ச்சியோடு இன்றைய பொழுது மிகப் பயனுள்ளதாக நிறைந்தது.

நெஞ்சம் நிறைந்த நன்றிகள் நண்பர் பழமைபேசி, முனைவர், கௌசல்யா மற்றும் பேராசிரியர் பார்த்திபன்.

இந்த நிகழ்ச்சி குறித்து திட்டமிட்டபோது தட்டிக்கொடுத்த எம் ஈரோடு தமிழ் வலைப்பதிவர் குழுமத்திற்கே இந்த மகிழ்ச்சி சமர்ப்பணம்.


___________________________________________________________________

  ©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.

TOPO