சங்கமம் நிகழ்வில் கலந்து கொண்ட பெரும்பாலான பதிவர்களிடமிருந்து சில பல இடுகைகளும், பற்பல பின்னூட்டங்களும் பார்க்க நேர்ந்த போதும் திரு. லதானந்த் அவர்களிடமிருந்து எதுவும் வரவில்லையென்பது ஆச்சரியமாக இருந்தது, அதேசமயம் அவரின் பின்னூட்டத்தை ஒரேயொரு பதிவரின் இடுகையில் மட்டுமே பார்க்க முடிந்தது வியப்பும் மகிழ்ச்சியும் கொடுத்தது. ஆனால் விமர்சனம் என்ற பெயரில் பட்டியலிட்டிருக்கும் குறைகளை குறைந்த பட்சம் எங்களிடம் நேரிடையாகவோ, அலைபேசி மூலமோ எந்தவொரு விளக்கமும் கேட்காமல் எழுதியது இன்னும் பெரிய ஆச்சரியத்தையும், கொஞ்சம் அதிர்ச்சியையும் கொடுத்தது.
அவரின் விமர்சனம் குறித்த இடுகை
ஈரோடு பதிவர் சங்கமம் சில விமர்சனங்கள்
//விருந்தினர்களை அழைத்துப் பேசவும் சொல்லிவிட்டு, அவர்கள் பேசும்போது வம்படியாகக் குறுக்கே குதர்க்கமாக விதண்டாவாதம் host ஒருவரே செய்வதை அனுமதித்தது சரியா? //
அழகாகப் போய்க்கொண்டிருந்த நிகழ்வில் அசாதாரணமான சூழல் உருவாகாமல் இருக்கும் பொருட்டே... அந்த இடத்தில் நாங்கள் அனுமதித்தது நிச்சயம் தவறுதான்.... அதற்காக பங்கேற்பாளர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும்... ஆனால் கசப்பான உண்மை அந்தச் சூழல் நாங்கள் முற்றிலும் எதிர்பாராத ஒன்று....
மற்றபடி நீங்கள் விமர்சித்த மற்ற விசயங்கள் முன்பே எங்கள் வலைப்பூக்களில் வெளியிட்ட நிகழ்ச்சி நிரல் படி நடந்தேறியது... எங்களுக்கு இதுபோல் பல அமைப்புகளின் கூட்டங்களை, பல பயிற்சி வகுப்புகளை நடத்திய அனுபவம் உண்டு, அதன் அடிப்படையிலேயே, நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டது.
Ice breaking என்பது இந்த நிகழ்வுக்கு முற்றிலும் அவசியமற்றது, பொருந்துவது சிரமமானது என்பதாலேயே தவிர்க்கப்பட்டது. அடுத்து Ice breaking பயிற்சி வகுப்புகளுக்கு மட்டுமே மிக அவசியமான ஒன்று. பதிவர்களின் பெயர், அடையாளம் தெரிந்தவுடன் கரம் பற்றி, முகம் நோக்கி மிக சுவாரசியமாக அரவணைத்துப் பேசி மகிழ்ந்ததை கண்கூடாகப் பார்த்தேன்.
// பிற துறைகளில் எவ்வளவுதான் சிறப்புப் பெற்றவர்களாக இருந்தாலும் பதிவுலகுக்குத் தொடர்பற்றவர்களை அழைத்துப் பேச வைப்பது எதற்காக?//
இது நடத்துனர் குழுவும், தமிழ்மணம் திரட்டியும் இணைந்து முடிவுசெய்தது. அதுவும் அவர்களை வாழ்த்துரை மட்டுமே வழங்க அழைத்திருந்தோம்.
// ஒரு சிலரை மட்டும் (என்னை உள்பட) மேடையில் அமர வைப்பது ஒருவித பார்ஷியாலிடி போலத் தெரிந்தது//
ஒரு பார்ஷியாலிடியும் இல்லை.... எங்களுக்கு அடையாளம் தெரிந்த பதிவர்கள், கண்டிப்பாக கலந்து கொள்வார்கள் என நடத்துனர் குழு பரிந்துரை செய்தவர்களை பேச வைக்க முடிவு செய்தோம்.
//புரவலர்களுக்கான priority ஆக இருக்குமோவென்றால் சீனா, நான், காசி போன்றோர் மேடையேறியதால் அந்த லாஜிக்கும் இடிக்கிறது//
நீங்கள், சீனா பதிவர்கள், காசி சிறப்பு அழைப்பாளர்...
//முதலிலேயே யாருக்காவது ஏதாவது தலைப்பில் பேச ஆர்வமா எனக் கேட்டு அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமேயல்லாது நிகழ்ச்சி அமைப்பாளர்கள் எந்த அளவுகோல் கொண்டு சிலரை மட்டும் மேடையேற்றுகிறார்கள் என (வெளியில் சொல்லாமல்) சிலர் நினைக்கலாம். (நான்தான் எதையும் மனதில் வைத்துக் கொள்ளுவதில்லையே!)//
பதிவர்களுக்கு முன் கூட்டியே தெரிவிக்கப்பட்டுத்தான், அவர்களுக்கு ஆர்வம் உள்ள துறை சார்ந்து பேச அழைக்கப்பட்டனர். ஓரே ஒரு பதிவருக்கு மட்டும்தான் அரங்கிற்கு வந்தபோது அவர் ஐந்து நிமிடம் பேச வேண்டும் என்று பணிக்கப்பட்டது. ஆனால் மேடையில் பேசிய் மற்றொரு பதிவர் ”என்ன தலைப்பில் பேசட்டும்” என்று கேட்டது முற்றிலும் நகைச்சுவைக்காகவே, ஏனெனில் அவரிடம் அன்று காலையே பேச வேண்டும் என்ற செய்தியையும், தலைப்பையும் நான் கூறிவிட்டேன்.... நாங்கள் சங்கடம் ஏற்படுத்தியதாக எழுதும் முன் குறைந்த பட்சம் அவர்களிடம் நீங்கள் கலந்து பேசியிருக்கலாம்
//(ஒன்றைக் கவனியுங்கள் நண்பர்களே! மிகச் சிறப்பாக எழுதுபவர்கள் சிறந்த பேச்சாளர்கள் அல்லர் என்பது பொது விதி)//
சரிதான்... இங்கு பேச்சாளராக மிளிரச் செய்ய அவர்களை மேடையேற்ற வில்லை. மனதில் இருக்கும் விசயத்தை பகிர்ந்து கொள்ள வைத்தோம்..
// ஒரு கட்டத்தில் மேடையில் முன்று சிறப்பு விருந்தினர்களை வைத்துக்கொண்டு நினைவுப் பரிசினை இரண்டு பேருக்கு மட்டும் தந்தது சரியா?//
முற்றிலும் தவறான திசைக்கு மாற்றும் தவறான கேள்வி. மேடையில் அமர்ந்ததில் பதிவர்கள் யார், சிறப்பு அழைப்பாளர்கள் யார் என்பதில் கூட உங்களுக்கு குழப்பம் இருப்பது தெரிகிறது... சங்கமம் தொடர்பான பழைய இடுகைகளை தயவுசெய்து வாசியுங்கள்.. எல்லா விபரமும் தெளிவாக உள்ளது... யார் யாருக்கு மேடையில் நினைவுப்பரிசு என்பதெல்லாம் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்று... இது குறித்து பங்கேற்பாளர்கள் மத்தியில் எதுவும் திரிக்கப்பட்டு வருவது ஆரோக்கியமானதல்லவே.
//சங்கமத்தின் வருங்காலச் செயல் திட்டம் என்ன என்பதைப்பற்றி ஒரு தெளிவின்மை நிலவியதே?//
நிகழ்காலத்திட்டம் மட்டும் தான் அன்றைய இலக்கு... சங்கம் நடத்துவதுதான் அன்றைய செயல்திட்டம். வருங்காலத் திட்டமோ, செயல்பாடோ குறித்து குழுமம்தான் முடிவுசெய்ய வேண்டும்...
//நிகழ்ச்சியின் இறுதியில் நடந்த கலந்துரையாடலில் அதனை ஒருங்கிணைக்க ஐந்தாறு பேரை நியமித்தது சரியா?//
அதில் ஒன்றும் தவறில்லை... மேடையேற்றப்பட்டவர்கள் அனுபவம் மிக்க பதிவர்கள், வேறுபட்ட நகரங்களைச் சார்ந்தவர்கள்... ஆகவே பதிவர்கள் அவர்கள் மூலம் கலந்துரையாட வாய்ப்புகிடைத்தது... அனானி குறித்து நிறைய நேரம் பேசிய பின்பும், ஒரு கட்டத்தில் நான் முடித்துக் கொள்ளலாம் என்று சொன்ன பிறகும் நீங்களே பரிசல், சுமஜ்லா ஆகியோரிடம் கேள்வி கேட்டது நினைவிருக்கும் என நினைக்கிறேன்.
//மேற்கண்டவை அனைத்தும் பலத்த சிந்தனைக்குப் பிறகே எழுதுகிறேன்//
பலத்த சிந்தனைக்கு முன், இந்த விமர்சனங்களை வைக்கும் முன்.... அன்று நிகழ்ச்சியை எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் நடத்திய எங்கள் பதிவர்களில் யாரேனும் ஒருவரையாவது அலைபேசியில் அழைத்து குறைந்த பட்சம் உங்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவடைந்திருக்கலாம்... அதன்பின்னும் உங்களுக்கு குறைகள் பட்டிருந்தால் தங்கள் வலைப்பூவில் வெளியிட்டிருக்கலாம்.
அப்படி ஏதும் செய்யாமல்.... அதை விடுத்து... உங்கள் மனதில் பட்டதை நிரந்தரமாக பதிவு செய்து கலந்து கொள்ளாத பதிவர்கள், வாசகர்களுக்கு எடுத்துச் சென்றது வருத்தம் அளிக்கிறது... கலந்து கொண்ட பதிவர்களுக்கு தெரியும் இதில் இருக்கும் மாயை, ஆனால் கலந்து கொள்ளாதவர்கள் வாசிக்கும் போது.... எங்கள் உழைப்பு, திட்டமிடல் கறைபடிந்ததாகவே பதிந்து போகும் என்பதை நீங்கள் அறியாமல் போனதுதான் மிக மோசமான ஆச்சர்யம்... ஒரு விரல் சுட்டும் போது மீதி விரல்கள் நம்மைத்தான் சுட்டுகிறது என்பதை நாம் எல்லோருமே அறிந்தவர்கள்தானே...
இப்படிப்பட்ட விமர்சனங்களில் குத்தும் கேள்விகள், ஒரு பொது நிகழ்வை நடத்துபவர்களுக்கு அயர்ச்சியைக் கொடுக்கலாம் அல்லது அடுத்து எங்காவது நடத்தலாம் என நினைப்பவர்களுக்கு வேண்டாம் என்ற எண்ணத்தைக் கொடுக்கலாம் என்பது என் பணிவான கருத்து...
.................. சங்கமம் நடத்துனர் குழு சார்பாக ஈரோடு கதிர்