Wednesday, February 17, 2010

கண் குறைபாடுகள், கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை - அமைதியாய் ஒரு புரட்சி




என் 9 வயது குழந்தைக்கு இடது கண்ணில் பார்வை குறைபாடு இருப்பது சமீபத்தில் தான் தெரிய வந்தது. வலது கண்ணை கைகளால் மூடிக் கொண்டு மற்றொரு கண்ணால் 10 அடி தூரத்தில் இருக்கும் எழுத்துக்களை படிக்கவைத்துப் பார்த்தபோது அவனால் படிக்கமுடியவில்லை. ஆனால் அதே இடது கண்ணை கைகளால் மூடிக் கொண்டு வலது கண்ணால் 20 அடி தூரத்தில் இருக்கும் எழுத்துக்களை படிக்க முடிகிறது.

இரண்டு கண்களாலும் பார்க்கும் போது இந்த குறைபாடு தெரியவதில்லை. ஆனால் பள்ளியிலே கரும்பலகையில் எழுதும் வரிகளைப் படிக்கும்போது சிரமப் படுகின்றனர். ஆனால் அதை அவர்கள் சொல்வதில்லை. எல்லோருக்கும் இப்படித்தான் இருக்கும் என்று நினைத்துவிடுகின்றனர்.

ஈரோட்டில் உள்ள மிகப் பெரிய கண் மருத்துவமணையில் பரிசோதித்த போது, நிரந்தரமாக கண்ணாடி அணியவேண்டும் என்று சொல்லிவிட்டனர். கண்ணாடியும் வாங்கி கொடுத்துவிட்டேன்.

அடுத்த சில நாட்களில், என்னுடைய பள்ளித் தோழர்.ஒருவரை சந்தித்தேன்.....பள்ளி நாட்களிலேயே பெரிய சோடாபுட்டிக் கண்ணாடி அணிந்திருந்தார். -6 என்ற அளவில் கண் பார்வைக் குறை அவருக்கு இருந்தது. ஆனால் நான் சந்தித்த அன்று கண் கண்ணாடி அணியாமல், பைக் ஓட்டிவந்ததை பார்த்தவுடன் மிகவும் ஆச்சரியமடைந்தேன்.

என்னப்பா கண்ணாடி போடாத உன்னை அடையாளமே தெரியவில்லை.......கண்களுக்கான அறுவைசிகிச்சை செய்து கொண்டாயா? அல்லது காண்டாக்ட் லென்ஸ்ஸா? என்று கேட்டேன்.






பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் கண்பார்வை குறைபாடுகளை நீக்க பயிற்சி அளிக்கின்றனர். அதில் போய் பயிற்சி பெற்று வந்தேன். கடந்த இரண்டு மூன்று வருடங்களாக கண்ணாடி அணிவதில்லை என்றதை கேட்டதும் ஆச்சரியப்பட்டுப் போனேன்.





அவரிடம் மேலும் தகவல்களை வாங்கிக் கொண்டு இளவலை அழைத்துக் கொண்டு பாண்டிச்சேரி வந்து சேர்ந்தேன்.


பாண்டிச்சேரி, கடற்கரை சாலையின், வடக்கு மூலையில், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரில் இந்த பள்ளி அமைந்திருக்கிறது.







திங்கட்கிழமை மதியம் 12 மணியளவில் அந்த பள்ளிக்குச் சென்றேன். அப்பள்ளிக்கு ஒவ்வொரு திங்கட்கிழமையும் விடுமுறை. ஞாயிற்றுக் கிழமை வேலை செய்கிறார்கள். எனவே மறுநாள் காலை 8 மணிக்கு வரச்சொன்னார்கள்.



இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை, நாம் விருப்பப்பட்டு கொடுக்கும் நன்கொடையை மட்டும் ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவிக்கப் பட்டது.

விடுமுறை தினமாக இருந்த போதும், அங்கிருந்த ஒரு உதவியாளர், எங்கே தங்கியிருக்கிறீர்கள்? என்று கேட்டார். இனிதான், ஏதாவது ஹோட்டலில் அறை எடுக்க வேண்டும் என்றேன். அவசியமில்லை, ஆசிரமத்தின் விடுதியில் தங்கிக் கொள்ளுங்கள் என்று கூறி ஆசிரம விடுதியின் தொலைபேசி எண்ணை கொடுத்தார்.

அழகான தனியறை. குளியலறை இணைந்த, இரண்டு படுக்கைகள், கொண்ட அந்த அறைக்கு வாடகை நாள் ஒன்றுக்கு ரூ.70/- மட்டுமே.

செவ்வாய்கிழமை காலை 8 மணிக்கு அங்கு சென்றேன். ஆரம்ப கட்ட பெயர் பதிவு, பரிசோதனை ஆகியவற்றை முடித்து, பயிற்சி தொடங்கப் பட்டது. சுமார் 2 மணி நேரம் பயிற்சி அளித்தனர்.

கிட்டப் பார்வை, தூரப்பார்வை, போன்ற அனைத்து கண் குறைபாடுகளுக்கும் பயிற்சி அளிக்கின்றனர். நான் சென்ற போது ஹைதராபாத்திலிருந்து ஒரு தம்பதியினர் தங்கள் இரண்டு பெண்குழந்தைகளை அழைத்து வந்திருந்தனர். 8, 4 வயதுடைய அந்த இரண்டு குழந்தைகளும் கண்ணாடி அணிந்திருந்தனர். அக் குழந்தைகளின் தந்தையும் கண்ணாடி அணிந்திருந்தார்.

அவரின் நண்பரின் ஆலோசனையின் பேரில் குழந்தைகளை அழைத்துவந்திருப்பதாக சொன்னார். நேரம் ஆக ஆக, பல குழந்தைகள், நடுத்தரவயதினர், வயதானவர்கள் என்று சுமார் 30 அல்லது 40 பேர்கள் பயிற்ச்சிக்கு வந்திருந்ததை பார்க்க முடிந்தது. இதில் பல வெளிநாட்டவர்களும் அடக்கம்.

செய்வாய் முதல் ஞாயிறுவரை 6 நாட்கள் இப்பயிற்சியை நடத்துகின்றனர். காலை 8 மணிமுதல் 10 மணிவரை, மாலை 3 மணிமுதல் 5 மணிவரை. நாள் ஒன்றுக்கு 4 மணிநேரம் பயிற்சி கொடுக்கின்றனர். முறையான கண் சிமிட்டுதல், தூரத்தில் இருப்பதை படிப்பது, இருட்டு அறையில் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் சிறு எழுத்துக்களை படிப்பது போன்ற பல பயிற்சிகள்.....

ஆச்சரியப் படும் விதமாக, பயிற்சி முடிந்த ஆறாவது நாள் அங்கேயே கண் பரிசோதனை செய்து பார்த்ததில் பார்வையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. தொடர்ந்து ஆறுமாதம் பயிற்சியை தொடருங்கள் பின் கண் பரிசோதனை செய்து பாருங்கள்.....கண்ணாடி அணிய வேண்டிய அவசியமே வராது என்று பயிற்சியாளர் சொன்னார்.

கடந்த 40 ஆண்டுகளாக இந்த பள்ளி நடப்பதாகவும், இதுவரை ஆயிரக்கணக்கானோர் பயன் பெற்றிருப்பதாகவும் அறிந்து கொண்டேன். முன்கூட்டியே பதிவு செய்து கொண்டு செல்வது நல்லது. மார்ச் முதல் வாரம் முதல் ஜூன் முதல்வாரம் வரையிலான பள்ளிக்கூட விடுமுறை நாட்களில், அதிகமான கூட்டம் வருவதால் அந்த காலகட்டத்தில் செல்ல விரும்புபவர்கள் முன் கூட்டியே பதிவு செய்தால் தான் இடம் கிடைக்கும்.

பயிற்சிகள் முடிந்து வெளியே செல்லும் வாயிலின் மேல்புறத்தில் இருந்த "மதர் மிரா" வின் இந்த வாசகம் பல அர்த்தங்களை எனக்குச் சொன்னது...............






பயிற்சி குறித்த மேலும் விவரங்கள்
SCHOOL FOR PERFECT SIGHT, PONDICHERRY, PHONE: 0413-2233659

Saturday, January 30, 2010

ஏங்கல்ஸ் ராஜா, M.B.A (27), விவசாயி


தாவரங்களை உருவாக்கி, தானியங்களை உணவாக்கி, உலகத்தின் பசி தீர்க்கும் விவசாயம், மனித குலத்தின் ஆதித் தொழில். இன்று யாவராலும் கைவிடப்பட்டதுவும் அதுவே!


"இந்த மண்ணும், பயிறும், சேறும், வெள்ளா மையும், விளைச்சலும், அறுப்பும், நடவும்தான் என் வாழ்க்கை. மண்ணில் கால்படாத எந்த வேலையும் மனசுக்குப் பிடிக்கிறதில்லை. படிச்சவங்க விவசாயம் செய்யக் கூடாதுன்னு சட்டம் எதுவும் இல்லையே!" - மென்மையான சொற்களால் பேசுகிறார் ஏங்கெல்ஸ் ராஜா. இளைய தலைமுறை விவசாயத்தைக் கைகழுவி விட்டு நகரங்கள் நோக்கி இடம்பெயர்ந்துகொண்டு இருக்க, எம்.பி.ஏ., படித்த இந்த 27 வயது இளைஞர் விவசாயத்துக்காகத் தன்னை அர்ப்பணித்திருக்கிறார். மாநிலம் முழுவதும் இயற்கை விவசாயம் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதில் தீவிரம் காட்டும் இவர், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரால் 'எனக்குப் பிறகு இவர்தான்' என்று அடையாளம் காட்டப் பட்டவர்!



"பட்டுக்கோட்டை பக்கம் பிச்சினிக்காடுதான் என் சொந்தக் கிராமம். தினந்தந்தியில் மேட்டூர் அணை நீர் மட்டம் பார்ப்பதையும், குறுவைக் கும் தாழடிக்கும் என்ன ரக நெல் போடலாம் என்று பேசுவதையும் தாண்டி, எங்கள் மக்க ளுக்கு வேறு ஒன்றும் தெரியாது. ஐந்து வயதில் பக்கத்து ஊரில் இருந்த தாத்தா-பாட்டி வீட்டுக்கு அனுப்பப்பட்ட நான், அங்கிருந்துதான் 5-ம் வகுப்பு வரை படித்தேன். பள்ளிக்கூடம் போவதே பிடிக்காது. தாத்தாவுடன் வயலுக்குப் போவதும், சேற்றில் இறங்கி விளையாடி வேலை பார்ப்பதும் மனதுக்கு நெருக்கமானதாக இருந்தது. அதிகாலைக் குளிர் வீசும் கருக்கலில் எழுந்து வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதும், அறுப்பு நேரத்தில் காண்டக்காய் விளக்குடன் களத்தில் நெற்கட்டுக்களுக்குக் காவல் இருப் பதுமாக தாத்தாதான் என் விவசாய குரு. ஏழு வயதிலேயே தன்னந்தனியாக ரெட்டை மாட்டு வண்டி ஓட்டுவேன்.

'பையன் இப்படியே இருந்தால் வீணாப்போவான்' என்று நினைத்த அப்பா, என்னைத் திரும்பவும் ஊருக்கு அழைத்துச் சென்று பட்டுக்கோட்டைப் பள்ளியில் சேர்த்துவிட்டார். அங்கு 9-ம் வகுப்பில் ஃபெயில். எங்கள் ஊர், கம்யூனிஸ்ட்டுகள் அதிகம் உள்ள ஊர். என் அப்பா லெனினும் கம்யூனிஸ்ட் இயக்கத்தில்தான் இருந்தார். அதனால்தான் எனக்கு ஏங்கெல்ஸ் ராஜா எனப் பெயர் வைத்தார். 9-ம் வகுப்பில் ஃபெயில் ஆனவுடன் 'பள்ளிக்கூடத் தொல்லைவிட்டது' என நினைத்து, ஊரில் நடந்த கம்யூனிஸ வகுப்புகளுக்குப் போகத் தொடங்கினேன். முதலாளிகள், தொழிலாளர்கள், உழைப்புச் சுரண்டல், உலகப் பொருளாதாரம் என ஏதோ ஒன்று எனக்கு மசமசப்பாகப்புரிய ஆரம்பித்தது.



வீட்டில் படிக்கச் சொல்லி தொந்தரவு செய்யவே, பத்தாம் வகுப்பை பிரைவேட்டாக எழுதினேன். மார்ச், அக்டோபர், மார்ச் என மாறிமாறி அட் டெம்ப்ட்டுகள், அத்தனையிலும் ஃபெயில். நான் காவது முறையாக எழுதி 187 மார்க் எடுத்து 10-ம் வகுப்பை பாஸ் செய்தேன். மறுபடியும் ப்ளஸ் டூ-வில் கணக்கில் ஃபெயில். அதையும் எழுதிப் பாஸ் ஆனபோது 'நான் காலேஜுக்கு எல்லாம் போக மாட்டேன்' என்றேன் முடிவாக. ஆனால், சொந்தக்காரர்களை எல்லாம் அழைத்து ஒருபஞ் சாயத்தே நடத்தி, என்னை கோயம்புத்தூர் கல்லூரி ஒன்றில் பிசினஸ் மேனேஜ்மென்ட் சேர்த்துவிட்டனர்.


முதல் நாளே ஒரு பேராசிரியை என்னை 10 நிமிடங்களுக்குத் திட்டினார். அவர் பேசிய இங்கிலீஷில் ஒரு வார்த்தையும் எனக்கு விளங்கவில்லை. திட்டி முடித்ததும், 'எனக்குப் புரியலை' என்றேன். நான் கிண்டல் பண்ணுவதாக நினைத்தவர், கோபமாக வெளியேறினார். அன்று முதல் கடைசி பெஞ்ச்தான் என் இருப்பிடம். கடைசி வருடம் கேம்பஸ் இன்டர்வியூவுக்காகப் பல நிறுவனங்கள் கல்லூரிக்கு வந்தன. 'நீ என்னவாகப் போறே?' என்று கேட்டார்கள் ஒவ்வொருவரிடமும். அமெரிக்கக் கனவு முதல் பெரிய நிறுவனங்களின் உயர் பதவிகள் வரை பலரும் பலவற்றைச் சொன்னார்கள்.

நான் கொஞ்சமும் தயங்காமல் 'விவசாயம் செய்யப்போறேன். விவசாயத்தோடு சேர்த்து ஆட்டுப் பண்ணையும், மீன் பண்ணையும் வைக்கப்போறேன்' என்றதும் அறை எங்கும் சிரிப்பு. நான் கொஞ்சம் தாழ்வுணர்ச்சிஅடைந்த போது, எனக்காக ஒரே ஒரு குரல் ஒலித்தது. ஹெச்.ஓ.டி. சந்தியா மேடம், 'அவன் சொன்னதில் என்ன தப்பு? அவன் தன் விருப்பத் தைச் சொல்றான். இதுக்கு ஏன் சிரிக்கிறீங்க?' என்று கறாராகக் கேட்டவர், 'ஒரு மாணவனை அவமானப்படுத்திவிட்டீர்கள்' என்று சொல்லி அந்த இன்டர்வியூ போர்டையே திருப்பி அனுப்பினார். நான் அவமானப்பட்டு கூனிக் குறுகி நின்ற சமயத்தில் எனக்காக ஒலித்த ஒரே குரல் சந்தியா மேடத்தினுடையது.

பிறகு, காரைக்குடி அழகப்பாவில் எம்.பி.ஏ., முடித்ததும் நேராக ஊருக்குப் போய் விவசாயம் செய்யத் தொடங்கினேன். என் அப்பா இயற்கை விவசாயம் செய்ய, அதைக் கிண்டல் அடித்துவிட்டு நான் ரசாயன உரங்களைக்கொண்டு வெள்ளாமை பார்த்தேன். இரண்டு பேருக்கும் முட்டலும் மோதலுமாகப் போய்க்கொண்டு இருந்த சமயத் தில்தான் தமிழகத்தை சுனாமி தாக்கியது. உயிரிழப்புகள், அதை ஒட்டிய நிவாரணப் பணிகள் எல்லாம் நடந்துகொண்டு இருக்க,கடற் கரையை ஒட்டிய விவசாய நிலங்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டன.

சீறி வந்த சுனாமி, உப்புச் சகதியை வயலில் குவித்துச் சென்றுவிட, விவசாயமே செய்ய முடியாத நிலைமை. வயல்கள் மட்டுமின்றி, ஆயிரக்கணக்கான குளம், குட்டைகளும் முழுவதுமாகப் பாதிக்கப் பட்டன. இவற்றைச் சீர்செய்யும் நோக்கத்துடன் நம்மாழ்வார் வேலை பார்க்கத் தொடங்கினார். என் அப்பாவுக்கு நம்மாழ்வாருடன் பழக்கம் இருந்ததால், என்னை நாகப்பட்டினத்துக்கு அனுப்பிவைத்தார். நரை தாடியும், ஒல்லியான தேகமுமாக இருந்த நம்மாழ்வாருடன் பழக ஆரம்பித்தேன்.

வேதாரணயம் தொடங்கி சீர்காழி வரைக்கும் 28 கிராமங்களைச் சேர்ந்த 5,500 ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டு இருந்தன. 10 ஆயிரத்துக்கும் அதிகமான சிறிய விவசாயக் குட்டைகள் கடல் சகதியால் மூடப்பட்டு இருந்தன. ஒவ்வொரு கிராமமாகத் தங்கி, அத்தனை நிலங்களையும் விவசாயத்துக்கு உகந்ததாக மாற்றினோம். மறுபடியும் ஒரு கடல் சீற்றம் வந்தால்கூட பாதிப்பு ஏற்படாதவாறு பனை மரங்களை நட்டு தடுப்புகளை ஏற்படுத்தினோம். 2 வருடங்கள் 20 பேர் இந்த வேலையைச் செய்து முடித்தபோது, 'ஏங்கெல்ஸை என்கிட்ட தந்துடுங்க' என்று என் பெற்றோரிடம் கேட்டு வந்தார் நம்மாழ்வார். இப்போது அவர்தான் எனக்கு ஞானத் தந்தை.

கரூர் பக்கத்தில் கடவூரில் காலம் காலமாக விவசாயமே செய்யப் படாத 35 ஏக்கர் பாறை நிலத்தை வாங்கிச் செம்மைப்படுத்தி விவசாயம் செய்யத் தொடங்கி இருக்கிறோம். இதன் வெற்றி, அந்தப் பகுதியின் ஆயிரக்கணக்கான ஏக்கர் தரிசு நிலங்களை விவசாயப் பூமியாக மாற்றும்!
தமிழர்களின் பாரம்பரிய நெல் வகைகள் பழங்காலத்தில் நூற்றுக்கும் மேல் இருந்து, அவை பெரும்பாலும் அழிந்து போய்விட்டன. அவற்றைச் சேகரித்துப் பயிரிட்டுப் பரவலாக்கும் பணியைச் செய்கிறோம்.

படித்தவர்கள் விவசாய வேலைகளுக்கு வருவது இல்லை என்பதை ஒரு குற்றச் சாட்டாகவே நாம் சொல்கிறோம். ஆனால், விவசாயத்தை விரும்பிச்செய்வ தற்குரிய சூழல் இங்கு இல்லை. செலவு குறைந்த பாரம்பரிய இயற்கை விவசா யத்தை ஊக்குவிக்க வேண்டிய அரசுகள், பன்னாட்டு உர நிறுவனங்களின் கமிஷன் களுக்காக ஒவ்வொரு வருடமும் உர இறக்குமதியை அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. நமது நிலம் ரசாயன உரங்களால் விஷமேற்றப்பட்டு இருக்கிறது. நம் பாட்டனும், முப்பாட்டனும் செய்த விவசாயத்தை இந்த சமீப காலஎதிரிகளுக்குப் பயந்து ஏன் கைவிட வேண்டும்? இந்த எதிரிகளை விரட்ட, படித்த இளைஞர்கள் பெருமளவுக்கு விவசாயத்தை நோக்கி வர வேண்டும். அவர்கள் அத்தனை பேருடனும் கை குலுக்க நான் என் இரு கரங்களையும் தயாராகவைத்திருக்கிறேன்!"

ஏங்கெல்ஸ் ராஜா அலைபேசி எண் : 94421-21473

நன்றி : இளமை விகடன்


Thursday, January 28, 2010

மதுரையில் குழந்தைகள் நல கருத்தரங்கு - நினைவூட்டல்

இன்றைய சமூக சூழலில் இருக்கக் கூடிய மிக முக்கியமான பிரச்சினைகளில் சிறு குழந்தைகளின் மீது திணிக்கப்படும் பாலியல் பலாத்காரங்களும் ஒன்று. மூன்று வயது குழந்தையைக் கொலை செய்த காமவெறியன், சிதைக்கப்பட்டு புதரில் கிடந்த குழந்தை என்று திரும்பிய பக்கம் எல்லாம் காணக் கிடைக்கும் செய்திகள் நம்மை பயம் கொள்ள செய்வதாக இருக்கின்றன.

ஆண், பெண் என்ற பேதம் இல்லாமல் எல்லாக் குழந்தைகள் மீதும் இத்தகைய பாலியல் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. தனக்கு நடப்பது என்ன என்று தெரியாமலேயே சீரழிக்கப்படும் குழந்தைகள் எத்தனை பேர்? இதனால் குழந்தைகள் உடல்ரீதியாக மட்டுமல்லாது மனரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

தம் குழந்தைகளை பாதுகாக்கும் கடமை பெற்றோருக்கும், அவர்களின் ஆசிரியர்களுக்கும் தான் உண்டு. இத்தகைய நச்சு சூழலில் இருந்து நம் குழந்தைகளை எப்படி பாதுகாப்பது? பிரச்சினைகளை நாம் எப்படி எதிர்கொள்வது? எது நல்ல தொடுகை என்றும் எது கெட்ட தொடுகை என்றும் குழந்தைகளுக்கு எப்படி புரிய வைப்பது? இது போன்ற விஷயங்களைப் பற்றி தெளிவாகப் பேசுவதே மதுரைப் வலைப்பதிவர்களின் ஏற்பாட்டில், மதுரையில் குழந்தைகள் மனநலம் பற்றியும், அவர்களை அணுகும் முறை பற்றியும் மன நல மருத்துவர் டாக்டர்.ஷாலினி உரையாற்ற இருக்கிறார். நம்முடைய சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறுவதற்கான கேள்வி நேரத்திற்கும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

நாள் : 31.01.2010 ஞாயிறு நேரம் : மாலை 3 மணி - 6 மணி
இடம் : செமினார் ஹால், அமெரிக்கன் கல்லூரி, மதுரை

நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விழையும் நண்பர்கள் கீழ்கண்ட அலைபேசி எண்களிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தங்கள் வருகையை உறுதி செய்து கொள்ளவும்.

தருமி - 9952116112
சீனா - 9840624293
பாலகுமார் - 9486102490
ஜெரி ஈஷானந்தா - 9791390002
ஸ்ரீதர் - 9360688993
கார்த்திகைப்பாண்டியன் -9842171138

மின்னஞ்சல் தொடர்புக்கு.....
dharumi2@gmail.com
sridharrangaraj@gmail.com
karthickpandian@gmail.com
______________________________________________________________

சமூக நோக்கோடு இந்த கருத்தரங்கை நடத்தும் மதுரை வலைப்பதிவர்களுக்கு ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் சார்பாக....மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்.





Tuesday, January 26, 2010

தமிழக வரலாற்றில் இருவேறு தாக்கங்கள்

தமிழக வரலாற்றில் இருவேறு தாக்கங்கள்
என்ற தலைப்பில்

27.01.2010 புதன் மாலை 6.00 மணிக்கு
பேராசிரியர். சுப.வீரபாண்டியன் அவர்கள்
சிறப்புரை நிகழ்த்துகிறார்.
விருப்பம் இருப்பவர்கள் கலந்து கொள்ளலாம்
இடம்: பெரியார் மன்றம், கச்சேரி வீதி, ஈரோடு
நிகழ்ச்சி நடத்துபவர்கள்: பெரியார் படிப்பக வாசகர் வட்டம்

Monday, January 25, 2010

இலவச பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை...

தீக்காயம் பட்டவரை சந்திக்க நேர்ந்தாலோ அல்லது காது, மூக்கு மற்றும் வாய் தொடர்பான (பிறப்பால்) பிரச்சினையினால் வாடுவதை கண்டாலோ அவர்களை "பாசம் மருத்துவமனை, கொடைக்கானல்" ஐ தொடர்பு கொள்ளச் சொல்லவும். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மருத்துவர் மார்ச் மாதம் 23 முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை இலவசமாக சிகிச்சை (பிளாஸ்டிக் சர்ஜரி) செய்ய இருக்கிறார்.

தொலைபேசி எண் : (04542) 240778 and 240668

How to register?

You can either contact in person or make a phone call or e-,mail on the below given details

Address:
Pasam Hospital
M.M. Street,
Kodaikanal,

Phone: (04542) 240778 and 240668
e-mail: pasam.vision@gmail.com


குறிப்பு:
இது மின்னஞ்சல் மூலம் கிடைத்த தகவல்


Sunday, January 24, 2010

ஈரோட்டில் ஜெயமோகன் "இன்றைய காந்தி" நூல் வெளியீட்டு விழா





இன்று காலை 10 மணியளவில் "இன்றைய காந்தி" நூல் வெளியீட்டுவிழா நடைபெறுவதாக அழைப்பிதழ் கிடைத்தது. இயல்பான செயல்பாடுகளில் இருந்து வேறுபடும் நாள் ஞாயிறு என்பது மட்டுமே அந்நாளைப் பற்றிய என் புரிதல். மெதுவாக எழுவது, குளிக்காமல் காலை உணவருந்துவது, 11 மணிக்கு படுத்து தூங்குவது, மதியம் என் அறையை சுத்தப்படுத்துவது, மாலையில் குளிப்பது, இரவு குடும்பத்தினரோடு ஊர் சுற்றுவது இப்படி பல...............


ஒரு மாற்றாக, இன்று நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என்பதால் விரைந்து தயாராகி, கூட்டம் நடைபெறும் அரங்கினுள் நுழையும் போது, சராசரி இந்தியனாகி, வரவேற்புரை முடிந்து, புத்தகம் வெளியிடப்பட்டு, எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பேசி முடித்து, திரு ஆறுமுகத் தமிழன் பேசிக் கொண்டிருந்த போதுதான் தாமதமாக உள் நுழைந்தேன்...

"இன்றைய காந்தி" புத்தகத்தில், மொழிவழி தேசியத்தை விடுத்து பண்பாட்டு வழி தேசியம் சரி என்ற ஜெயமோகனின் எழுத்துக்கள் சரியல்ல, என்ற தன் விமர்சனத்தை முன்னிறுத்தி பேசிக் கொண்டிருந்தார். ஈழப்பிரச்சனை குறித்து ஜெயமோகன் பார்வையில் சிறு தடுமாற்றம் உள்ளது என்பதாக அவர் பேசினார்.

ஆனித்தரமான பேச்சு, அழகான சொல்லாடல்கள், சொல்ல வந்ததை விவரித்தமை மிக அருமையாக இருந்தது. இந்த நூல் காந்தியை ஒரு புதிய கோணத்தில் நெருங்கிச் சென்று பார்க்கிறது. அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று என்றும் குறிப்பிட்டார்.

அடுத்ததாக பேசவந்த "மரபின் மைந்தர் முத்தையா" இந்த புத்தகத்தில் காந்தியைப் பற்றிய பல்வேறு அறியப்படாத தகவல்கள் இருக்கின்றன. காந்தியின் பிள்ளைகள் குட்டிச் சுவராகப் போனதாக பலரும் பல இடங்களில் பேசுவதை காண்கிறோம். அது தவறு, ஒரு பிள்ளையைத் தவிர மற்ற மூவரும் மிகப் பெரிய காரியங்களைச் செய்திருக்கிறார்கள், என்பதை இந்த புத்தகத்தின் மூலம் அறிய முடிகிறது என்று கூறினார்.

அடுத்து வந்தவர், பெயர் மறந்துவிட்டேன்....(நண்பர் மன்னிக்கவும்.....)காந்தி பற்றிய தன் ஆய்வையும், அவர்வாழ்க்கை முறை பற்றியும் காந்தியின் ஆளுமை பற்றியும் நிறைய பேசினார். காந்தி என்ற மகாத்மாவின் சாதனைகளை பட்டியலிட்டுச் சொன்னார். எதற்காக அந்த காந்தி புகழ் பாடும் பேச்சு, என்பது புரியவில்லை. காந்தி ஜெயந்தி விழாவில் நம்மூர் கதர் சட்டைகளின் பேச்சை மீண்டும் நினைவு படுத்தினார்.

காந்தியை பற்றிய எந்த உள்ளார்ந்த உருவகமும் இல்லாமல் வளர்ந்தவன். காந்தியின் படங்கள், அவர் பற்றிய பேச்சுக்கள் போன்ற எந்த ஆளுமையும் என்னுள் நிறைந்ததில்லை. ஆதியின் படங்கள் தான் முதன்முதலில் அவரை நோக்கி என்னை திரும்பி பார்க்க வைத்தவை என்ற தகவல் பகிர்வோடு பேசத் தொடங்கினார் பவாசெல்லத்துரை. இடது சாரிகள் இந்த புத்தகத்தினை விமர்சிப்பார்கள் என்று நாஞ்சில் நாடன் பேசினர். நான் இன்னும் முழுமையாக படிக்கவில்லை, ஆனால் ஜெயமோகன் எழுத்துகளை நான் அறிவேன், புத்தகத்தின் சில வரிகளை மேற்கோள் காட்டி, காந்தியைப் புரிந்து கொள்ள இந்த புத்தகம் உதவும் என்றும் பேசினார்.

வழக்கமான, தனக்கே உரித்தான பாணியில் மார்க்ஸிய தாக்கத்தைப் பற்றி பேசியவர், விரைவில் ஜெயமோகன்" "இ.எம்.எஸ்" பற்றிய ஒரு புத்தகத்தை எழுத வேண்டும் என்ற தன் கோரிக்கையையும், மேடையில் வைத்தார்.

ஜெயமோகனும் தன் ஏற்புரையில் எழுதுவதாக உறுதி சொன்னார். விரைவில் தோழர் இ.எம்.எஸ் பற்றிய ஜெ.மோ.வின் புத்தகத்தை அனைவரும் எதிர்பார்க்கலாம்.......

இறுதியாக ஏற்புரை வழங்க வந்த ஜெயமோகனின் பேச்சு, அற்புதம். இந்த புத்தகம் எதற்காக எழுதப்பட்டது என்பதில் தொடங்கி, ஒரு நீண்ட ரசிக்கும்படியாக,பல புதிய தகவல்களோடு சிந்தனையை துண்டும் ஒரு உரையாக அமைந்தது.


சில மாதங்களுக்கு முன் ஒருநாள் தமிழ் தேசியத்தை முன்னெடுத்துச் செல்லும் ஒரு மூத்த தலைவரோடு பேசிக் கொண்டிருக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. முன்னாள் காங்கிரஸ்காரரான அவர் பேசும் போது, "வல்லபாய் பட்டேலை தவிர்த்து நேருவை பிரதமராக ஆக்க காந்தி முடிவு செய்ததன் காரணம், குறைந்தது 20 ஆண்டுகளாவது, இந்தியா ஒரு தலைமையின் கீழ் இருக்க வேண்டும். அப்பொழுதுதான், முழுமையான வளர்ச்சியை எட்ட முடியும், பட்டேலின் வயது அதற்கு தடையாக இருந்தது....காந்தி நினைத்தது போல் சில ஆண்டுகளிலேயே பட்டேல் மறைந்தார். என்று காந்தியின் தொலைநோக்குப் பார்வை குறித்து பேசினார்.

இன்று ஜெ,மோ பேசும்போது, தன்னுடைய நம்பிக்கைகுரிய விசுவசியாகவும், சொந்த மாநிலத்தைச் சார்ந்தவராக இருந்த போதிலும் பட்டேலை தவிர்த்து நேருவை பிரதமராக்கியது, இந்த நாட்டின் நலன் கருதிதான். தன்னுடைய கருத்துக்கள், கொள்கைகள், நேருவால் பின்பற்றப்படாது என்று தெரிந்தும், அவரை பிரதமராக்கியது நேருவின் மதச்சார்பிமை கொள்கைதான் என்ற தன் கருத்தை அழகாக வெளிப்படுத்தினார்.

காந்தியை பற்றிய தவறான விமர்சனங்களும், அவர் பற்றிய மக்களின் புரிதலும் தான் இந்த புத்தகம் வெளிவர காரணமாக இருந்தது. மகாத்மாக உருவகப்படுத்த பட்ட காந்தியைப் பற்றி இதில் எழுதவில்லை. காந்தியைப் பற்றிய நம் மூடத்தனமான புரிதலை நீக்கி, காந்தி எப்படிப்பட்டவர் என்று படித்து அறிந்து கொள்ளும் வகையில் பல தகவல்களைத் திரட்டி இந்த புத்தகத்தில் கொடுத்துள்ளேன்.


திரு ஆறுமுகத் தமிழன் விமர்சனம் குறித்துப் பேசிய ஜெ.மோ, ஆயுதப் போராட்டத்தின் தோல்விகள் மிகுந்த வலியை கொடுத்துள்ளன. பல லட்சம் பேரை இழந்து இன்று தோற்றிருக்கிறோம். ஆயுதப் போராட்டங்கள் வெற்றிதராது என்பது மீண்டும் மீண்டும் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. காந்திய பாதை தான் என்றும் நிலைத்திருக்கும். கால மாற்றம் காந்தீயத்தை அழித்துவிடமுடியாது...என்ற ஒரு விரிவான உரையை ஆற்றினார்.


இறுதியாக நன்றி கூற வந்த நண்பர் விஜயராகவன் ஒரு அழகான கருத்தைச் சொன்னார். ஒரு கருத்தை வாதம் செய்வது, எதிர்வாதம் செய்வது, ஒருவரை ஒருவர் காயப்படுத்திக் கொள்ள அல்ல, இறுதியில் ஒர் புரிதலோடு இருவரும் பிரிதல்தான் என்று குறிப்பிட்டது மிகவும் உண்மையான சிந்தனையை தூண்டிய கருத்து.


கண்மூடித்தனமாக காந்தியை விமர்சிப்பவர்களுக்கும், காந்தியை புனிதராக கொண்டாடுவோருக்கும், இடையே காந்தியை பல்வேறு கோணங்களில் இருந்து எழுதியிருக்கும் ஜெ.மோ வின் இந்த புத்தகம் காந்தியைப் பற்றிய ஒரு பெரும் புரிதலைத் தரும் என்று நம்புகிறேன்.


காந்தியத்தின் மீது மிகுந்த பற்றும் நம்பிக்கையும் கொண்டு, காந்தி நூற்றாண்டு விழாவை ஈரோட்டில் நடத்தி, காந்திய சிந்தனைகளை சுமார் 20 தொகுதிகளாக வெளியிட்ட என் தந்தையோடு, நான் வேறுபட்டு, பல இடங்களில் கண்மூடித்தனமாக, அரை குறை கேள்வி ஞானத்தோடு காந்தியை நான் பல இடங்களில் விமர்சித்தது உண்டு.


இந்த புத்தகத்தை படிக்கவில்லை. விரைவில் படித்து முடித்துவிடுவேன். அதன் பின் காந்தி பற்றிய என் பார்வை விசாலமாகலாம். என் புரிதல் கூடலாம்... இது வரை நான் பேசியதற்காக வருத்தமும் படலாம்......


மிகுந்த எதிர்பார்ப்புகளோடும், காந்தி பற்றிய என் தவறான புரிதலின் காரணம் தேடியும் வீடு நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றேன்.............


அன்புடன்
ஆரூரன்.



Wednesday, January 13, 2010

பொங்கல் வாழ்த்துக்கள்




பொங்கலின் இனிமையும், செங்கரும்பு செந்தேன் சுவையும்,
மஞ்சள் மணமும், மங்கள மகிழ்வும் மனைதனில் நிலைபெற
மக்களனைவரும் வளம்பெற வாழ்த்துக்கள்.


  ©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.

TOPO