Tuesday, December 14, 2010

சங்கமம்‘2009 பற்றி பதிவர் வானம்பாடிகள்

பிரமாதம். அசத்தல். சாதிச்சிட்டீங்க என்பது போன்ற வார்த்தைகளைத் தனியாகச் சொன்னாலும் மொத்தமாகச் சொன்னாலும் டெம்ப்ளேட் பின்னூட்டம் என்று சொல்லிவிடலாம்.

ஆனால், முதன் முறையாக ஒரு பதிவர் கூடலை மிக அழகான ஓர் மாலைப் பொழுதில் மிக மிக அருமையாக நடத்திக் காட்டிய ஈரோடு பதிவர்களைப் பாராட்ட வார்த்தைகளைச் செதுக்குவதைவிட பட்டென்று மனதில் தோன்றுவதை சொல்லுவது தவிர வேறு வழியில்லை.

கூட்டுமுயற்சி, பங்கேற்பு, பங்களிப்பு, நிர்வகித்தல், விருந்தோம்பல் இன்னும் என்னென்ன உண்டோ அத்தனைக்கும் எடுத்துக் காட்டாக இந்த நிகழ்ச்சி இருந்தது என்பதில் சந்தேகமேயில்லை. சந்திப்பின் முத்திரைச் சின்னத்தில் மோட்டோ எனும் முது மொழியாக 'அட நீங்கதானா" எனப் போட்டிருக்கலாம் போல்.


பதிவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்ததும் நேசக்கரம் குலுக்கி கேட்ட முதல் கேள்வி இது. கிட்டத் தட்ட எழுபதுக்கும் மேற்பட்ட பதிவர்களும் வாசகர்களும் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் சந்தேகமற நிரூபணமானது வாக்குகளையும் பின்னூட்டங்களையும் தாண்டி, நீங்கள் எல்லோராலும் படிக்கப்படுகிறீர்கள் என்பது. ஒரு பதிவருக்கு, இதைவிட ஊக்கமோ, தன்னம்பிக்கையோ வேறெப்படி தரவியலும்.

ஈரோடு பதிவர் சந்திப்பின் நிகழ்ச்சி நிரலில் மறைமுகமான இந்தத் தலைப்பு இருந்திருக்கிறது. இதற்காக நிர்வாகிகளுக்கு தனிப்பட்ட முறையிலும், மற்ற பதிவர்கள் சார்பிலும் என் நன்றி.

சுவையான தேநீருக்குப் பின், சரியாக 4 மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி, திரு. கதிர் அழைக்க திரு ஆரூரன் வரவேற்பு உரையாற்றினார். பதிவு என்பதின் முக்கியத்தை கலிங்கன் காளிங்கனாகவும் கம்ப நாடன் கம்ப நாடாராகவும் திரிந்ததை நகைச்சுவையோடு கூறிடினும், பதிவின் அவசியத்தை, பொறுப்புணர்ச்சியை உணர்த்தியது பாராட்டத் தக்கது.

தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர்கள் வசந்த்குமார், வலைச்சரம் சீனா, சுமஜ்லா, பழமைபேசி, பட்டர்பிளை சூர்யா, செந்தில்வேலன், ரம்யா, அகநாழிகை வாசுதேவன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினார்கள். “ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்” பதிவர்கள் தண்டோரா, வானம்பாடி(நானு நானு), அப்துல்லா, பரிசல்காரன், ஜெர்ரி, கார்த்திகை பாண்டியன் ஆகியோரால் துவக்கப் பட்டது.

கலந்துரையாடல் நேரம் நிகழ்ச்சியின் மகுடம் எனலாம். இதனை நிர்வகிக்க லதானந்த், பழமைபேசி, கேபிள் சங்கர், அப்துல்லா, வெயிலான், ஸ்ரீதர் ஆகியோர் குழு பொறுப்பேற்க அனானிகள் குறித்த விவாதம் சூடு பிடித்தது எதிர்பாராத சுவாரசியம். அவ்வப்போது தோழமையான, நகைச்சுவையான மட்டறுப்புகளுடன், வெகு சிறப்பாக அமைந்துவிட்டது.

விழா முடிந்ததும், செவிக்குணவில்லாத காரணத்தால், சிறிதன்றி பெரிதாகவே கொங்குநாட்டின் விருந்தோம்பல் அழைத்தது. சுவையான உணவு வாழைமட்டை(பாக்கு?) தட்டிலும், அளவான வாழையிலையில் பரிமாரப் பட்டமையில் கூட அமைப்பாளர்களின் சமூக அக்கறை வெளிப்பட்டது.

விளக்கமாக எழுத எண்ணியிருப்பதாலும், கூடியவரை உரைகளை ஒலிப்பதிவில் தர எண்ணியிருப்பதாலும், சுருக்கமாக (அடங்கொன்னியா! இது சுருக்கமா?) ஒரு சின்ன சுயதம்பட்டத்தோடு நெஞ்சுகொள்ளா நன்றியோடு முடிக்கிறேன்.

இந்த என் 300வது இடுகையை, ஒரு மிகச் சிறந்த பதிவர் சங்கமத்தின் நிகழ்வுகளைத் தாங்கி வருவதோடு, என்னை குறைந்தது எழுபது சக பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும், அவர்களை எனக்கும் நேரடியாக சந்திக்க வாய்ப்பளித்த திரு கதிர், திரு ஆரூரன், பாலாஜி, வால்பையன் மற்றும் இதர ஒருங்கிணைப்பாளர்களுக்கும், என் எழுத்தை வாசிக்கும் இதர அன்பர்களுக்கும் என் நன்றியைப் பகிர வழிவகுத்த ஈரோடு தமிழ் வலைப்பதிவர் குழுமத்துக்கு அர்ப்பணிக்கிறேன்.


நன்றி வானம்பாடிகள்இந்த வருடம் சங்கமம்‘2010.

3 Comentários:

பவள சங்கரி said...

சார், தங்கள்பெருந்தன்மை மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி.

Unknown said...

இந்த வருட சங்கமம் இதைவிடவும் சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள் ...

பனித்துளி சங்கர் said...

விழா சிறப்பாக அமைவதற்கு என் வாழ்த்துக்கள்

Post a Comment

  ©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.

TOPO