Thursday, October 14, 2010

வாய் இறுகல் நோய்

நோயின் தன்மை :
கன்னத்து உட்புறதசைகள் அதன் இலகு தன்மையை இழந்து இறுகிப்போய் வாய் திறப்பது கடினமாகும், இந்நிலையே வாய் இறுகு நோய்.



அறிகுறிகள்:
வாயின் சதைகளில் ரத்தஓட்டம் குறைந்து சதை வெளிறி காணப்படுதல், எரிச்சல், வாய் உலர்ந்து போதல், சுவை அறியும் திறன் குறைதல் போன்றவை இதன் அறிகுறிகள். சில நேரங்களில் குரல் மாற்றம், கேக்கும் தன்மை குறைதல் போன்றவையும் ஏற்படலாம். பொதுவாக நான்கு விரல்கட்டை அளவு திறக்கும் வாய், இரண்டு விரல்கட்டை அளவுக்கும் குறைவாய் திறத்தல் இந்நோயின் கொடுமையை உணர்த்தும்.

காரணிகள் :
பொதுவாக பான்பராக், பாக்கு, புகையிலை, அதிகமான காரம் பயன்படுத்துவோர், வைட்டமின் சத்து குறைபாடு உள்ளவர்கள் இதனால் எளிதில் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம்.



பாக்கு, தம்பாக்கு, புகையிலை, அதிக காரம் போன்றவற்றை தவிர்த்தல், இரும்பு சத்து, வைட்டமின் அதிகம் உள்ள உணவு அதிகமாய் எடுத்தல், அவ்வப்போழுது பல் மருத்தவரை காணுதல், வாய் நலம் பேணுதல், நலம் தரும்.

துவக்க நிலையில் பான்பராக், பாக்கு போடுவதை நிறுத்துதல், காபி, டீ, ஆல்கஹோல் தவிர்த்தல், மற்றும் சில எளிய வாய் திறக்கும் பயிற்சிகள் போதும். முற்றிய நிலையில் ஸ்டிராய்ட் இன்ஜெக்சன் தரும் முறையும், அறுவை சிகிச்சையும் தற்சமயம் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. ஸ்டெம் செல் கொண்டு மருத்துவம் செய்தல் குறித்த ஆராய்ச்சிகள் வெற்றி பெற்று வருகின்றன.

நன்றி பல் மருத்துவர் ரோகிணிசிவா.


.

Friday, October 1, 2010

திருப்பூர் முத்தமிழ்ச் சங்க நிகழ்ச்சியில் பதிவர்கள்

Monday, September 27, 2010

கொடுப்போம் அமுதம்!


சில தினங்களுக்கு முன்பு பெங்களூரில் இருந்து திருச்சிக்கு சென்று கொண்டிருந்த சேலம் கோட்ட அரசுப் பேருந்து ஒன்று மாலை 5.45 மணியளவில் திருச்சி மாவட்டம்,​​ முசிறியை அடுத்த உமையாள்புரம் என்ற கிராமப் பகுதியில் திடீரென சாலையோரம் நின்றது.

பேருந்தில் இருந்து இறங்கிய நடத்துநர்,​​ சாலையோரத்தில் ஓலை வேய்ந்த மண் குடிசையின் முன்னால் அமர்ந்திருந்த ஒரு மூதாட்டியிடம் பெரிய ரொட்டி பாக்கெட்டையும்,​​ குடிநீர் பாட்டிலையும் கொடுத்துவிட்டு,​​ ஒரு வினாடி நலம் விசாரித்து விட்டு பேருந்துக்குத் திரும்பினார்.

அந்த மூதாட்டி நடத்துநருக்குத் தெரிந்தவராக இருப்பார் என்று நினைத்தோம்.​ விசாரித்து வைப்போமே என்று நடத்துநரிடம் பேச்சு கொடுத்த போதுதான் சுவாரஸ்யம் மிக்க செய்தி ஒன்று கிடைத்தது.


கிருஷ்ணகிரி மாவட்டம்,​​ காவிரிப்பட்டினம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வரும் நடத்துநர் கே.​ சிங்காரவேலுக்கும் அந்த மூதாட்டிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

பிறகு எந்த நோக்கத்தோடு அந்த மூதாட்டிக்கு ரொட்டி,​​ குடிநீர் பாட்டில் வாங்கிக் கொடுத்தீர்கள் என்று நடத்துநரிடம் கேட்டோம். சில வினாடிகள் நீங்கள் யார் என்பது போல பார்த்துவிட்டுப் பிறகு எதுவும் கேட்காதவராக அவர் சொன்னது...

'பொதுவாக ஆதரவற்ற,​​ அடையாளம் தெரியாத வயதானவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்குடன் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக இதுபோன்ற உதவிகளைச் செய்து வருகிறேன்.

இந்த மூதாட்டி யார் என்று எனக்குத் தெரியாது.​ கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக நான் பணியில் இருக்கும் போது,​​ இந்த மூதாட்டிக்கு எனது வீட்டில் இருந்து உணவும்,​​ கடையிலிருந்து குடிநீர் பாட்டிலும் வாங்கி வந்து தருகிறேன்.​ உணவு கொண்டு வர முடியாத சூழ்நிலையில்,​​ பெரிய ரொட்டி பாக்கெட்டும்,​​ குடிநீரும் வாங்கித் தருகிறேன்.

திருவண்ணாமலை வழித்தடத்தில் பணியாற்றிய போது,​​ ரமண மகரிஷி ஆசிரமப் பகுதியில் சாலையோர முதியோருக்கு நாள்தோறும் 5 பேருக்கு தயிர் சாதம் வாங்கிக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தேன்.​ நான் இவ்வாறு உணவை வாங்கி இலவசமாகக் கொடுப்பதை அறிந்த அந்த உணவு விடுதிக்காரர் மேலும் 5 பொட்டலங்களை இலவசமாகக் கொடுத்தார்.

தெரிந்தவர்களுக்கு உதவி செய்வது பலனை எதிர்பார்ப்பது போல என்பதால்,​​ தெரியாத வயதானவர்களுக்கு உதவி செய்து வருகிறேன்.​ இதேபோல,​​ நான் வசிக்கும் பகுதியில் உள்ள கூர்கா வீட்டு குழந்தைகளுக்கு சீருடை வாங்கிக் கொடுத்தேன்.​ அதோடு,​​ அவர்களது படிப்பிற்கும் என்னால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறேன்.

எனக்கு 54 வயதாகிறது.​ ஆனால்,​​ எந்த நோயும் இல்லாமல்,​​ முழு ஆரோக்கியத்துடன் உள்ளேன்.​ எனது மகன்கள் இருவரும் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பொறியியல் கல்வி பயின்று வருகின்றனர்.

நாள்தோறும் அடையாளம் தெரியாத வயதான ஒருவருக்கு உதவுவதன் மூலம் எனக்கு ஆத்ம திருப்தி கிடைக்கிறது.​ ​நாம் ஒவ்வொருவரும் நமது பெற்றோரைப் போல உள்ள வயதான,​​ ஆதரவற்ற ஒருவருக்கு சேவை செய்வதைக் கடமையாக நினைக்க வேண்டும்'' என்றார் அவர்.

அந்த மூதாட்டியை சென்று பார்த்தோம். மழையில் பாதி கரைந்திருந்த மண் சுவரின் மீது கீற்றுகளால் வேயப்பட்ட ஒரு குடிசையில் குறுக்கி,​​ முடக்கிப் படுத்திருந்தார்.சாலையின் எதிர்புறம் இருந்த வீட்டில் விசாரித்த போது,​​ அந்த மூதாட்டிக்கு திருமணமான ஒரு மகள் மட்டுமே இருக்கிறார்.​ அவரும் வெளியூரில் உள்ள நிலையில்,​​ அவரது உறவினரான நாங்கள் முடிந்தவரை அவரைக் கவனித்துக் கொள்கிறோம் என்றனர்.

ஆதரவற்ற வயதானவர்களுக்கு அரசு தரும் உதவிகளை பெற்றுக்கொண்டு,​​ தனிக் குடிசையில் தைரியமாகத்தான் வாழ்ந்து வருகிறார் இந்த மூதாட்டி. ஒரு ரூபாய் அரிசியையும்,​​ ஆதரவாகப் பேச ஒருவரையும் தேடி அலையும் அந்தக் கண்களுக்கு,​​ ஒரு ரொட்டி பாக்கெட்டும்,ஒரு வினாடி நல விசாரிப்பும் ஆறுதலான அமுதமாகத்தானே இருக்கும்!


நன்றி
தினமணி கதிர் (இரா.மகாதேவன்)



Saturday, August 28, 2010

வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை...

தினமலர் நாளிதழில் சேர்தளம் பற்றிய கட்டுரைக்குப் பின், ஆர்வத்துடன் தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும் தொடர்பு கொண்ட நண்பர்களுக்கு உதவும் வகையில், வரும் 29 ஆகஸ்டு திருப்பூர் வலைப்பதிவர் குழுமம் - சேர்தளம் சார்பில் வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

இடம் : குமரன் ரோடு, அரோமா உணவகம் எதிரில் உள்ள கட்டிட முதல் மாடியில் (பூர்விகா அலைபேசி அங்காடி / அபி ருசி உணவகம் இரண்டுக்கும் இடையில் செல்லும் பாதையில் வரவும்)


View Larger Map

புதிதாய் தமிழ் வலைப்பதிவுகள் எழுத விரும்புபவர்கள் இதில் கலந்து கொண்டு பயனடையலாம்.

ஏற்கனவே, இது குறித்த அறிவிப்பு சேர்தளம் வலைப்பதிவர் உதவிக் குழுமத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.


நிகழ்ச்சி சிறப்படைய ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்தின் சார்பாக மனதார வாழ்த்துகிறோம்.

Friday, August 20, 2010

மெல்லச் சுழலுது காலம் - புத்தக வெளியீட்டு விழா



வலையுலக நண்பர்களுக்கு வணக்கம். கடந்த சில ஆண்டுகளாய் இவ்வலைப்பதிவில் எழுதிவருபவரும், தமிழ்மணம் நிர்வாகிகளுள் ஒருவருமான திரு.இரா.செல்வராசு அவர்கள் எழுதிய சில இடுகைகள் ஒரு அயலகத் தமிழனின் அனுபவக் குறிப்புக்களாய் “மெல்லச் சுழலுது காலம்” என்று ஒரு புத்தகமாக வடலி பதிப்பகம் (ஆகஸ்ட் 26க்குப் பின் இணையத்தில் வாங்க) வழியாக இம்மாத இறுதியில் வெளி வருகிறது. விவரங்கள் கீழே.


நாள்:
26 ஆகஸ்டு 2010 (வியாழன்)
நேரம்: மாலை 4 மணி

இடம்:
சக்தி மசாலா அறை, கொங்கு கலையரங்கம், சம்பத் நகர், ஈரோடு.

வெளியிடுபவர்:
திரு. காசி ஆறுமுகம், கோவை, நிறுவனர், தமிழ்மணம் திரட்டி

பெறுநர்:
பேராசிரியர் R. சண்முகம், பாரதியார் பல்கலைக் கழகம், கோவை.

இவ்விழாவில் வெளியாகும் பிற நூல்கள்:
முதலீட்டுக் கடலில் முத்தெடுத்த வல்லுநர்கள் - முனைவர். கு. பாலசுப்ரமணி
வெளியீடு: திரு. க. பரமசிவம், மகாராஜா குழுமம்.
பெறுதல்: திரு. ப. பெரியசாமி, லோட்டஸ் ஏஜென்சி

Financial Markets & Institutions – Dr. K. Balasubramani & Dr. T. Chandra Kala
வெளியீடு: திரு. கருணாகரன், துணை வேந்தர், அண்ணா பல்கலை. கோவை
பெறுதல்: திரு. அரங்கண்ணல், ஞானமணி குழுமம், ராசிபுரம்

Futures & Options - Dr. K. Balasubramani & Dr. T. Chandra Kala
வெளியீடு: திரு. C. சுவாமிநாதன், துணை வேந்தர், பாரதியார் பல்கலை. கோவை
பெறுதல்: திரு. C. ராஜா, DSP, திருப்பூர்.



Monday, August 9, 2010

வலைப்பதிவு துவங்குதல் - கருத்தரங்குகள்

அழகிய தருணங்கள், ஒரு கவிதையாய், சாரல் மழைத்துளியின் சிணுங்கலாய், மிக எளிதாய்க் கைகூடும் என்பது மற்றுமொருமுறை நிரூபணமாகியிருக்கிறது. என்னையும் இத்தனை நண்பர்களையும் இணைத்து வைத்த வலைப்பக்கத்தை நம்மையொத்த மனிதர்களிடம் திணிப்போம் அல்லது ஊட்டுவோம் என்பது நீண்ட கால ஆசை…












அப்படிப்பட்ட அற்புத தருணம் இன்று கைகூடியது. நண்பர் பதிவர் பழமைபேசியின் ஈரோடு வருகையை வித்தியாசமாக அமைக்க விரும்பிக் கொண்டிருந்த நேரத்தில் இரு வேறு பொறியியற் கல்லூரிகளில் பணிபுரியும் இரண்டு பேராசிரியர்களிடம் தனித்தனியே பேசும் போது, தங்கள் கல்லூரியில் எதாவது ஒரு நிகழ்ச்சிக்கு நண்பர் பழமைபேசியிடம் இசைவு பெற்றுத் தர இயலுமா என வினவ, நான் வலைப்பதிவுகள் குறித்து உங்கள் மாணவர்களிடம் அவரை வைத்து ஒரு கருத்தரங்கம் நடத்தலாம் என்று கூற, ஒரு வழியாக நிகழ்ச்சி கை கூடி வந்தது.

பெருந்துறை கொங்கு பொறியியற் கல்லூரி











ஆனாலும், பொறியியற் கல்வியில் மூழ்கிய மாணவர்களிடம் ஆங்கிலம் அதிகமாய்க் கோலோச்சும் காலத்தில் தமிழ் பதிவுகள் குறித்த கருத்தரங்கம் எந்த அளவுக்கு வெற்றியைத் தன்வசம் கொள்ளும் என்ற சந்தேகம் மனதில் கனத்தைக் கூட்டிக் கொண்டேயிருந்தது.











ஒரு வழியாய் திட்டமிட்டபடி 07.08.2010 காலை பத்து மணிக்கு பெருந்துறை கொங்கு பொறியற் கல்லூரிக்கு சென்றடைந்தோம்.


கணினி தொழில் நுட்பத் தலைவர் முனைவர். ஜெயபதி, கணினி பிரிவுகள் முதன்மைத் துறைத் தலைவர் முனைவர். பாலமுருகன், இந்திய கணினி சமூக அமைப்பு (CSI) ஒருங்கிணைப்பாளர் முனைவர்.கௌசல்யா மற்றும் பேராசிரியை. ஜெயந்தி ஆகியோர் முன்னிலையில் இந்திய கணினி சமூக அமைப்பு (CSI) உறுப்பினர்கள் (கணினி அனைத்துப்பிரிவுகளையும் சார்ந்தவர்கள்) சுமார் 260 பேருக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. நண்பர். பழமைபேசி அவர்கள் முதலில் வெளிநாட்டு கல்வி, வேலை வாய்ப்புகள் குறித்து சிறிது உரையாற்றியபின் தமிழில் வலைப்பக்கங்களின் அவசியம், அதை உருவாக்குதல், அதில் இடுகைகள் மூலம் பங்கேற்பு என்பது குறித்து மிக விரிவாக கருத்தரங்க உரையாற்றினார். பொறியியற் கல்லூரி மாணவர்கள் மத்தியில் தமிழ் வலைப்பதிவுகள் குறித்த விளக்கங்கள் மிகப் பெரிய அதிர்வை ஏற்படுத்தியது.














கருத்தரங்கில் குறிப்பிட்ட சில வலைப்பக்கங்கள், திரட்டிகள், ஈரோடு குழுமம் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. வலைப்பக்கங்களில் என்னுடைய பங்கு என்ற தலைப்பில் நானும் சிறிது உரையாற்றினேன்.


நிகழ்ச்சியில் மிகவும் அசந்து போன துறைத்தலைவர் முனைவர். ஜெயபதி நிகழ்ச்சி நிறைவிற்குப் பின் கொங்கு வளாகத்தில் இயங்கும் கொங்கு பண்பலையில் உடனடியாக ஒரு செவ்விக்கு (பேட்டி) ஏற்பாடு செய்து பழமைபேசி மற்றும் என்னிடம் செவ்வி எடுத்து பதிவு செய்யப்பட்டது. சட்டென திட்டமிட்ட நிகழ்வில் எந்த முன் தயாரிப்புமின்றி செவ்விக்காக கேள்விகளை வீசிய இரண்டு மாணவிகளின் திறமை மிகுந்த வியப்பை ஏற்படுத்தியது.


சென்னிமலை
எம்பிஎன்எம்ஜெ (MPNMJ) பொறியியல் கல்லூரி

நிகழ்ச்சியின் நிறைவில் கொங்கு வளாகத்தில் திளைத்த மகிழ்ச்சியுடன், அடுத்த நிகழ்ச்சியை நடத்த சென்னிமலைக்கு கிளம்பினோம். நிகழ்வு சென்னிமலையில் இருக்கும் எம்பிஎன்எம்ஜெ (MPNMJ) பொறியியல் கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை (ECE) சார்ந்த 263 மற்றும் 30க்கும் மேற்பட்ட பேராசிரியர்களுக்கு நடத்தத் திட்டமிட்டிருந்தோம்.













தாளாளர் திருமதி. வசந்தா சுத்தானந்தன், முதல்வர் (பொறுப்பு) பேரா.சண்முகசுந்தரம், மிகுந்த முன்னேற்பாடுகளுடன் திட்டமிட்டிருந்த துறைத்தலைவர் பேரா. பார்த்திபன், விரிவுரையாளர்கள் திரு.மோகன், திரு. கோபி, திரு. மகேஷ் ஆகியோர் நன்றிக்கு உரியவர்கள்.

உரிய நேரத்தில் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. நண்பர். பழமைபேசி அவர்கள் அந்த மாணவர்களிடமும் வெளிநாட்டுக் கல்வி, வேலை வாய்ப்புகள் குறித்து உரையாற்றிய பின் தமிழ் வலைப்பதிவுகள் குறித்து மிக நேர்த்தியாக, மிக அற்புதமாக, தெளிவாக கருத்துரை வழங்க, ஆங்காங்கே மாணவர்களிடமிருந்து கேள்விக்கணைகள் பறந்தன. மாணவர்களிடையே ஊடுருவி, ஒன்றாய் கலந்து நண்பர் மிக அற்புதமாக நிறைவு செய்தார்













நிகழ்ச்சி தொகுப்புரையை வழங்கிய ஐந்து மாணவ, மாணவியர்களின் தயாரிப்பு மெச்சத் தகுந்த அளவில் இருந்தது. ஒரு மனிதனின் சமூகக் கடமை மற்றும் அதில் என் வலைப்பக்கங்களின் பணி என்ற தலைப்பில் முப்பது நிமிடங்கள் உரை நிகழ்த்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.













கிடைத்த வாய்ப்பினை மிக நேர்த்தியாக பயன்படுத்தி, கனவுகளை வீரியமாகக் கொண்டுள்ள மாணவ சமுதாயத்திடம் நிதானமாக விதைகள் ஆழமாக ஊன்றப்பட்டுள்ளன. அரவணைத்து வளர்ப்போம், நமக்கும் நம் அடுத்த தலைமுறைக்கும் தாய்மொழி சார்ந்த இடைவெளியை கொஞ்சம் கொஞ்சமாய் நிரப்புவோம்.













இரு நிகழ்ச்சிகளும் சிறப்புற நிறைவடைந்த மகிழ்ச்சியோடு இன்றைய பொழுது மிகப் பயனுள்ளதாக நிறைந்தது.

நெஞ்சம் நிறைந்த நன்றிகள் நண்பர் பழமைபேசி, முனைவர், கௌசல்யா மற்றும் பேராசிரியர் பார்த்திபன்.

இந்த நிகழ்ச்சி குறித்து திட்டமிட்டபோது தட்டிக்கொடுத்த எம் ஈரோடு தமிழ் வலைப்பதிவர் குழுமத்திற்கே இந்த மகிழ்ச்சி சமர்ப்பணம்.


___________________________________________________________________

  ©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.

TOPO